மாமன்னன் சினிமா விமர்சனம் : மாமன்னன் சுழற்றி அடிக்கும் சாதி அதிகார அரசியலில் தாக்குப்பிடித்து வெற்றி கண்டால் சாதாரண ஒடுக்கப்பட்ட மாமனிதனையும் பதவியுடன் மகுடம் சூட்டி தலைவணங்கும் தற்கால  அரசியல் | ரேட்டிங்: 4/5

0
864

மாமன்னன் சினிமா விமர்சனம் : மாமன்னன் சுழற்றி அடிக்கும் சாதி அதிகார அரசியலில் தாக்குப்பிடித்து வெற்றி கண்டால் சாதாரண ஒடுக்கப்பட்ட மாமனிதனையும் பதவியுடன் மகுடம் சூட்டி தலைவணங்கும் தற்கால  அரசியல் | ரேட்டிங்: 4/5

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மாமன்னன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் ரெட்டி, அழகம் பெருமாள், கீதா கைலாசம், விஜயகுமார், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கவனிக்க, செல்வா ஆர்.கே எடிட் செய்துள்ளார். பாடல்கள் யுகபாரதி. கலை குமார் கங்கப்பன். மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆளும் காட்சியில் மந்திரியாக இருந்தவர் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் (அழகம் பெருமாள்), அவரிடம் தொண்டனாக பணியாற்றுகிறார் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மன்னு என்கிற மாமன்னன் (வடிவேலு). காசிபுரத்தில்;  சாதி வேறுபாட்டால் பல கட்டுப்பாடுகள் இருக்க, குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்க, குளிக்க கூடாது என்று முட்டுக்கட்டை போடுகின்றனர். இதைக் கண்டு கொள்ளாத மாமன்னன் மகன் அதிவீரன் மற்றும் மூன்று நண்பர்களும் கிராமத்தில் இருக்கும் பெரிய குளத்தில் குதித்து விளையாடுகின்றனர். இதை பார்க்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிறுவர்களை கல்லால் அடிக்க அதில் மூன்றுபேர் அங்கேயே இறந்து விடுகின்றனர். இதில் வடிவேலு மகன் மட்டும் தப்பித்து வீடு வந்து சேர்ந்து நடந்தவற்றைச் சொல்கிறான். இதைக் கேள்விபடும் இரு சமூகத்தினரும் கொதிப்படைகின்றனர். இதனால் சுந்தரம் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கவும், தன் சமூகத்தினரை காப்பாற்றவும் மாமன்னனை அழைத்து கட்சியில் பதவி இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்று கூறி சமாதானம், சமரசம் பேசி அனுப்பி விடுகிறார்.  முதலில் தயங்கும் வடிவேலு பின்னர் அந்தக் கட்சியில் படிப்படியாக உயர்ந்து பதவி கிடைத்தபின் சாதிக்கலாம் என்று நினைத்து அமைதி காக்கிறார். ஆனால் மகன் அதிவீரன் தந்தையின் ஜாதி அடக்குமுறை செயலை மறக்காமல் பதினைந்து வருட காலம் அவருடன் பேசாமல் இருந்து விடுகிறான்.

அதன் பின்னர் அதிவீரன் பட்டதாரியாகி அடிமுறை கலையின் ஆசானாக உருவெடுத்து, தன்; இனத்தின் அடையாளமாக கருதும் பன்றி வளர்ப்பதை விட்டு விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.சுந்திரத்திற்கு இரண்டு மகன்களில் மூத்தவன் (சுனில் ரெட்டி) கல்வி நிறுவனத்தையும், இளையவன் (பகத் பாசில்) அரசியலில் ஈடுபடுகின்றனர். சேலம் மாவட்டம் காசிபுரம் தொகுதியில் ஆளும் கட்சியான சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகிறார் மாமன்னன் (வடிவேலு). அதே கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராகிறார் ரத்னவேல் (பகத் பாசில்).

