வட்டார வழக்கு சினிமா விமர்சனம் : வட்டார வழக்கு கிராமத்து மண் வாசனையுடன் பகை தீர்க்கும் படலம் வசீகரம் | ரேட்டிங்: 3/5

0
120

வட்டார வழக்கு சினிமா விமர்சனம் : வட்டார வழக்கு கிராமத்து மண் வாசனையுடன் பகை தீர்க்கும் படலம் வசீகரம் | ரேட்டிங்: 3/5

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் வட்டார வழக்கு.

இதில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், விஜி, சுப்பிரமணியபுரம் விசித்திரன், ஜெட் பிரசன்னா, முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – இளையராஜா, எடிட்டிங் – வெங்கட்ராஜன், ஒளிப்பதிவாளர் – டோனி சான், சுரேஷ் மணியன், சண்டை – சுதீஷ், பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

மதுரை மேற்கு பகுதியில் உள்ள சமயநல்லூர் கிராமத்துப் பின்னணியில் 1960-களில் பங்காளி குடும்பத்திற்கு இடையே காலம் காலமாக பகை இருந்து வர தலைமுறைகளாக தொடர 1985-ல் செங்கை மாறன் (சந்தோஷ் நம்பிராஜன்) குடும்பத்திற்கும் அவருடைய பங்காளி குடும்பத்திற்கும் இடையே விஸ்வரூபம் எடுத்து உயிர் பலியும் ஏற்படுத்துகிறது. இரு குடும்பத்தினிடையே பழி வாங்க துடிக்கும் இந்த பகையால் எதிரும் புதிருமாக சண்டையிட்டு கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் செங்கை மாறன் முக்கிய பங்காளியான போத்தண்ணனை (விஜய் சத்யா) கொலை செய்து அவரது மகனின் கையையும் வெட்டி விடுகிறார். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் போத்தண்ணன் மனைவி, மகன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பழிக்குப்பழியாக செங்கை மாறனை கொல்ல திட்டமிட்டு தகுந்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள். இதனிடையே செங்கை மாறன் உடல் நலம் சரியில்லாத தந்தையை அன்பாக பார்த்துக் கொள்ளும் தொட்டிச்சியை (ரவீனா ரவி) கண்டதும் காதல் மலர இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இ;ந்நிலையில் தொட்டிச்சி வேலை பார்த்த இடத்தில் ஏற்படும் அசம்பாவிதம் அவளை மனஉளைச்சலுக்கு உண்டாக்குகிறது. குழப்ப நிலையிலும், வேதனையிலும் இருக்கும் தொட்டிச்சி காணாமல் போகிறாள். காதலி தொட்டிச்சியை செங்கைமாறன் தேடி கண்டுபிடித்தாரா? தொட்டிச்சி என்ன ஆனார்? தொட்டச்சியை பார்த்த செங்கைமாறன் என்ன முடிவு எடுத்தார்? போத்தண்ணன் குடும்பத்தினர்; செங்கை மாறனை பழிக்குபழி வாங்கினார்களா? போத்தண்ணன் குடும்பத்தை துவம்சம் செய்யும் மறைமுக எதிரி யார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

மதுரை மண் கமழும் வட்டார மொழி பேசி ஊரையே அதிர வைக்கும் இளைஞன்; செங்கை மாறனாக சந்தோஷ் நம்பிராஜன் வாய் சண்டை வம்பு சண்டை என்று சண்டித்தனம் பண்ணிக்கொண்டு எதர்கெடுத்தாலும் கோபத்துடன் புருவத்தை உயர்த்தி மிரட்டும் பார்வை, மீசையை முறுக்கி சண்டைக்கு இறங்குவதும், ரவீனாவை பார்த்தவுடன் ஏற்படும் மாற்றம் காதலாக மாறுவதும், விபரீத முடிவு எடுக்கும் ரவீனாவை பார்த்து கதறி தவிப்பதும், அதன் பின் அவருக்கு ஏற்படும் அதிர்ச்சி கலந்த சம்பவம் என்று படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். எவ்வளவு தான் தைரியசாலியாக இருந்தாலும் மனதளவில் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை தத்ரூபமான நடிப்பால் மிகையில்லாமல் செய்துள்ளார்.

ரவீனா ரவி “தொட்டிச்சி”யாக கண்களால் காதலை சொல்லி அழகு கிராமத்து தேவதையாக தன் செயல்களால் கவர்ந்து, இறுதியில் கண் கலங்க செய்து விடுகிறார்.

விஜய் சத்யா “போத்தண்ணன்”, பருத்திவீரன் வெங்கடேஷ் “தேசிங்கு”,”கண்ணு சேர்வை”யாக விஜி, சுப்பிரமணியபுரம் விசித்திரன் “தகரு”,‘பூபாண்டி”யாக ஜெட் பிரசன்னா, முருகேசன் “தொட்டால்”,ஈஸ்வரன் “ஏனல்” என்று கிராமத்து பெயர்களுக்கு ஏற்றாற்போல் கிராமத்து மனிதர்களாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் அழகு சேர்த்து இன்னிசையால் காதல் காட்சிகளுக்குள்; சின்னச் சின்னப் பாடல்களின் ஒருங்கிணைப்பால் படத்தை மிளிர செய்துள்ளார்.

60களின் காலகட்டம், 80களின் காலகட்டத்தின் வித்தியாசத்தையும், கிராமத்து பகையாளி சண்டையையும், ஆக்ஷன்; காட்சிகளையும், ரேக்லா ரேஸ், டீக்கடை தந்தை மகன் சண்டை, காதல் காட்சிகளையும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் காட்சிக் கோணங்களில் கல்லுப்பட்டி கிராமத்தை மண் மாறாமல் கொடுத்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர்கள் டோனி சான் மற்றும் சுரேஷ் மணியன்.

சுதீஷ் சண்டை காட்சிகள் ஆக்ரோஷத்தை கிராமத்து எளிமையுடன் காட்டியுள்ளார்.

வெங்கட்ராஜனின் எடிட்டிங் கச்சிதம்.

90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 80களில் நடப்பது போல்  வட்டார வழக்கு படத்தை இயக்கியிருக்கிறார் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை மையப்படுத்தி பகையாளி சண்டை, 80களின் பிற்பகுதியில் காதலை விவரிக்கும் கதையில் வசனத்தை விட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம்.வட்டார வழக்கு படத்தில் பழிவாங்கும் கதைக்காக,  இதில் துடிப்பான காட்சிகள் மூலம் பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்று இணைத்து கிராமத்து நெடியுடன் கலந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் உணர்வுகள் இருந்தாலும் காதல் வசனங்கள் இல்லாமல் காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் ஒரு புதுவிதமான காதல்  அனுபவத்தை கண்களுக்கு குளிர்ச்சியாக காட்டியிருக்கிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். சில இடங்களில் வசனங்கள் தெளிவாக புரியும்படி கொடுத்திருக்கலாம்.இறுதிக் காட்சியில் விறுவிறுவென்று கதை நகர்ந்து, இருவேறு கோணங்களில் பழி வாங்கும் நேர்த்தியை கையாண்டு சில நொடிகளில் திருப்புமுனை ஏற்படுத்தி திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் கண்ணுசாமி ராமச்சந்திரன். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் வட்டார வழக்கு கிராமத்து மண் வாசனையுடன் பகை தீர்க்கும் படலம் வசீகரம்.