நேசிப்பாயா சினிமா விமர்சனம் : நேசிப்பாயா காதல் கலந்த சுவாரஸ்யமான த்ரில்லரை பிரமாண்டத்துடன் நேசித்து ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

0
661

நேசிப்பாயா சினிமா விமர்சனம் : நேசிப்பாயா காதல் கலந்த சுவாரஸ்யமான த்ரில்லரை பிரமாண்டத்துடன் நேசித்து ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

XB பிலிம் கிரியேட்டர்ஸ்  சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் நேசிப்பாயா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஷ்ணு வர்தன்

இதில் ஆகாஷ் முரளி,அதிதி ஷங்கர்,சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், இளைய திலகம் பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, ஷிவ் பண்டிட், கல்கி கோய்ச்சலின், ஜார்ஜ் கோரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை: யுவன் சங்கர் ராஜா,ஒளிப்பதிவு : கேமரூன் எரிக் பிரிசன்,எடிட்டர்: ஏ ஸ்ரீPகர் பிரசாத், கலை இயக்குனர் : சரவணன் வசந்த், பாடலாசிரியர்கள்: பா விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா, நடனம்: தினேஷ், ஒலி வடிவமைப்பு கலவை: தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன், இணை தயாரிப்பாளர் – சிநேகா பிரிட்டோ, மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்

கல்லூரியில்; தியா ராமலிங்கத்தை (அதிதி சங்கர்) பார்த்தவுடன் காதலிக்க தொடங்கும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி), அதன் பின் விடாப்பிடியாக தன் காதலை சொல்லி சம்மதம் வாங்குகிறார். காதலர்களின் வாழ்க்கையில் சிறு சிறு சண்டைகள் தோன்ற பின்னர் தன் வேலையில் கவனம் செலுத்தும் தியா, அர்ஜுனின் தலையீட்டால் பல ச​ங்கடங்கள் நேர காதலை முறித்து விட்டு வேலை நிமித்தமாக போர்ச்சுகல் செல்கிறார். காதல் தோல்வியில் துவண்டாலும் தன் வாழ்க்கையை வாழ்கிறார் அர்ஜுன். இரண்டு வருடங்கள் கழித்து தொலைக்காட்சியில் போர்ச்சுகலில் பெரிய தொழிலதிபர் ஆதி நாராயணன் மகனை தியா கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வதை பார்த்து, காதலியை காப்பாற்ற போர்ச்சுகலுக்கு பயணமாகிறார். தியாவின் அம்மாவையும், வழக்கறிஞர்  இந்திராணியையும் (கல்கி கோச்லின்) போர்ச்சுகலில் சந்தித்து விவரங்களை அறிகிறார். இதனிடையே தொழிலதிபர் ஆதி நாராயணை சந்திக்க முயன்றும் பலனளிக்கவில்லை. அதே சமயம் சிறைச்சாலையில் தியாவை கொல்ல சதி நடக்கிறது. அர்ஜுன் கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்தாரா? தியாவை நிரபராதி என்று விடுவித்தாரா? இதனால் அர்ஜுன் எத்தகைய சிக்கலில் மாட்டிக் கொண்டார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஆகாஷ் முரளி நெசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமானாலும் காதலனாக படம் முழுவதும் காதலின் நினைவோடு இருப்பது, அதீத காதலால் ஏற்படும் விபரீதம், பிரிவால் ஏற்படும் வேதனை, தியாவின் மீது நம்பிக்கை, நிரபராதி என்பதை நிரூபிக்க எடுக்கும் முயற்சிகள், அதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து குற்றவாளியாக நிற்பது என்று படம் முழுவதும் நேர்த்தியான கதாநாயகனாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் கவர்கிறார். இனி வரும் காலங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தால் முத்திரை பதிப்பார்.

