புஷ்பா 2 : தி ரூல் சினிமா விமர்சனம் : புஷ்பா 2 : தி ரூல் அல்லு அர்ஜுனின் ஆர்ப்பரிக்கும் ருத்ரதாண்டவம் | ரேட்டிங்: 4/5
மைத்ரி மூவி மேக்கர்ஸ்; சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கும் புஷ்பா 2 : தி ரூல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகுமார்.
இதில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், அஜய், பிரம்மாஜி, ஜகதீஷ் பிரதாப் பண்டாரி, ஆடுகளம் நரேன், சுனில், அனசுயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:இசை: தேவி ஸ்ரீ பிரசாத், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவு : மிரோஸ்லாவ் ப்ரோஸெக்கின், எடிட்டிங் : ரூபன் சர்வ் – கார்த்திகா ஸ்ரீனிவாஸ், ஆக்ஷன் : க்ரிட் ட்ரீவோரஸ்ரிகுல், பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா, டிஒன்முதல் பாகத்தில் புஷ்பா( அல்லு அர்ஜுன்) தன்னுடைய விடாமுயற்சியாலும், தந்திரத்தாலும் கூலியாளாக வேலை செய்து பின்னர் செம்மரக்கடத்திலில் ஈடுபட்டு அதன் பின் அனைவரும் வியக்கும் வண்ணம் சிண்டிகெட்டின் தலைவனாக கடத்தல் கும்பலின் ஏகோபத்திய ஆதரவுடன் வலம் வந்து எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் பாசில்) பகைமை ஏற்பட்டு அதன் பின் காதல் மனைவி ஸ்ரீவல்லியை திருமணம் செய்து கொள்வது போல் முடிந்த கதைக்களத்திலிருந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. திருமண வாழ்க்கை, கடத்தல் தொழில் என்று மகிழ்ச்சியாக வாழும் புஷ்பா, தன் நண்பர் எம்.பி சித்தப்பாவுடன் (ராவ் ரமேஷ்) முதலமைச்சரை பார்க்க செல்லும் போது, காதல் மனைவி ஸ்ரீவள்ளி தன்னுடைய ஆசையாக முதலமைச்சரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருமாறும் அதை வீட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று கூறுகிறார். அங்கே செல்லும் புஷ்பாவிற்கு முதலமைச்சர் உரிய மரியாதை தராமல் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்க, இதனால் கோபமடையும் புஷ்பா, சித்தப்பாவை கோடியில் செலவு செய்து முதலமைச்சராக்க முடிவு செய்கிறார். இதற்காக நேஷனல் லெவலில் கடத்தல் செய்வதை விட இன்டர்நேஷனல் லெவலில் கடத்தலில் ஈடுபட்டால் தான் 2000 கோடி சம்பாதித்து தன் சித்தப்பாவிற்கு பதவி கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் என்று புஷ்பா பல தந்திரமான செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார். எஸ்பி ஷெகாவத் (ஃபஹத் பாசில்) பகையை முற்றுப்புள்ளி வைத்தால் தான் கடத்தல் தொழில் சுமூகமாக முடியும் என்று சித்தப்பா முடிவு செய்து புஷ்பாவை ஷெகாவத்திடம் மன்னிப்பு கேட்க ஏற்பாடு செய்ய, அந்த இடத்தில் மீண்டும் மோதல் முற்றி பெரும் பகையாகி புஷ்பாவும், ஷெகாவத்தும் பழி வாங்கி சவால் விடும் நிலைக்கு சென்று விடுகிறது. மேலும் மங்கலம் ஸ்ரீனு (சுனில்) அவர் இழந்த சிண்டிகேட்டை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அதே சமயம் புஷ்பாவின் மூத்த சகோதரனின் குடும்பம் பிரச்சனையில் சிக்க அதற்காக களமிறங்கும் புஷ்பா என்ன செய்தார்? பிரச்சனையால் புஷ்பாவின் முறைகளுக்கு வளைந்து கொடுக்க மறுக்கும் மத்திய மந்திரி பிரதாப் ரெட்டியின் (ஜெகபதி பாபு) பகைக்கு ஆளானாரா? தன் எண்ணப்படி சித்தப்பாவை முதலமைச்சர் ஆக்கினாரா? செம்மரக்கடத்தலில் காவல்துறை அதிகாரி ஷெகாவத்தின் தலையீடு புஷ்பாவால் எதிர் கொள்ள முடிந்ததா?இறுதியில் தன்னை அவமானப்படுத்திய அண்ணன் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பதே படத்தின இரண்டாம் பாகத்தின் மீதிக்கதை.
அல்லு அர்ஜுன் தனது அட்டகாசமான பவர்ஃபுல் ரோலில் ஆக்ரோஷ சண்டைக்காட்சிகள், ஆர்ப்பரிக்கும் ஜதாரா நடனம், அசால்டான வசன உச்சரிப்பு, மேனரிசம், ஒப்பனை, தன் கூட்டாளிகளுடன் கெத்தாக வலம் வருவது, பணத்தால் அதிகாரத்தை வாங்கும் பாங்கு, மனைவி சொல்லே மந்திரம், காதல் காட்சிகளில் நெருக்கம், பாசம், ஷெகாவத்திடம் மன்னிப்பு கேட்கச்சென்று பின்னர் பின்வாங்கி அவரை அவமானப்படுத்தும் பாங்கு, செண்டிமென்ட் காட்சிகளில் அதீத ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் செய்து, க்ளைமாக்ஸ{க்கு சற்று முன் புஷ்பா ராஜ் உடைந்து போகும் காட்சி அவர் எந்தளவுக்கு தன் கதாபாத்திரத்தை உள்வாங்கியிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. பல விருதுகள் அல்லு அர்ஜுனின் உழைப்பிற்கு கிடைக்கும்.
