ராஜாகிளி சினிமா விமர்சனம் : ராஜா கிளி சொகுசு வாழ்க்கையால் சீரழிந்த சோக கிளி | ரேட்டிங்: 3/5

0
417

ராஜாகிளி சினிமா விமர்சனம் : ராஜா கிளி சொகுசு வாழ்க்கையால் சீரழிந்த சோக கிளி | ரேட்டிங்: 3/5

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ராஜா கிளி படத்தை இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா.

இதில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண​;ட்ரூஸ், மாலிக், கிங் காங் மற்றும் பலர் நடித்துள்ளனர்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:- ஓளிப்பதிவு : கேதார்நாத் – கோபிநாத், பிஜிஎம்: சாய் தினேஷ்,ஒலிப்பதிவாளர்: தபஸ் நாயக், படத்தொகுப்பாளர்: சுதர்சன் ஆர், கலை இயக்குனர்: வைரபாலன் – வீரசமர், நடனம்: பிருந்தா – சாண்டி, ஸ்டண்ட் இயக்குனர்: சில்வா மாஸ்டர், ஸ்டில்ஸ்: மிலன் சீனு, ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார், விளம்பர வடிவமைப்பாளர்: சிந்து கிராஃபிக்ஸ், மேலாளர்: கே எச் ஜெகதீஷ், நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் என், பிஆர்ஒ – ஜான்.

அன்பகம் என்ற மனநல காப்பகத்தை நடத்தி வரும் சமுத்திரகனி, வழியில் மனநலம் பாதித்த நபரை பார்த்து அழைத்து வருகிறார். அவருக்கு நல்ல உடை, உணவு வழங்கி தன் காப்பகத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் யார் என்ற கேள்வி எழும் போது, அந்த நபர் வைத்திருக்கும் பழைய துணிகளுக்கு நடுவே பழைய டைரி இருக்க அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி அந்த நபர் எழுதி வைத்திருப்பதை சமுத்திரகனி படிப்பது போல் படம் ஆரம்பமாகிறது. புகழ்பெற்ற முருகப்பா குழுமத்தின் உரிமையாளர், தொழிலதிபர் முருகப்பா சென்ராயான். அவருக்கு மனைவி தெய்வானை(தீபா) மற்றும் ஒரு மகன் உண்டு. அவர் தொடங்கிய தொழில்கள் எல்லாம் வெற்றி பெற்று பேரும் புகழும் கிடைத்தாலும், தன் மனைவி தெய்வானையின் சந்தேக புத்தியால் மன அமைதி இல்லாமல் இருக்கிறார். இந்த சமயத்தில் புதிய ஜவுளிக்கடை தொடங்க அங்கு பணி புரியும் திருமணமான வள்ளிமலர் மீது ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு விசாகா என்ற கல்லூரி மாணவியை ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள முற்படும் போது பிரச்சனை ஆரம்பமாகிறது. விசாகா முதலில் சம்மதித்தாலும்,பின்னர் அவரை வெறுத்து நடன ஆசிரியர் ஆல்பர்ட்(க்ரிஷ்) மீது காதல் வயப்பட்டு முருகப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு சந்தேகப்படும் கணவர் ஆல்பர்ட் விசாகாவை கொடுமைபடுத்த, முருகப்பா அவர்களை சமாதானப்படுத்தி பணம் கொடுக்கிறார். ஆனாலும் ஆல்பர்ட் பணத்தாசையால் மீண்டும் விசாகாவை துன்புறுத்த, அவனை தீர்த்துக்கட்ட சொல்கிறார் முருகப்பா. அதன் பின் ஒரு மலை பிரதேசத்தில் ஆல்பர்ட் கொலை செய்யப்பட்டு கிடக்க, காவல்துறை முருகப்பாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.உடல் நலக்குறைவு ஏற்படும் முருகப்பாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர் அங்கே தொழிலை மீண்டும் நடத்த, முருகப்பா மகனிடம் சொத்து முழுவதையும் எழுதி கொடுக்கிறார். அதன் பின் முருகப்பா என்ன ஆனார்? ஏன் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் திரிந்து கொண்டிருந்தார்? போலீஸ் முருகப்பாவை மீண்டும் கைது செய்தனரா? உண்மையான கொலையாளி யார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கதை,வசனம்,பாடல்கள், இசை மற்றும் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்; தம்பி ராமையா. தொழிலதிபர் முருகப்பா சென்ராயனாக தம்பி ராமையா மன நலம் பாதிக்கப்பட்டு பரிதாபத்துடன் திரிவதாகட்டும்,திருமணத்திற்கு புறம்பான செயல்கள், பணக்கார திமிரில் இளம் பெண்களுடன் ஆட்டம் போடுவதாகட்டும், சிக்கலில் மாட்டும் போது பரிதவிப்பதும், மகனின் புறக்கணிப்பு, ஆதாயம் அடைந்த அனைவரும் உதாசீனப்படுத்த மறைந்து வாழும் வாழ்க்கை அதனால் பாதிப்படைந்து இறுதியில் ஆதரவு அளித்து அரவணைக்கும் மனமாற்றமடைந்த மனைவியிடம் சேருவது, முடிந்த வரை நடனத்திலும் திறமையை காட்டி சில இடங்களில் மிகையாக செய்திருந்தாலும், தன் கதாபாத்திரத்திற்கேற்ற பங்களிப்பை நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

