மதிமாறன் சினிமா விமர்சனம் : மதிமாறன் எந்த மனிதனுக்கும் சாதிக்க உடல் உயரத்தை விட மனதைரியம் தான் முக்கியம் என்பதை சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5
ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் ஜிஎஸ் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் மதிமாறன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மந்த்ரா வீரபாண்டியன்.
இதில் வெங்கட் செங்குட்டுவன் – நெடுமாறன், இவானா – மதி, ஆராத்யா – பிரபாவதி, எம்.எஸ் பாஸ்கர் – சுந்தரம், ஆடுகளம் நரேன் – கட்டபொம்மன், பவா செல்லதுரை – கருப்பசாமி ,சுதர்ஷன் கோவிந்த் – சுதர்சன், பிரவீன் குமார் . ஈ – சந்திரன் மாணிக்கவேல் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – பர்வேஸ், படத்தொகுப்பு- சதீஷ் சூர்யா, கலை – மாயப்பாண்டி, பாபின்ஸ் ஸ்டுடியோஸ் வெளியீடு, மக்கள் தொடர்பு – யுவராஜ்
திருநெல்வேலியில் தபால்காரராக வேலை செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் இரட்டையர்களான நெடுமாறன்(வெங்கட் செங்குட்டுவன்) மதியுடன் (இவானா) வசிக்கிறார். உயர குறைபாடு கொண்ட நெடுமாறன் கேலி கிண்டலுக்கு ஆளாகும் போது அக்கா மதி அவனை பாதுகாக்கிறாள். நெடுமாறன் படிப்பில் கெட்டிக்காரராக இருக்க ஒரே வகுப்பில் படிக்கும் இவர்களின் பாசமும், நேசமும் பள்ளி வரை செல்கிறது. சிறு வயதிலிருந்தே தந்தை போல் தபால்காரராக வேண்டும் என்ற ஆசை நெடுமாறனுக்கு இருக்கிறது. இருவரும் கல்லூரியில் வௌ;வேறு இடத்தில் படிக்கச் செல்கிறார்கள். கல்லூரியில் பிரபாவதிவின் (ஆராத்யா) நட்பு நெடுமாறனுக்கு கிடைக்கிறது. பின்னர் காதலாக உருவெடுத்தாலும், நெடுமாறன் காதலை சொல்ல தயங்குகிறார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மதி பேராசிரியருடன் ஒடிப் போக, இதனால் மனமுடையும் பெற்றோர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். நெடுமாறன் சகோதரியையும், பெற்றோரையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வாழ்க்கையில் விரக்தியடையும் நெடுமாறன் தற்கொலை முடிவை எடுத்தாலும் பின்னர் மனம்மாறி தன் காதலை மறந்து திருநெல்வேலியை விட்டு தன் சகோதரியை தேடி சென்னைக்கு நெடுமாறன் செல்கிறார். அந்த சமயத்தில் சென்னையில் பல இடங்களில் மர்மமான முறையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார்கள். சென்னைக்கு வரும் நெடுமாறன் பல இடங்களில் தேடி இறுதியாக தன் காதலி பிரபாவதி போலீசில் வேலை செய்வதை அறிந்து அங்கே சென்று தன் சகோதரியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தருமாறு கூறுகிறார். கோட்டூர்புரத்தில் இருக்கும் சகோதரி மதியை கண்டுபிடித்து அவரின் செயலால் பெற்றோர்கள் இறந்தது பற்றி கூறி சண்டையிட்டாலும், பின்னர் அங்கேயே தங்குகிறார். இதனிடையே மதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி தற்கொலை செய்வதை தடுக்கும் நெடுமாறன் காணாமல் போன அவர்களின் பெண்ணை தேடி கண்டுபிடித்து தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். போலீஸ் தீவிரமாக சைக்கோ குற்றவாளியை தேட, நெடுமாறனும் தன் போலீஸ் தோழி உதவியுடன் காணாமல் போன பெண்ணை தீவிரமாக விசாரித்து தேடுகிறார். இறுதியில் யார் அந்த குற்றவாளி? நெடுமாறன் எப்படி கண்டுபிடித்தார்? சகோதரி மதி மாட்டிக்கொள்ளும் சிக்கல் என்ன? நெடுமாறன் மதியை காப்பாற்றினாரா? நெடுமாறனுக்கு ஆசைப்பட்ட தபால் வேலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் கதாபாத்திரத்திற்கேற்ற தேர்வு, அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவனிக்க வைக்கிறார். தன் உயரத்தை பார்த்து கிண்டல் செய்பவர்களை கண்டும் காணாமல் இருப்பதும், சில சமயங்களில் தக்க பதிலடி கொடுப்பதும், அக்காவின் பேச்சை தட்டாமல் கேட்பதும், பெற்றோர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் இடத்திலும், அக்காவை கண்டவுடன் கோபப்பட்டு பின்னர் அக்காவின் குழந்தையை பார்த்து சமாதானம் ஆவதும், தன் சாதுர்யமாக துப்பறியும் அறிவை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறனும், என்று படம் முழுவதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும்,நடனத்திலும்;, நடிப்பிலும் அசத்தலாக செய்துள்ளார்.