ராஷ்மிகா மந்தனா மனைவியாக புஷ்பாவிடம் காட்டும் அதீத உரிமை, ரோமன்டிக் காட்சிகளில் காட்டும் தாராள தன்மை, கவர்ச்சியுடன் கொஞ்சம் உணர்ச்சிகரமான காட்சிகளில் தன் கணவனுக்காக வக்காலத்து வாங்கி உருகும் காட்சிகளில் திறம்பட செய்துள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை குறிப்பாக ஜதாரா காட்சியின் போது அவரது சக்திவாய்ந்த மோனோலாக் சிறப்புக்குரியது.
தீராத அவமானத்தால் ஏற்பட்ட பகையை தீர்த்துக் கொள்ள் எடுக்கும் முயற்சி ஒவ்வொரு முறையும் சொதப்பலாக, அதனால் விரக்தியில் மனஉளைச்சலில் தவிக்கும் சப் இன்ஸ்பெக்டராக ஃபஹத் ஃபாசில், மத்திய அமைச்சராக இறுகிய முகத்துடன் ஜகபதி பாபு, எம்பியாக முதலில் வந்து புஷ்பாவிற்காக பல செயல்களை செய்து வம்பில் மாட்டிக் கொள்வதும், முதலமைச்சரானவுடன் சந்தோஷத்தில் ஆட்டம் போடும் ராவ் ரமேஷ், அஜய், பிரம்மாஜி, ஜகதீஷ் பிரதாப் பண்டாரி, முதலமைச்சராக ஆடுகளம் நரேன், சுனில், அனசுயா மற்றும் பலர் படத்தின் மையத்தூண்கள். இறுதியில் கிஸ் கிஸ் கிஸ் ஸ்கா பாடலில் குத்தாட்டம் போடும் ஸ்ரீலீலா கவர்ச்சி குளியல்.
தேவி ஸ்ரீ பிரசாத், ரசூல் பூக்குட்டி, பின்னணி இசை சாம் சிஎஸ் என்று அனைவருமே காட்சிகளுக்கேற்ற தங்களுடைய அளப்பரிய பணியை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.
மிரோஸ்லாவ் ப்ரோஸெக்கின் பிரம்மாண்ட கடத்தல் , துரத்தல்;, சண்டை காட்சிகளுக்கும் உத்தரவாதமான காட்சிக் கோணங்களில் மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
ஜப்பானில் தலைகீழாக கட்டிவிட்டு செய்யும் ஆக்ஷன் காட்சிகள், ஜதாரா காட்சிகளில் கையை கட்டிவிட்டு போடும் சண்டைகள், இறுதிக்காட்சியில் கை, கால்களை கட்டிபோட வாயால் கடித்தே தெறிக்க விடும் சண்டைக்காட்சிகள் என்று ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளை தெலுங்கு ரசிகர்களுக்குகேற்றவாறு யோசித்து செயல்படுத்தி வெளுத்து வாங்கியுள்ளார் சண்டை பயிற்சியாளர் க்ரிட் ட்ரீவோரஸ்ரிகுல்.
எடிட்டிங் : ரூபன் சர்வ் – கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தின் காட்சிகளை தொகுத்து வழங்கியதே 3 மணி 20 நிமிடங்கள் என்றால் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அத்தனையையும் அலசி ஆராய்ந்து குறிப்பிட்ட காட்சிகளை இயக்குனரின் எண்ணம் போல் அதை திறம்பட கொடுத்திருக்கும் இவர்கள் பணி அளப்பரியது.
முதல் பாதி டானாக உருவாக, இரண்டாம் பாதி டானிலிருந்து அரசியல் , அதிகாரம் ஆகியவற்றை விலைக்கு வாங்கி தன் ஆசைப்படி ஆட்டிவிக்கும் பெரிய கடத்தல் மன்னனாக, எதிரிகளை துவம்சம் செய்து, குடும்ப சென்டிமெண்ட் இணைந்து ஒரு மாஸ், கமர்ஷியல் கலந்த ஜனரஞ்சகமான படமாக, அனைவரும் ரசிக்கும் வண்ணம் 3மணி 20நிமிடங்களில் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள் என்று இடைவிடாமல் தோய்வில்லாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் சுகுமார். ஓவ்வொரு பாகத்திலும் புதிய எதிரிகளை உருவாக்கி,அவர்களை அடுத்த பாகத்திற்கு வில்லனாக சித்தரித்தது போல் மூன்றாம் பாகத்திலும் அரசியல் எதிரியை மோத களமிறங்க புஷ்பா 3 ராம்பேஜ் என்ற டைட்டில் லீடுடன் முடிகிறது.
மொத்தத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ்; சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கும் புஷ்பா 2 : தி ரூல் அல்லு அர்ஜுனின் ஆர்ப்பரிக்கும் ருத்ரதாண்டவம்.