பரோல் விமர்சனம் : பரோல் இரட்டை பாசக்குதிரையில் சவாரி செய்ய போராடி நிறைவேறாமல் இறக்கும் தாயின் நேசம் | ரேட்டிங்: 3.5/5
ட்ரிப்பர் எண்டர்டைன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பரோல்.
ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர் – ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் – மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் – முனிஸ், கலை இயக்குனர் – அருண்குமார், ஆடை வடிவமைப்பாளர் – அகிலன் ராம், விஷ{வல் எஃபெக்ட்ஸ் – ஜெகன், ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்,மக்கள் தொடர்பு – ஏய்ம் சதீஷ் டீம்.
வடசென்னையில் கரிகாலன் (லிங்கா) தம்பி கோவலன் (ஆர்.எஸ். கார்த்திக்) இருவருமே தந்தையில்லாததால் தாயின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்கள். தாயின் பாசமோ கரிகாலன் மேல் தான் இருக்கிறது என்ற தப்பான எண்ணத்துடன் சிறு வயதிலிருந்தே ஒரு பொறாமையுடன், வெறுப்புடன் வளர்கிறான் கோவலன். இளம் பருவத்தில் தன் தாயை தவறாக பேசிய வக்கீலை கொன்றதால் கரிகாலன் சிறார் சீர்திருத்தச்; பள்ளியில் அடைக்கப்படுகிறான். அங்கே அவனுக்கு நடக்கும் கசப்பான பாலியல் துன்புறுத்தல் மூன்று பேரின் கொலையில் முடிகிறது. இதனால் சிறைத்தண்டனை அதிகரிக்கபட சில ஆண்டுகள் கழித்து வெளியே வரும் கரிகாலனுக்கு எந்த வேலையும் கிடைக்காததால் மீண்டும் பணத்திற்காக கொலை செய்கிறான். இடையே காதலும் ஏற்பட அதுவும் முறிந்து விடுகிறது. சந்தர்ப்ப வசத்தால் ஒரு தாதாவின் தம்பியை கொலை செய்ய மீண்டும் சிறைக்கு செல்கிறான் கரிகாலன். தாயோ பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் கரிகாலனை கருணை மனு கொடுத்து மீட்டு வர முயற்சி செய்கிறார். அதற்கு கோவலன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். இதனிடையே எதிர்பாராத விதமாக தாய் இறந்து விட, இறுதி சடங்கு செய்ய கரிகாலனை பரோலில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான் கோவலன். ஏற்கனவே வெறுப்பில் இருக்கும் கோவலன் வேறுவழியின்றி கரிகாலனை பரோலில் எடுத்து அவனை போட்டுத்தள்ள திட்டமிடுகிறான். பரோலில் கரிகாலனை எடுக்க வக்கீல் மூலம் கோவலன் முயற்சி செய்கிறான். இறுதியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? கோவலன் போட்ட திட்டம் நிறைவேறியதா? தாயின் இறுதிச்சடங்கு நடந்ததா? பழைய பழி தீர்க்கும் பகையால் நடந்த விபரீதம் என்ன? என்பதே மீதிக்கதை.
துணிச்சல், தைரியம், கோபம், ஆக்ரோஷத்துடன் கொலை செய்யும் ரவுடி கரிகாலனாக லிங்காவும் மற்றும் சாதாரண வேலை செய்து கொண்டு தன் அண்ணனின் மேல் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சியுடன் பழி வாங்க காத்திருக்கும் தம்பி கோவலனாக ஆர்.எஸ்.கார்த்திக் இருவரும் சகோதரர்கள் கதாபாத்திரங்களில் யதார்த்தம் மற்றும் ஹீரோயிசம் இரண்டும் சம அளவில் இருப்பதுடன் தங்களுடைய முதிர்ச்சியான நடிப்பால் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முத்திரை பதித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
கல்பிகா மற்றும் மோனிஷா முரளி இருவரின் காதலிகளாக வந்து சில இடங்களில் சிறப்பித்துள்ளனர்.
வக்கீலாக வினோதினி வைத்தியநாதன் படத்தின் நீதிமன்ற காட்சிகளில் இயல்பான நடிப்பு பரோல் கிடைக்க அவர் எடுக்கும் முயற்சி யதார்த்தமாக தெரிவதற்கு வழி செய்கிறது. மற்றும் ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் மற்றும் பலர் படத்தின் துணை கதாபாத்திரங்கள்.
