பூர்வீகம் சினிமா விமர்சனம் : பூர்வீகம் இளைய சமுதாயத்திற்கு விவசாயம், கிராமத்தின் மகிமையை மனதார உணரச் செய்யும் ஒரு பாடம் | ரேட்டிங்: 2.5/5

0
275

பூர்வீகம் சினிமா விமர்சனம் : பூர்வீகம் இளைய சமுதாயத்திற்கு விவசாயம், கிராமத்தின் மகிமையை மனதார உணரச் செய்யும் ஒரு பாடம் | ரேட்டிங்: 2.5/5

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர் முருகானந்த்  தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.கிருஷ்ணன்.

இதில் அறிமுக நடிகர் கதிர், மியாஸ்ரீ நாயகியாக, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, ஒய்எஸ்டி சேகர், சூசன்,  ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் – ஒளிப்பதிவு – விஜய் மோகன், இசை – சாணக்யா, படத்தொகுப்பு – சங்கர் கே, பாடலாசிரியர் – ஏகாதசி ,கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன் பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், கே.பார்த்திபன், ஜி.அமிர்தவர்ஷினி, டாக்டர் ஆர்முருகானந்த், நிர்வாக தயாரிப்பாளர் – கே. சந்தோஷ், மக்கள் தொடர்பு – செல்வரகு, குணா.​

மதுரை அருகே உள்ள கிராமத்தில் பூர்வீகமாக போஸ்வெங்கட் குடும்பம் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். போஸ்வெங்கட் தன் ஒரே மகனான கதிரை நன்றாக படிக்க வைத்து அரசு உத்தியோகத்தில் அமர வைக்க வேண்டும் விவசாயியாக மாற கூடாது என்று கண்டிப்புடன் வளர்கிறார். இதற்காக தன் தந்தை சங்கலி முருகன் சொல்வதை கேட்காமல் சொந்தபந்தங்களை உதறி தள்ளிவிட்டு தன் மகனை சென்னைக்கு அனுப்புகிறார். மகன் கதிர் நன்றாக படித்து வேலையிலும் சேர நல்ல வசதியான குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கிறார் போஸ்வெங்கட். அதன் பின் சென்னையில் கதிர் வீடு கட்ட ஆசைப்பட அதற்காக நிலத்தை விற்று பணம் கொடுக்கின்றனர் பெற்றோர். ஆனால் மனைவி தன் பெற்றோரை மதிக்காமல் இருப்பதால் அவ்வவ்போது சென்று கிராமத்தில் அவர்களை கதிர் பார்த்து வருகிறார். இதனிடையே பேரன் பிறக்க சென்னைக்கு அவனை பார்க்க செல்லும் கதிரின் பெற்றோர் அங்கே அவமானப்பட அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி விடுகின்றனர். பதினாறு வருடங்கள் கடந்த பின் மனைவி மற்றும் மகனும் ஆடம்பர செலவுகளை சமாளிக்க முடியாமல் அதற்காக தன் பெற்றோர்களை நம்பியே காலத்தை தள்ளுகிறார் கதிர். இதனிடையே தாய் உடல் நலம் குன்ற அவரை பார்க்க செல்லும் கதிர் விபத்தில் சிக்குகிறார். அவரின் சிகிச்சைக்காக அல்லல்படும் மனைவி தன் பிறந்த வீட்டின் உதவியை நாட உதாசீனப்படுத்தப்படுகிறார். அதன் பின் தன் தவறை உணர்ந்து கதிரின் மருத்துவ செலவை மனைவி எப்படி சமாளித்தார்? கதிரின் மகன் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து என்ன செய்தார்? பாட்டி, தாத்தாவை இதுவரை பார்க்காத கதிரின் மகன் எந்த நிலையில் அவர்களை பார்த்தார்? கதிரின் குடும்பம் தன் சொந்தபந்தங்களுடன் இறுதியில் சேர்ந்தனரா? என்பதே படத்தின் கண் கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்.