இதனிடையே அதிவீரனின் கல்லூரி தோழி லீலா(கீர்த்த சுரேஷ்) முற்போக்கு எண்ணம் கொண்டவர். அனைத்து மாணவர்களுக்கும் லீலா இலவசமாக பயில கல்வி பயிற்சி மையத்தை நடத்தி வர, இதற்கு எதிர்பு கிளம்ப, அதனால் அதிவீரன் நடத்தும் அடிமுறை கூடத்திலேயே பயிற்சி வகுப்புக்களை தொடர்;ந்து நடத்துகிறார். இதனை கேள்விப்படும் மறைந்த சுந்தரத்தின் மூத்த மகன் பயிற்சி மையத்தை அடித்து நொறுக்குகிறார். இதனால் அதிவீரனும், லீலா மற்றும் நண்பர்கள் சுந்தரத்தின் மூத்தமகனின் கல்லூரி வளாகத்தை அடித்து நொறுக்குகின்றனர்.இதற்கு சமரசம் பேச சுந்திரத்தின் இளைய மகன் ரத்னவேல் அதிவீரன் மற்றும் மாமன்னனை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு அதிவீரன் தன் தந்தைக்கு உரிய மரியாதை கொடுக்காத ரத்னவேலுவை அடிக்க பெரும் பிரச்சனையாக உருவெடுத்து அதன் பின்னர் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்னையாக மாறுகிறது. அதன் பின்னர் ஆளும் கட்சி முதல்வர் தலையீட்டு ரத்னவேலை அமைதியாக இருக்கச் சொல்ல, இதனை விரும்பாத ரத்னவேல் எதிர் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் மாமன்னனை தோற்கடிக்க வியூகம் அமைக்கிறார். அதன் பின்னர் மாமன்னனையும், அதிவீரனையும் கொல்ல திட்டமிடுகிறார்.இந்த அனல் பறக்கும் அரசியல் களத்தில் வென்றது யார்? தோற்றது யார்? ரத்னவேலுவால் மாமன்னனை வீழ்த்த முடிந்ததா? ஜாதி பிரச்னையும் கலவரமும் ஒய்ந்ததா? இறுதியில் அதிவீரன் தன் தந்தை மாமன்னனுக்கு உரிய மரியாதை, கௌரவம், உரிமையை மீட்டு கொடுத்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

வடிவேலு நகைச்சுவை மன்னன் என்ற பிம்பத்தை உடைத்து தன்னால் குணச்சித்திர வேடங்களையும் தாங்கி பிடித்து மாமன்னனான திகழ முடியும் என்பதை நிரூபித்திருக்கும் முதல் படம். மன்னு என்ற பெயரில் தன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை காக்க முடியாமல் தவிக்கும் வடிவேலு தன் மகனால் தன் மதிப்பை உணர்ந்து மாமன்னன் என்ற உருமாற்றத்தை அழகாக செய்துள்ளார். தன் மகன் அடிபட்டு இருக்கும் நிலையில் மற்ற சிறுவர்கள் இறந்திருக்க அந்த சமயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தவிப்பு, மலைஉச்சியில் நின்று தன் ஆற்றாமையை நினைத்து அழும் காட்சியிலேயே அதிர வைத்துவிடுகிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் வடிவேலுவிடம் மனம் மாற்றம் ஏற்பட்டு தன் மகனுடன் தோள் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் கம்பீரமாக இடைவெளிக்குப் பிறகு, அவர் தனது குணாதிசயங்கள் எதையும் இழக்காமல் முற்றிலும் மாறுபட்ட ஆளுமையாக மாறுவது தான் சிறப்பு. படத்தில் தன் காந்த குரலால் சில பழைய நாட்டுப்புறப்பாடல்களை பாடியும் அசத்தியுள்ளார். குறிப்பாக இடைவேளைக் காட்சிக்கு முன்பாக பட்டியலினத்தில் ஒரு தொண்டனாக தொடங்கி ஒரு சட்டமன்ற உறுப்பினராக வளர்ந்த பின்பும், அதாவது அதிகாரம் என்ற ஒன்று கையில் இருந்தும் சாதிய கொடுமையும், தீண்டாமையும் எப்படி துரத்துகிறது என்பதை வடிவேலு உணர்த்திய விதம் அப்ளாஸ் அள்ளுகிறது.

உதயநிதி அதிவீரனாக, அமைதியும், அடங்கி போகாத குணமும், தருணம் வரும் வரை காத்திருக்கும் கழுது போல தன் இருப்பை இப்படத்தில் செயல்படுத்தியிருக்கிறார். மரியாதை, உரிமை கிடைக்காத இடத்தில் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுக்கும் திமிர வைக்கும் கோபத்துடன் படத்தில் அதகளம் பண்ணியிருக்கிறார். இவர்  தந்தைக்கு குரல் கொடுத்து அநீதிக்கு எதிராக காட்டும் எதிர்ப்பு தான் படத்தின் ஒன்லைன் கதை படத்தின் டெர்னிங் பாயிண்ட்.