ராஜ்குமார் அமலின் பின்னணி இசையும், மகேஷ் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் சில உணர்வுகளையும், சம்பவங்களையும் ரத்தக் களத்துடன் மனதில் பதியுமாறு கொடுத்துள்ளனர்.
எடிட்டர் – முனிஸ், கலை இயக்குனர் – அருண்குமார் ஆகியோர் கதையின் ஒட்டத்திற்கு தகுத்தவாறு கொடுத்துள்ளனர்.
தாயின் பாசத்திற்காக போராடும் இரு மகன்கள். குணாதியங்களில் வேறுபாடு, செயல்களில் முரண்பாடு, இருவரையும் சேர்த்து வைக்க போராடும் தாய். இறுதியில் அவரின் இறப்பிலாவது ஒன்றானர்களா என்பதே திரைக்கதையோடு க்ரைம் சப்ஜெக்டுடன் குடும்ப சென்டிமெண்ட் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் துவாரக் ராஜா. விஜய்சேதுபதியின்; பின்னணி குரலோடு கதை தொடங்க ஆரம்பத்தில் காட்டப்படும் கொலைகள் மிகையாக இருந்தாலும் அதற்கான காரணத்தை விவரிக்கும் இடத்தில் குறையாக தெரியவில்லை. திருமண பலாத்காரம், சிறார் சிறையில் துஷ்பிரயோகம், தாயின் நிபந்தனையற்ற அன்பு, குழந்தைப் பருவ அதிர்ச்சி அதன் பின்னால் ஏற்படும் சம்பவங்கள், காரணங்கள் என்று பலவற்றையும் கடந்து வழக்கத்திற்கு மாறான விவரிப்பு மற்றும் அடுக்குத் திரைக்கதை எந்த ஒரு கவர்ச்சியான காட்சிகளும் இல்லாமல் பொதுவாக இயக்கியுள்ளர் துவாரக் ராஜா.கோவலனின் பார்வையில் கரிகாலன் யார் என்பதை முதலில் நமக்கு வெளிப்படுத்திய இயக்குனர், அதன் பிறகு, கரிகாலனின் பார்வையில் உண்மையான முகத்தை விவரிக்கும் இடத்தில் தனித்து நிற்கிறார். பரோல் என்ற படத்தலைப்பை வைத்து அதற்கான முக்கியத்துவத்தையும், நடைமுறைகளையும் இன்னும் கூடுதலாக சொல்லியிருக்கலாம். சிறையில் குடும்பத்தினர் கைதிகளை பார்க்க வரும் நேரத்தில் இவர்களுக்கிடையே சிறைக்காவலர்கள் துணியை ஒருசேர பிடித்துக் கொண்டு அவர்கள் பேச்சையும், செய்கையும் திசை திருப்ப செய்யும் வேலை காட்சிப்படுத்தியிருப்பது புதிது. நீதிமன்ற காட்சிகள் ப்ளஸ்.
சகோதரர்களின் ஆபாச வார்த்தைகள், கை சிமிஞ்சைகள், தாயின் இறப்பை மறந்து சுயநலமாக சிந்தித்தல், ஆரம்பக் காட்சிகளில் தொடங்கும் வன்முறைகள், கொலைகள் செய்யும் விதம் ரத்தமும் சதையுமாக அதிகமாக காட்டப்படுவது, வடசென்னை என்றாலே பயத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மைனஸ்.
வடசென்னையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க, அதை மிகைப்படுத்தாமல் மீண்டும் கொலை, பழி வாங்குதல் என்ற களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். டிரைலரில் காட்டப்பட்ட காட்சிகள் படத்தில் இல்லாதது குறை. சகோதரர்களின் இடையே ஏற்படும் மாற்றங்கள் பற்றிய முக்கியமான அரை மணிநேரக் காட்சிகள், வசனங்கள் பலவற்றை நீக்கியதால் கொஞ்சம் ஒட்டுதல் இல்லாமல் கதை நகர்கிறது.
மொத்தத்தில் ட்ரிப்பர் எண்டர்டைன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில் பரோல் இரட்டை பாசக்குதிரையில் சவாரி செய்ய போராடி நிறைவேறாமல் இறக்கும் தாயின் நேசம்.