பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம் : ‛பேட்டைக்காளி’ கிராமத்து மண்மாறாத பழிவாங்கும் துரோகத்தின் அடையாளம்
வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‛பேட்டைக்காளி’ஆஹா தமிழ் ஓடிடியில் இதுவரை 4 எபிசோட் வாரம் ஒன்றாக தமிழ் சினிமாவில் மண் வாசனை மிகுந்த பட வரிசையில் பேட்டைக்காளி என்ற வெப் தொடரில் கிஷோர் குமார், ஷீலா ராஜ்வாகுமார், லவ்லின் சந்திரசேகர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கபட்டுள்ளது.
ஊர் பண்ணையாரர் வேல ராமமூர்த்தி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். பக்கத்து ஊர் மக்களுக்கும் இவரது ஊருக்கும் பல காலங்களாக பகை இருக்க ஜல்லிக்கட்டில் வேல ராமமூர்த்தியின் மாட்டை யாரும் பிடிக்க கூடாது என்று தண்டோரா போடப்படுகிறது . பக்கத்து ஊரில் கிஷோர் மற்றும் அவரது அக்கா மகனாக கலையரசன் வசித்து வர கலையரசன் ஜல்லிக்கட்டியில் மாட்டை பிடித்து விடுகிறார். ஏதிர்பாராதவிதமாக மாடு இறந்து விடுகிறது. இதனால் இரு ஊருக்கும் பகை தீவிரமாகிறது. பிறகு என்ன ஆனது என்பதே முதல் எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.
இதனால் பல அடிதடி சண்டைகள் நடக்க, ஜல்லிக்கட்டு காளை கழுத்தில் இருந்து எடுத்த மணியை திருப்பி தந்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபத்தனை போடப்படுகிறது. இதனால் கலையரசனை சமரசம் செய்து ஊர் பண்ணையார் வேல ராமமூர்த்தி வீட்டிற்கு அனுப்புகின்றனர். அங்கே தனியாளாக செல்லும் கலையரசனை தாக்க, பதிலுக்கு அவர்களை அடித்து விட்டு வந்து விடுகிறார். மறுநாள் கலையரசன் காணாமல் போக, அவரை தேடும் ஊர்காரர்களுக்கு அவரது சடலமே கிடைக்கிறது. இதைப்பார்த்து ஆத்திரமடையும் தாய் மாமன் கிஷோர் ஊர் பண்ணையார் வேல ராமமூர்த்தியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்தாரா கிஷோர்? அதன் பின் என்ன நடந்தது? என்பதே இரண்டாவது எபிசோட்.
கலையரசன் மாடுபிடி வீரராக களமிறங்கி வீரத்துடன் நடித்து அசத்தியுள்ளார். கிஷோர் பழி தீர்க்க புறப்படும் வேங்கையாக சீறிப் பாய்கிறார். ஊர் பெரியவராக வில்லத்தனத்தில் அக்மார்க் மிரட்டலுடன் வேல.ராமமூர்த்தி மற்றும் இவர்களை தாண்டி ஷீலா, கௌதம், பால ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு, குறிப்பாக ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதமும் சிவகங்கை பகுதியை திறம்பட கொடுத்தும், ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் டைட்டில் இசையும், பின்னணி இசையும் பகை, வன்மம், குரோதம், பழி தீர்த்தல், சாதிய வெறி பற்றிய கதைக்களத்தை அப்பட்டமாக தூக்கி நிறுத்துகிறது.
பேட்டைக்காளி முதலில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஆரம்பிக்கும் கதை பின்னர் விறுவிறுப்பாக பழி தீர்க்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி சித்தரித்து, அதனால் ஏற்படும் இரண்டு ஊர்களின் பகை, ஊர் பண்ணையாரின் ஆசை, அதற்காக எதற்கும் துணியும் குள்ளநரித்தனம், இதனால் பாதிக்கப்படும் பெண்கள், அவர்களின் மனஉளைச்சல்கள், எதிர்பாராத சம்பவங்கள் என்று ஒவ்வொரு எபிசோடும் முடியும் போதும் ஒரு ஆச்சர்யத்தை கொடுத்து, அடுத்த எபிசோடை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் இயக்கியுள்ளார் ராஜ்;குமார். இவரின் அயராத முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள். இனி வரும் எபிசோட்களில் மேலும் பல ஆச்சர்ய வினாக்களுக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு பார்க்கலாம் பேட்டைக்காளி.
மொத்தத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா தமிழ் ஓடிடிதளத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‛பேட்டைக்காளி’ கிராமத்து மண்மாறாத பழிவாங்கும் துரோகத்தின் அடையாளம்.