குறிக்கோள் நிறைந்த தெளிவு நிறைந்த காதலி தியாவாக அதிதி ஷங்கர் காதல் காட்சிகளில் ஜாலியாகவும், அதே சமயம் தன் வேலைக்கு இடையூறாக காதல் இருப்பதையறிந்து அதை தவிர்த்து விட்டு செல்வது என்று சில உணர்ச்சிகரமான காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். சிறையில் சித்ரவதையை அனுபவிக்கும் இடங்களில் அனுதாபத்தை பெறுகிறார். தன்னை காப்பாற்ற வரும் காதலனுக்கு தன் தவறை உணர்ந்து இறுதியில் லவ் யூ சொல்லும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

ஒரு போர்ச்சுகல் வழக்கறிஞராக கல்கி கோய்ச்சலின் முக்கிய பங்களிப்பில் சில இடங்களில் அர்ஜுனிடம் ஒன்லைன் டயலாக்கில் கவனிக்க வைக்கிறார்.

தொழிலதிபர் ஆதி நாராயணனாக சரத்குமார் தன் சுயநலத்திற்காக மகனையே பலிகாடாக வைப்பதும், அத்தனை குழப்பங்களின் ஆரம்ப புள்ளியாக சைலன்ட் வில்லனாக விரைப்பான தோரணையுடன் வந்து போகிறார். மகனை இழந்து தவிக்கும் தாயின் பரிதவிப்புடன் வசுந்தரவாக குஷ்பு, தொழிலதிபரின் நண்பர் மற்றும் பார்ட்னரும் வில்லன் வரதராஜனாக ராஜா.

சிறப்பு தோற்றத்தில் காவல் அதிகாரி கௌதமாக இளைய திலகம் பிரபு, போர்ச்சுகல் தாதா மான்ட்டியாக ஷிவ் பண்டிட், ஒரினசேர்க்கை மகனாக ஜார்ஜ் கோரா மற்றும் பலர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு வலுவான சுவாரசியமான கதாபாத்திரங்கள்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நெசிப்பாயாவின் முதுகெலும்பாக அமைந்து பின்னணி இசை அழுத்தமாக மனதில் நச்சென்று பதியும்படி கொடுத்துள்ளார்.

கேமரூன் எரிக் பிரிசன் காட்சிக் கோணங்கள் காதலின் வருடலுடன், விறுவிறுப்பான போர்ச்சுகல் தெருக்களில் வலைந்து நெளிந்து தத்ரூபமாக கொடுத்து, ஆக்ஷன் காட்சிகள், கடத்தல் காட்சிகள், சிறைச்சாலை என்று திறமையான ஒளிப்பதிவால் தடம் பதித்துள்ளார்.

முதல் காட்சியில் ஏற்படும் பரபரப்பை கடைசி காட்சி வரை ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் தக்க வைத்துள்ளார்.

இயக்குனர் விஷ்ணுவர்தனின் நெசிப்பாயா காதலிக்காக வெளிநாடு சென்று மீட்டெடுக்கும் காதலனின் காதல், தொழிலதிபரின் இன்னொரு முகத்துடன் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம். தன்னுடைய ஸ்டைலிஷ் கண்ணோட்டத்தில் கொஞ்சம் காதலை சொல்லி அதில் பல அதிரடி திருப்பங்களை கொடுத்து மனதை கவரும் விதமாக தோய்வில்லாமல் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதியில் கௌரவம், அந்தஸ்திற்காக பெரும் பணக்காரர்களின் குள்ளநரி வாழ்க்கையையும், அதற்காக குடும்பத்தைப் பற்றி கூட கவலைப்படாத அதிகாரவர்க்கத்தின் நிலையையும் பலிகாடாக எது வேண்டுமானலும் செய்வார்கள் என்பதை தோலுரித்து காட்டி தெள்ளத் தெளிவாக புத்துணர்ச்சியோடு  இயக்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

மொத்தத்தில் XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் நேசிப்பாயா காதல் கலந்த சுவாரஸ்யமான த்ரில்லரை பிரமாண்டத்துடன் நேசித்து ரசிக்கலாம்.