மிஷன் சாப்டர் 1 சினிமா விமர்சனம் : ‘மிஷன் சாப்டர்1’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் படத்தை பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3.5/5
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘மிஷன் சாப்டர்1’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்
இதில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பாரத் போபண்ணா, இயல் , விராஜ், அலெக்சாண்டர் கேசி, வெய்ன் ட்ரூ, கஜிநாத் ஜெயக்குமார், சாமி ஜோனாஸ் ஹீனி , நிக் கான், சிஜோ மங்களசேரில், ஜேசன் ஷா, டைகோரா ஸ்மித் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – கேவெமிக் யு ஆரி – சந்தீப் கே விஜய், படத்தொகுப்பு -ஆண்டனி, கலை இயக்கம் -வசந்த் சரவணன் , ஆடை வடிவமைப்பு – ருச்சி முனோத், ஒப்பனை – பட்டணம் ரஷீத், கதை திரைக்கதை – மகாதேவ், வசனம் – விஜய், சண்டைக்காட்சி – ஸ்டண்ட் சில்வா, ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ்: ஜி.கே.எம். தமிழ் குமரன், தயாரிப்பாளர்கள்: எம். ராஜசேகர், எஸ். சுவாதி,இணை தயாரிப்பு: சூர்ய வம்சி பிரசாத் கொத்தா-ஜீவன் கொத்தா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, டிஒன் ரேகா
மிஷன் அத்தியாயம் 1 கதைக்களம், குணசேகரன் (அருண் விஜய்) ஒரு விபத்தில் சிக்கும் மகளுக்கு உயர் சிகிச்சை தர தனது மகள் சனாவுடன் (பேபி இயல்) நோயைக் குணப்படுத்த குழந்தையுடன் லண்டன் செல்கிறார். லண்டன் மருத்தவ சிகிச்சைக்கு தன் நண்பன் சிபாரிசின் பேரில்; 30 லட்சம் பரிமாற்றத்தை ஹவாலா மூலம் பரிவர்த்தனை செய்து விட்டு செல்கிறார். லண்டன் மருத்துவமனையில் நான்சி குரியன் (நிமிஷா சஜயன்) குணசேகரனுக்கு உதவி செய்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் குணசேகரனின் பர்ஸை திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்க காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். அங்கே அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த சிறையின் ஜெயிலராக சாண்ட்ரா ஜேம்ஸ் (எமி ஜாக்சன்) இருக்கிறார். அந்த சமயத்தில் சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகிறது. இதற்கு காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி அங்கே நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தையும் மிஷன் தஸரா என்ற திட்டத்தையும் இந்திய அரசு அறிந்து விட்டதை தெரிந்த தீவிரவாதிகள் தங்கள் பிளானை லண்டனிலிருந்து செயல்பட நினைக்க அங்கே செல்லும் தீவிரவாதிகள் மூன்று பேர் லண்டன் போலீசிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் இந்த சிறையில் இருப்பதால் உடனடியாக தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி தீவிரவாதிகள் லண்டனுக்குச் செல்கின்றனர். அதனால் தீவிரவாதிகள் ஜெயிலை ஹேக் செய்து தங்கள் கூட்டாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். இவர்களின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் குணசேகரன் அவர்களை தடுக்க நினைக்கிறார்.உண்மையில் குணசேகரன் யார்? இவருக்கும் தீவரவாதிக்கும் என்ன தொடர்பு? என்ன காரணம்? குணசேகரன் ஜெயிலர் சாண்ட்ரா ஜேம்ஸ்{டன் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்? இறுதியில் தீவிரவாதிகளை பிடிக்கும் மிஷனும், குழந்தையை காக்கும் மிஷனும் இரண்டும் வெற்றி பெற்றதா? என்பதே மீதி கதை.
அருண் விஜய் ஒரு அற்புதமான நடிப்பையும் ஒரு பொறுப்பான தந்தையாக நம்பிக்கையூட்டும் விதத்தில் நடித்துள்ளார். முழுப் படத்தையும் தோளில் ஏற்றி, ஆக்ஷன் காட்சிகளிலும் ஜொலிக்கிறார். இதன் வெளிப்பாடும் கடின உழைப்பும் படத்தில் தெரிகிறது. இடைவேளையில் தான் யார் என்பதை சொல்லும் ஃபிளாஷ்பேக் காட்சி படத்திற்கு திருப்புமுனை தருகிறது. விஜய் இயக்கத்தில் முதன் முறையாக நடித்திருக்கும் அருண்விஜய் அதற்கான மெனக்கெடல்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
நிமிஷா சஜயன் முக்கியத்துவம் இல்லையென்றாலும் எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார் மற்றும் எமி ஜாக்சன் முதலில் அதிரடி நாயகியாக களமிறங்கி, அருண் விஜய் பிரவேசம் ஏற்பட்டவுடன் அமைதியாகி விடுகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நிறைவாக செய்துள்ளார்.குழந்தை இயல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான தாக்கத்தை உருவாக்குகிறார்.
மற்றும் அபி ஹாசன், பாரத் போபண்ணா, விராஜ், அலெக்சாண்டர் கேசி, வெய்ன் ட்ரூ, கஜிநாத் ஜெயக்குமார், சாமி ஜோனாஸ் ஹீனி , நிக் கான், சிஜோ மங்களசேரில், ஜேசன் ஷா, டைகோரா ஸ்மித் என்று உள்நாட்டு வெளிநாட்டு நடிகர்களின் ஒத்துழைப்பு படத்திற்கு பலமாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல் இல்லாமல் கவனிக்க வைக்கிறது.
படம் முழுவதும் சிறை செட்டில் நடப்பதும், கொஞ்சம் லண்டன் மாநகரத்தின் தெருக்கள், மருத்துவமனை என்று மீதிப் படத்தையும், ஆக்ஷன் காட்சிகளையும் நன்றாக செய்துள்ளனர் சந்தீப் கே. விஜய் மற்றும் கேவெமிக் யு ஆரி.
ஆண்டனியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். வசனம் – விஜய், சண்டைக்காட்சி – ஸ்டண்ட் சில்வா ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.
எப்பொழுதும் போல் முஸ்லீம் தீவிரவாதிகளை பிடிக்கும் ஜெயிலர் கதையில் அப்பா மகள் பாசத்தை இணைத்து லண்டனில் நடப்பது போல் திரைக்கதை எழுதியிருக்கிறார் மகாதேவ். இயக்குனர் விஜய் இந்தப் படத்தில் நிறைய திருப்பங்களையும் தந்திரங்களையும் புகுத்த முயற்சித்துள்ளார், அதனை நேர்த்தியாக கையாண்டு ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் களத்துடன் நாட்டுப்பற்று அம்சங்களுடன் அனல் பறக்க கொடுத்திருப்பதில் தனித்து நிற்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘மிஷன் சாப்டர்1’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் படத்தை பார்க்கலாம் ரசிக்கலாம்.