சமுத்திரக்கனி செல்வந்தரை காப்பாற்றி பிரிந்த குடும்பத்துடன் சமரசம் செய்ய எடுக்கும் முயற்சியில் தோல்வி கண்டு, இறுதியில் மனைவியிடம் செல்வந்தரை ஒப்படைத்து விட்டு செல்லும் மனிதநேய மிக்க மனிதராக வந்து போகிறார்.

தீபா ஷங்கர் செல்வந்தரின் சந்தேக புத்தியுடைய மனைவியாக அதிக உணர்ச்சி வசப்பட கூடிய கதாபாத்திரம். இவரின் பயமே அதனை உண்மையாக்கி விட, இறுதியில் தன் தவறை உணர்ந்து கணவனை அரவணைக்கும் காட்சி சிறப்பு.

எதிர்பாராத திருப்பத்தை தரும் க்ளைமாக்ஸில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் சுருக்கமான கேமியோ கதைக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பை தருகிறது.

இவர்களுடன் பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண்ட்ரூஸ், மாலிக், கிங் காங், க்ரிஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

ஓளிப்பதிவு : கேதார்நாத் – கோபிநாத், பிஜிஎம்: சாய் தினேஷ், படத்தொகுப்பாளர்: சுதர்சன் ஆர், கலை இயக்குனர்: வைரபாலன் – வீரசமர், நடனம்: பிருந்தா – சாண்டி, ஸ்டண்ட் இயக்குனர்: சில்வா மாஸ்டர் என்று அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் இயக்குனரின் எண்ணப்படி நிறைவாக காட்சிகளை அமைத்துள்ளனர்.

“ராஜா கிளி” திரைப்படம் ஒரு மறைந்த தொழில் அதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து கற்பனை கலந்த கதைக்களத்தில் தம்பி ராமையாவால் வடிவமைத்து, அவரது மகன் உமாபதி ராமையா இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம். நம் ஒழுக்கத்தை வைத்தே  நாம் யார் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணியையும், செயல்திறனையும் பாதிக்கிறது என்பதைச் சொல்லும் படம். குடும்ப வாழ்க்கை, தொழில் அனைத்தையும் பெண்ணாசையால் ஒரே நொடியில் இழந்து பரிதவித்து அனாதையாக கேட்பாரற்று திரிய நேரிடும் செல்வந்தர், தன் மேல் ஏற்பட்ட கொலைபழியிலிருந்து மீள்வது பற்றிய திரைக்கதையை தன் முதல் படத்திலேயே தன் தந்தையை வைத்து துணிச்சலாக இயக்கியிருக்கும் உமாபாதி ராமையாவிற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ராஜா கிளி சொகுசு வாழ்க்கையால் சீரழிந்த சோக கிளி.