லாக்கர் விமர்சனம் : லாக்கர் சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் இரட்டை குழல் துப்பாக்கி போல் சீறிப் பாயும் தங்கமான மனதை திருடிச் செல்லும் | ரேட்டிங்: 3.5/5

0
166

லாக்கர் விமர்சனம் : லாக்கர் சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் இரட்டை குழல் துப்பாக்கி போல் சீறிப் பாயும் தங்கமான மனதை திருடிச் செல்லும் | ரேட்டிங்: 3.5/5

நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் லாக்கர் படத்தை ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து இயக்கி உள்ளார்கள். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஸ் வெளியிடுகிறார்.

இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம், அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்ய அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கணபார்த்தி. மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.

விக்னேஷ் சண்முகம் தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் மாட்டிக் கொள்ளாதவாறு செய்வதில் கில்லாடிகள். தேர்தல் செலவிற்காக வைத்திருக்கும் நாற்பது லட்சத்தை அரசியல்வாதியிடமிருந்து லாவகமாக திருடி அதை வைத்து சொகுசாக வாழ்கின்ற வேளையில், அந்த பணத்தை எதில் முதலீடு செய்து நிறைய பணம் அடிக்கலாம் என்ற யோசனையில் இருக்கின்றனர். அதனால் பங்கு சந்தையை மையமாக வைத்து செல்வந்தர்களை அணுகி முதலீடு செய்ய வைக்கின்றனர். இதனிடையே நிரஞ்சனியை பார்த்தவுடன் காதலில் விழும் விக்னேஷ், பின்னர் சண்டைக்குப்பின் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இந்த சமயத்தில் ஆடிட்டர் ஒருவரிடம் ஒரு கோடி முதலீடு செய்ய வைக்கும் விக்னேஷ், அவரை ஏமாற்ற நினைக்கும் வேளையில், நிரஞ்சனிக்கு இந்த விஷயம் தெரிந்து விக்னேஷின் காதலை முறிக்கிறார். இதனால் மனமுடையும் விக்னேஷ் நிரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்டு திருடுவதை விட்டு விடுவதாக சொல்லி, ஒரு கோடி பணத்தையும் ஆடிட்டரிடம் திருப்பி கொடுத்து விடுகிறார். அதன் பின் காதலர்கள் ஒன்று சேர விக்னேஷ் நல்ல வேலையை தேடிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் பெரும் கோடீஸ்வரரான நிவாஸ் ஆதித்தனை பார்க்கின்றனர். நிவாஸை பார்த்தவுடன் நிரஞ்சனி அதிர்ச்சியில் விக்னேஷிடம் அவனால் பாதிக்கப்பட்ட தன் குடும்பத்தை பற்றி சொல்கிறார். நிலத்தை அபகரித்து தன் தந்தை இறப்பதற்கு காரணமான நிவாஸை பழி வாங்க வேண்டும் என்று சொல்கிறார். முதலில் மறுக்கும் விக்னேஷ் பின்னர் காதலிக்காக சம்மதித்து நிரஞ்சனியுடன் கூட்டு சேர்ந்து நிவாஸ் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றார்.இவர்களால் தங்கத்தை கொள்ளை அடிக்க முடிந்ததா? இல்லையா? நிரஞ்சனி யார்? அவரின் பின்னணி என்ன? யாரை நம்பி மோசம் போனார்? இறுதியில் தங்கம் யார் கைக்கு கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்னேஷ் சண்முகம் சில படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள், வெப் தொடர்களில் நடித்தவர் இந்த படத்தில் கதாநாயகனாக தடம் பதித்திருக்கிறார். இப்படத்தில் மற்றவர்களை நம்பவைத்து ஏமாற்றும் நபராக அபாரமாக நடித்துள்ளார். முதலீட்டில் நம்பிக்கை வைப்பதற்காக தன் பணத்தை இழந்தாலும், விடாமுயற்சியோடு எடுக்கும் செயலால் பெரிய முதலீடு கிடைத்தாலும் அதை தக்க வைக்க முடியாமல் கை விட்டு போகும் நேரத்தில் காதலுக்காக நல்லவனாக மாற முயற்சி செய்யும் போதும், பின்னர் அதே காதலுக்காக திருட முற்படுவதும்,  சாதுர்யமாக கொள்ளையடித்த பிறகு ஏற்படும் அதிர்ச்சிகரமான சம்பவத்தால் நிலை தடுமாறி அடி வாங்கும் போதும், இறுதிக் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் என்று படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆல்பங்களில் நடித்திருக்கும் புதுமுகம் அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் முதல் படத்திலேயே வலுவான கதாநாயகியாக படம் முழுவதும் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து அழுத்தமாக பங்களிப்பை கொடுத்து கொஞ்சம் நெகடிவ் ரோலாக மாறும் நேரத்தில் நேர்த்தியாக கையாண்டிருக்கும் விதம் அருமை அதுமட்டுமல்ல அழகாகவும் வந்து போகிறார்.

வில்லனாக நிவாஸ் ஆதித்தன் பாதி படத்திற்கு மேல் வந்து கொஞ்சம் மிரட்டி விட்டு வில்லத்தனத்தை காட்டுவதற்குள் படம் முடிந்தே விடுகிறது.

சுப்ரமணியன் மாதவன் மற்றும் பலர் படத்திற்கு தங்கள் உழைப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் ஆகியோர் பாடல் வரிகளிக்குகேற்றவாறு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசை கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

காரிலிருந்து பணத்தை கடத்தும் காட்சிகள், மதுபான பார்களில் நடக்கும் சம்பவங்கள், பாடல் காட்சிகள், திருட்டு சம்பவங்கள் என்று சுறுசுறுப்பாக தன் காட்சிக்கோணங்களால் அசத்தலாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீகாந்த் கணபார்த்தி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

வசதியாக வாழ நினைத்து கொள்ளையடிக்கும் ஒருவனை சாமார்த்தியமாக ஏமாற்றும் கில்லாடிப்பெண் அவனை வசமாக சிக்க வைத்து தப்பிக்க நினைக்கும் கதைக்களத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து முதல் பாதி காதல், நட்பு, பங்கு முதலீடு என்று நிதானமாக செல்ல இரண்டாம் பாதியில் தங்கக்கடத்தல் சம்பவம் மூலம் வேகமெடுத்து பல திருப்பங்களை கொடுத்து இறுதியில் லாக்கர் என்ற டைட்டில் ரோலின் முக்கியத்துவத்தை திறம்பட கையாண்டு முதல் படத்திலேயே வெற்றிக்கான முத்திரை பதித்துள்ளனர் இரட்டை இயக்குனர்களான ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன். முக்கியமான காட்சிகள் எல்லாம் விறுவிறுவென முடிந்து விடுவதால் லாஜிக் இல்லா மேஜிக் செய்து சுவாரஸ்த்துடன் பூர்த்தி செய்துள்ளனர்.

நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் லாக்கர் சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் இரட்டை குழல் துப்பாக்கி போல் சீறிப் பாயும் தங்கமான மனதை திருடிச் செல்லும்.