முதல் காட்சியில் தொடங்கும் போஸ் வெங்கட்டின் மிரட்டலான நடிப்பு இறுதிக் காட்சியில் உயிர் பிரியும் வரை தன்னுடைய இயல்பான நடிப்பால் மனதை தொடுகிறார். சொந்தங்களிடம் சண்டை போடுவது, தந்தையை திட்டினாலும் காணாமல் போன பிறகு தேடி கண்டுபிடித்து கதறுவது, கிராமத்தை விட்டு மகனை அனுப்பிவிட்டு, அவனுக்காக எதையும் செய்ய துணியும் பாசமுள்ள தந்தையாக, அவமானப்பட்டாலும் அதை காட்டிக் கொள்ளாத பண்பு, மதுபானக்கடையில் பேரன் என்று தெரிந்த பின் அதிர்ச்சியாவது தந்தையாகவும், தாத்தாவாகவும் போஸ் வெங்கட் மனதை வருடும் நெகிழ்ச்சியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் போட்டி போட்டு மனைவியாக ஸ்ரீரஞ்சனி தத்ரூபமான கிராமத்து தாயாக வாழ்ந்துள்ளார்.

அறிமுக நடிகர் கதிர் இரண்டு வெவ்வேறு கோணங்களில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் கிராமத்து இளைஞனாகவும், நகரத்தில் வசிக்கும் குடும்ப பொறுப்புள்ள மனிதனாகவும் தனது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து இளைஞனாக இளமை துள்ளலுடன் வெள்ளேந்தி மனதுடன் வருவதும், நகரத்து இளைஞனாக பொறுப்புள்ள கணவனாக, பாசமுள்ள மகனாக இயலாமையை நினைத்தும், பெற்றோரின் வலிகளை புரிந்து கொண்டு வருத்தப்படும் இடங்களிலும், இறுதியில் பெற்றோர்களின் நிலைமையை கண்டு அதிர்ந்து அழும் காட்சிகளில் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

கதிரின் மனைவியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ, ஒரு கிராமிய அழகைக் கொண்டு வந்து அக்மார்க் கிராமத்து அப்பாவி பெண்ணாக நடை, உடை, பாவனையில் அந்த பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

தாத்தாவாக சங்கிலி முருகன், இளவரசு, ஒய்எஸ்டி சேகர், கதிரின் மனைவியாக சூசன் என்று படத்திற்கு முதகெலும்பாக தோள் கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாணக்யா, திரைப்படத்தின் கிராமிய கருப்பொருளை நிறைவு செய்யும் மூன்று பாடல்களின் அழகான ஒலிப்பதிவுடன் பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன் மண் மணம் மாறாத கிராமத்தின் அழகையும், மக்களையும் நகரத்து வாழ்க்கையையும் தேர்ந்த காட்சிக்கோணங்களுடன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

கிராமத்தில் வாழும் விவசாயியும், நகரத்தில் வாழும் மகனையும், அவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகளையும், சொந்தங்களின் மதிப்பையும், அவமதிப்பையும், கார்ப்பரேட் கம்பெனிகளின் அபகரிப்பையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் திறம்பட கொடுத்து சொந்த கிராமத்தை மறந்து செல்லும் மனிதர்களின் நிலையையும் அவர்களின் பூர்வீகத்தின் பெருமையையும் பறை சாற்றும் படமாக சமூக அக்கறை, செண்டிமென்ட் கலந்து ரசிக்கும்படி இயக்கியுள்ளார் ஜி.கிருஷ்ணன்.

மொத்தத்தில் பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர் முருகானந்த்  தயாரித்திருக்கும் பூர்வீகம் இளைய சமுதாயத்திற்கு விவசாயம், கிராமத்தின் மகிமையை மனதார உணரச் செய்யும் ஒரு பாடம்.