நானே வருவேன் விமர்சனம் : வித்தியாசமான க்ரைம் த்ரில்லரில் இரட்டை குழல் துப்பாக்கியாக வெற்றியை நோக்கி சீறிப் பாய்கிறது | ரேட்டிங்: 4/5

0
1865

நானே வருவேன் விமர்சனம் : வித்தியாசமான க்ரைம் த்ரில்லரில் இரட்டை குழல் துப்பாக்கியாக வெற்றியை நோக்கி சீறிப் பாய்கிறது | ரேட்டிங்: 4/5

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருக்கிறார் செல்வராகவன். இதில் இந்துஜா, எல்லி அவரம், இளைய திலகம’ பிரபு, யோகி பாபு, ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.செல்வராகவன் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

இசை : யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு : புவன் சீனிவாசன், தயாரிப்பு வடிவமைப்பு : ஆர்.கே.விஜய முருகன்,நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா, பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், டைமண்ட் பாபு.

இரட்டையர்கள் பிரபு மற்றும் கதிர் (தனுஷ்). சிறுவயதிலிருந்தே பிரபு அமைதி, பொறுமை என்றால் கதிர் முரட்டு சுபாவம், கோபம் கொண்டவனாகவும் அடங்காதவனாகவும் இருக்கின்றான். அப்பொழுது கதிர் சிறு தவறு செய்ய திருந்துவதற்காக அவனது தந்தை வீட்டின் வெளியே கட்டி போட்டு விடுகிறார். இரவில் கயிறை அறுத்து செல்ல சைக்கோ செல்வராகவனிடம் மாட்டிக் கொள்கிறான். அவரிடமிருந்து தப்பிக்க முயலும் போது செல்வராகவனை கொன்று விடுகிறான் கதிர். அவனை தேடி வரும் பெற்றோர் கதிரை கண்டுபிடித்து போலீசிடம் மாட்டாமல் பார்த்துக் கொள்கின்றனர்.  இவனது மோசமான நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கதிரை நல்வழிப்படுத்த அவனது பெற்றோர் எவ்வளவு முயன்றாலும் முடியாமல் போகிறது. ஒரு நாள் தன் தந்தையை கொன்று விட, அண்ணனை பெட்டியில் பூட்டி வைக்கிறான். வெளியில் சென்று திரும்பி வரும் தாய் வீட்டில் கதிரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்து அண்ணன் பிரபுவை காப்பாற்றி வேறு வழியின்றி மீண்டும் பொய் சொல்லி கதிரை மீட்கிறார். அதன் பின் ஜோதிடரின் அறிவுரைப்படி கதிரை கோயில் வாசலில் அனாதையாக விட்டு விட்டு பிரபுடன் ஊரை விட்டே சென்று விடுகிறார். இருபது ஆண்டுகள் கழித்து பிரபு நல்ல வேலையில் சேர்ந்து மனைவி இந்துஜா, மகள் ஹியா தவேவுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திடீரென்று மகளின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தை பிரபு காண்கிறார். தனியாக பேசுவதும், படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பதும், பயத்துடன் இருப்பது போல் பிரபு உணர்கிறார். அதன் பின் மனநல மருத்துவரிடம் மகளை அழைத்துச் சென்று ஆலோசனை பெறுகிறார். அவரின் யோசனைப்படி மகளை பயமுறுத்தும் ஆமானுஷ்யத்தின் ஆசையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்கிறார். சோனு என்ற ஆமானுஷ்யத்தின் ஆசைப்படி கதிர் என்பரை கொன்று தன் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சொல்ல, கதிரை தேடி பிரபு தன் மகளை அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு சென்ற பிறகு தான் தன் சொந்த தம்பி கதிர் என்பதும் அவரின் மகன்கள் இரட்டையர்கள் என்பதும், அதில் ஒருவன் இறந்த சோனு என்பதை அறிகிறார். அதன் பின் பிரபு கதிரை கொன்றாரா? மகளை ஆட்டி படைக்கும் ஆமானுஷ்ய சக்தியிடமிருந்து மீட்டாரா? இரட்டையர்கள் ஏன் பிரிக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கு இடையே என்ன உறவு? சோனு ஏன் இறந்தான்? உண்மையில், இந்த சகோதரர்களின் கதை என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

