பொம்மை சினிமா விமர்சனம் : பொம்மை பார்க்க நமக்கு வேண்டும் பொறுமை | ரேட்டிங்: 2/5

0
377

பொம்மை சினிமா விமர்சனம் : பொம்மை பார்க்க நமக்கு வேண்டும் பொறுமை | ரேட்டிங்: 2/5

ஏஞ்சல் ஸ்டூடியோஸ் எம்எச் எல்எல்பி நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா வழங்க ராதா மோகன் இயக்கியுள்ள படம் பொம்மை.

இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன், செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். . படத்தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குநர் கே.கதிர், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்.

ராஜகுமாரன் என்கிற ராஜு துணிக்கடை பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் ஒவியர்.சிறு வயதில் உயிர் தோழி நந்தினி திருவிழாவில் காணாமல் போக அதிலிருந்து உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருந்துகள் தினமும் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர். திடீரென்று ஏதோ விரக்தியில் மருந்துகள் எடுப்பதை நிறுத்தி விடுகிறார். அதே சமயம் அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருக்கும் ஒரு பொம்மையை வரையும் போது உருவ ஒற்றுமையில் தன் உயிர் தோழி நந்தினி போல் இருப்பதை உணர்கிறார்.அன்று முதல் உயிருள்ள நந்தினியாக பாவித்து அந்த பொம்மையுடன் பேசும் வழக்கத்தை கொண்டிருக்க, ஒரு நாள் அந்த பொம்மையை அந்த கடையின் சூப்பர்வைசர் விற்பனைக்கு அனுப்பி விடுகிறார். பொம்மையை காணாமல் திடுக்கிடும் ராஜு அந்த சூப்பர்வைசரை கொன்று விட்டு வேலையை விட்டு சென்று விடுகிறார். அந்த பொம்மையை தேடி அலைந்து திரியும் ராஜு கடைசியில் ஒரு பெரிய ஷோரூமில் இருப்பதை பார்த்து சாந்தினி உதவியுடன் அந்த கடையில் சேர்ந்து விடுகிறார். ராஜுவால் நந்தினி பொம்மையை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிந்ததா? போலீஸ் ராஜு செய்த கொலையை கண்டுபிடித்து கைது செய்ததா? இறுதியில் ராஜுவின் உளவியல் பிரச்சனையால் நேர்ந்த விபரீதம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

எஸ்.ஜே. சூர்யா உளவியல் பாதிக்கப்பட்ட இளைஞராக சில இடங்களில் மிகையான நடிப்பும், சில இடங்களில் உணர்ச்சிகள் நிரம்பிய வசனங்களுடன் இயல்பாகவும் நடிக்க முயற்சி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். பொம்மை காதலை தன் நினைவுகளோடு உருவகப்படுத்தி காதலுடன் படம் முழுவதும் வசனங்கள், கனவுகள் என்று வர்ணிப்பதிலேயே படத்தை நகர்த்தி விடுவதால் அவரது நடிப்பு அலுப்பையே ஏற்படுத்துகிறது.

நந்தினி பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் அழகான பொம்மையாக, எஸ்.ஜே. சூர்யாவை தன் வசம் வீழ்த்தி கொலைக்கும், தற்கொலைக்கும் தூண்டி அவரை பேசிப்பேசியே இம்சை செய்யும் நாயகியாக ஒரே இடத்தில் வலம் வருகிறார்.

சாந்தினி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு கச்சிதமாக செய்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, ‘தெய்வீக ராகம்’ முத்தம் ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு வீடு, தொழிற்சாலை, கடை ஆகியவற்றையே சுற்றி வருவதால் தன்னால் முடிந்தவரை நியாயம் செய்துள்ளார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி இன்னும் சுவாரஸ்யத்தோடு காட்சிகளை கொடுக்க முயற்சித்திருக்கலாம்.

படம் முழுக்க வரும் விதவிதமான பொம்மைகளின் அணிவகுப்பு, வடிவமைப்பு ஆகியவற்றிற்கு கலை இயக்குநர் கே.கதிர் பாராட்டுக்குரியவர்.

பொம்மையை உயிருள்ள காதலியாக பாவிக்கும் உளவியலாக பாதித்த இளைஞனின் காதல் மனநிலை என்று புதுமையாக யோசித்தாலும் அதில் அழுத்தமான திரைக்கதை, சுவாரஸ்யமான சம்பவங்கள், அனுதாபங்கள், திருப்பங்கள் என்று ரசிக்கும்படி எதுவும் இல்லாமல் ஏனோ தானோ என்று திரைக்கதையில் கோட்டை விட்டு இயக்கியுள்ளார் ராதா மோகன்.

மொத்தத்தில் ஏஞ்சல் ஸ்டூடியோஸ் எம்எச் எல்எல்பி நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா வழங்கும் பொம்மை பார்க்க நமக்கு வேண்டும் பொறுமை.