ரத்னவேலாக பகத் பாசில் அசுர நடிப்பில் அசுரத்தனமான அடங்காத வில்லனாக பின்னியெடுக்கிறார். தன் அதிகார ஜாதிவெறியால் அவர் தனது கண்களாலும் முகபாவங்களாலும் உடலைப் பொருட்படுத்தாமல் தன் சொந்த அண்ணன் உட்பட அனைவரையும் பயமுறுத்தி மிரட்டுகிறார். தன்மூர்க்க மனதுடன் வெறிபிடித்த மிருகம் போல் சுயநலம், ஜாதி அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்லும் வில்லனாக ஆக்ரோஷத்தை காட்டியுள்ளார்.

லீலாவாக கீர்த்தி சுரேஷ் படத்தில் தென்பட்டாலும் மற்ற கதாபாத்திரங்களின் ஆதிக்கத்தில் கரைந்து போய் விடுகிறார்.வடிவேலுவின் மனைவியாக கீதா கைலாசம், பகத் மனைவியாக ரவீனா ரவி, அழகப் பெருமாள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசை படத்தின் அனைத்து காட்சிகளின் உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு உத்தரவாதத்தை கொடுத்துள்ளார்.படத்தில் யுகபாரதியின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகி இருந்தாலும் காட்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதை தடையாக இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துக்கொள்கிறார். இந்த படத்தின் இன்னொரு தொழில்நுட்ப மாமன்னன் ஏ.ஆர்.ரஹ்மான்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு பிரம்மாண்ட விருந்து படைத்திருக்கிறது. லாங் ஷாட்டில் பல காட்சிகள் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. வேட்டை நாய்களின் பந்தயம், பாழடைந்த வீட்டில் நாய்களை நடத்தும் விதம், பன்றிகளின் கூட்டம், சேலத்து அரசியல் காட்சிகள், வடிவேலுவின் பாராம்பரிய வீடு, பகத் பாசிலின் வீடு, அடிமுறை தற்காப்பு கலை, ஆக்ஷன்; காட்சிகள், அடித்து நொறுக்கப்படும் கூடங்கள், இறுதியில் சட்டமன்ற காட்சிகள் என்று காட்சிக் கோணங்களை செதுக்கி ஒரு அழகான சிலையாக கொடுத்துள்ளார்.

வசனங்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டப்பட்ட வாளாக உடலில் இறங்குகிறதோ இல்லையோ மனதில் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசுகின்றன. செல்வாவின் எடிட்டிங், குமார் கங்கப்பன் கலை பாராட்டுக்குரியது.

இரண்டு தலைமுறைகள் பற்றிய ஜாதிஅரசியல் கதைக்களத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஆளும் கட்சியின் எம்எல்ஏ மற்றும் அதே கட்சியில் மாவட்டச் செயலாளர் இவர்களுக்குள் ஏற்படும் பகை அரசியல் தாண்டி சாதி தீயாக உருவெடுப்பதைப் பற்றிய திரைக்கதை தான் மாமன்னன். வீட்டிற்கு வருபவர்களையும், இளைய தலைமுறையினரையும் உட்கார வைத்து பேசும் பழக்கம் வடிவேலுவிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை படத்தில் காட்டியிருக்கும் விதம் தான் படத்தின் ஹைலைட். மிரட்டலான முதல் பாதி கதை, யூகிக்க வைக்கும் இரண்டாம் பாதி என்றாலும் திருப்பம் கொடுக்கும் இறுதியில் சலிப்பு தட்டாத திரைக்கதை மாமன்னன், படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலிகள், சமத்துவத்தின் வேர்கள், தீண்டாமை பற்றிய ஆழமான கருத்துக்கள் ஆகியவற்றைத் தெளிவாக அம்பலப்படுத்தும் இந்தப் படம் மாமன்னன் மூலம் ஒரு அருமையான கதையைச் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.அரசியல் த்ரில்லர் அடக்குமுறை, இடஒதுக்கீடு மற்றும் சமூக அநீதி ஆகியவற்றின் சில காட்சிகள் கண் கலங்க வைப்பதும், சில காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெகுண்டெழவும், சில காட்சிகள் கை தட்டல் பெறவும் வைக்கிறது. நாய், பன்றி ஆகியவை இனத்தின் அடையாளமாக காட்டியிருந்தாலும் விலங்குகள் துன்புறுத்தபடும் கொடூரமான காட்சிகளை குறைத்திருக்கலாம். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்திலும் வெற்றி வாகை சூடி வசூல் மன்னன் என்று நிரூபித்துள்ளார்.

மொத்தத்தில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மாமன்னன் சுழற்றி அடிக்கும் சாதி அதிகார அரசியலில் தாக்குப்பிடித்து வெற்றி கண்டால் சாதாரண ஒடுக்கப்பட்ட மாமனிதனையும் பதவியுடன் மகுடம் சூட்டி தலைவணங்கும் தற்கால  அரசியல்.