இவானா மதியாக தன் சகோதரனின் மீது அன்பு, குடும்பத்தின் மீது பாசம், காதலுக்காக வீட்டை விட்டு ஒடிப் போனாலும் அதன் பின்னர் வருந்தும் இடத்திலும், எதிர்பாராத அதிர்ச்சி சம்பவத்தால் நிலை குலைந்து போகும் போதும் கவனத்தை ஈர்;க்கிறார்.
மற்றும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன், செக்யூரிட்டியாக நடித்துள்ள பாவா செல்லதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சனாக சுதர்ஷன் கோவிந்த், வில்லன் சந்திரன் மாணிக்கவேலாக பிரவீன் குமார் என அனைவரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
கார்த்திக் ராஜா இசை படத்தின் காட்சிகளுக்கு தனித்துவத்தை கொடுத்துள்ளது.
திருநெல்வேலி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடக்கும் சம்பவங்களை சிறப்பாக தன் காட்சிக் கோணங்களால் ஒளிப்பதிவாளர் பர்வேஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
படத்தொகுப்பு- சதீஷ் சூர்யா, கலை – மாயப்பாண்டி இவர்களின் பங்களிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
நெடுமாறன், மதி என்ற இரட்டையர்களின் பாசத்தை சொல்லும் படம் மதிமாறன்.உயரம் குறைபாடால் ஏளனத்திற்கு உள்ளாகும் ஒருவர் தனது வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்தி வெற்றி காண்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல நடிப்பு மற்றும் நேர்மறையான செய்தியுடன் கூடிய வித்தியாசமான கதைளத்துடன் இயக்கியிருக்கிறார் மந்த்ரா வீரபாண்டியன். இப்படம் வெறும் குடும்ப கதையாக உடன்பிறப்புகளின் பந்தம் பற்றி மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் த்ரில்லர் வகையை நோக்கி வேறு திசையில் நகர்ந்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்ன தடைகளையெல்லாம் தாண்டி சாதிக்கிறார் என்பதாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். ஒருவருக்கு குறைபாடு இருந்தால் அவர்கள் சாதித்து தான் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல, அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் அங்கீகரித்து வழி வகை செய்தால் அதற்கான அவசியம் இருக்காது சாதிக்காமலும் வாழலாம் என்றும், கேலி பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் நாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் விலகிச் சென்றாலே போதும் என்பதையும் ஆணித்தரமாக சொல்ல முயற்சித்திருக்கும் செய்திக்கு பாராட்டுக்கள். எனினும் இக்கதையில் த்ரில்லரை திணித்தது போல் உள்ளது, அதுமட்டுமில்லாமல் நெடுமாறன் எடுக்கும் முடிவுகள் எல்லாம் வெற்றி பெறுவதும், அடிக்கடி கையாளப்படும் உருவ கேலிகள் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக பொங்குவதும், சில இடங்களில் அடக்கி வாசிப்பதும், சம்பந்தமே இல்லாமல் திடீரென்று இரண்டு இடங்களில் துப்பறிய செல்வதும், அதற்கு போலீஸ் உதவுவது திருப்பம் என்ற பெயரில் இறுதிக் காட்சி நம்ப முடியாத வண்ணம் கையாளப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் ஜிஎஸ் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் மதிமாறன் எந்த மனிதனுக்கும் சாதிக்க உடல் உயரத்தை விட மனதைரியம் தான் முக்கியம் என்பதை சொல்லும் படம்.