வழக்கம் போல், தனுஷ் இரண்டு வேடங்களுக்கும் சொந்தக்காரர். ஸ்டைலீஷான தலைமுடி, கிளீன் ஷேவ் செய்த முகம், அதட்டல், உருட்டல், மற்றும் கொடூர செயல் செய்யும் கெட்ட பையன் கதிராக இருந்தாலும், சாந்தமாக முகம், இளநரையுடன் பாசமிகு தந்தையாக நல்லவன் பிரபுவாக இருந்தாலும் தனுஷின் நடை, உடை, பாவனை வேறுபட்டு வெவ்வேறு பரிணாமத்துடன் தனக்கான தனித்துவமான அக்மார்க் முத்திரை பதிப்பதில் ஜொலித்திருக்கிறார். இரண்டு  பேருமே குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து குடும்பம் உடையாமல் பார்த்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.  இந்த பாசம், சென்டிமெண்ட் இருவரின் குணாதிசயங்களை பொறுத்து வேறுபடுத்தி காட்டியிருப்பதில் தனுஷ் தனித்து நிற்கிறார்.

பிரபு (தனுஷ்) மனைவியாக இந்துஜா ரவிச்சந்திரன்,கதீரின் ஊமை மனைவியாக எல்லி அவரம் இருவருக்குமே அளவான காட்சிகள் என்றாலும், எல்லி அவரம் கதாபாத்திரம் அன்பு கலந்த பயத்தை உணர்ச்சிகளுடன் தன் முகத்தில் காட்டுவதில் சிறப்பாக செய்துள்ளார்.

மனநல மருத்துவர் வேடத்தில் இளைய திலகம் பிரபு, சிறப்பு தோற்றத்தில் பொறுத்தமான கதாபாத்திரம் சைக்கோ மனிதனாக செல்வராகவன், சிரிக்க வைக்க முடியாமல் திணறும் யோகிபாபு, துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரமான ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன் ஆகியோர் உயிரோட்டமான நடிப்பு படத்திற்கு பலம்.

தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி எப்பொழுதுமே வெற்றி கூட்டணி.இதில் யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ் ஆகியோரின் பாடல்களில் யுவன் சங்கர் ராஜா இசை சேர்ப்பு அற்புதமான செவிக்கு விருந்து.  வீர சூர தீம் மியூசிக்கில் தனுஷின் கதிர் நடக்கும்போது, நீங்கள் தானாகவே கெட்டவனுக்கு உற்சாகமூட்டுவீர்கள். வழக்கம் போல தனது பிஜிஎம் மூலம் பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

திரைக்கதைக்கேற்ற சுவாரஸ்யத்தை கூட்டும் சஸ்பென்ஸ் மெய் சிலிர்க்கும் வண்ணம் காட்சிக் கோணங்களை திறம்பட கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
யதார்த்தமான சண்டைக் காட்சி அமைத்த திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா, புவன் சீனிவாசனின் படத் தொகுப்பு செல்வராகவனின் வித்தியாசமான கான்செப்டுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இரட்டை சகோதார்கள், மாறுபட்ட குணாதியசயங்கள், பிரியும் வாழ்க்கை பாதை, ஒன்றிணைக்கும் ஆமானுஷ்ய சக்தி, சகோதரர்களின் சண்டை இதில் காதல், பாசம், சென்டிமெண்ட் கலந்து முதல் பாதியை பிரபுவின் வாழ்க்கை, இரண்டாம் பாதி கதிரின் வாழ்க்கையாக பிரித்து இறுதியில் உளவியல் கலந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக திகில் திரில்லராக கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

முதல் பாதியில் ஹாலிவுட் பாணியில் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ஆமானுஸ்ய சத்தியை கண்டுபிடிக்க பல சிலிர்ப்பான தருணங்களை உருவாக்கி கொடுத்திருப்பதில் வெற்றி பெறுகிறார். இரண்டாம் பாதி எதிர்பார்த்த ஒன்றாக அமைந்திருந்தாலும் இயக்குனர் செல்வராகவனுக்கே உரித்தான கிளாசிக் டச்சுடன் நேர்த்தியாக இரண்டாம் பாகம் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகளுடன் முடித்துள்ளார். கதையில் சில இடங்களில் விரிவான விளக்கங்கள் இல்லாமல் இருந்தாலும், கதையின் போக்கில் சொல்லிவிடுவதால் அது குறையாக தெரியாத வண்ணம் தனுஷின் திறமையான நடிப்பில் ஈடு செய்து மறக்க செய்து விடுகிறார்.

மொத்தத்தில் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் நானே வருவேன் வித்தியாசமான க்ரைம் த்ரில்லரில் இரட்டை குழல் துப்பாக்கியாக வெற்றியை நோக்கி சீறிப் பாய்கிறது.