தோழர் சேகுவேரா சினிமா விமர்சனம் (Thozhar cheguevara Movie Review): ‘தோழர் சேகுவேரா’ சாதி பாகுபாட்டை எதிர்த்து எழுச்சியோடு கிளர்ச்சி செய்யும் வன்முறை புரட்சியாளன் | ரேட்டிங்: 2.5/5
கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் சார்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்து அலெக்ஸ் ஏ.டி நடித்து எழுதி இயக்கியிருக்கும் படம் தோழர் சேகுவேரா
இதில் சத்யராஜுடன் இணைந்து மொட்டை ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ், நீல் ஆனந்த், மற்றும் அனிஷ் எட்மண்ட் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை பி.எஸ் அஷ்வின், ஒளிப்பதிவு சாம் அலன், எடிட்டிங் கவுதம் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு குணா.
வேங்கையநல்லூரில் ஜாதி பாகுபாட்டின் விளைவாக நடந்த சண்டையில் பலர் இறந்திருக்க இதற்கு காரணமான நெப்போலியனைப் (இயக்குனர் அலெக்ஸ்) பற்றி கல்லூரி பேராசிரியர் சேகுவேரா(சத்யராஜ்) விவரிப்பதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது. நெப்பொலியன்; சிறு வயதிலிருந்தே தன் சமூகத்திற்கு நடக்கும் சாதிய வன்கொடுமைகளை கேள்விப்பட்டும், அனுபவித்தும் வளர்ந்தவன். இதற்கு அந்த ஊரில் வலம் வரும் அகில உலக மக்கள் கட்சியின் அரசியல் தலைவர் கலியபெருமாள் முக்கிய காரணகர்த்தாவாக இருப்பதுடன், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் யாரும் படித்து விடக்கூடாது, முன்னேறக் கூடாது என்பதை கவனத்துடன் கையாண்டு, அவர்களை பயத்துடன் இருக்க வைக்கிறார்.இந்நிலையில் நெப்பொலியனின் தாய் தன் மகனை படிக்க வைத்து பெரிய பதவிக்கு வந்து தன் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகிறான் நெப்போலியன். ஆனால் வறுமையின் காரணமாகவும், கலியபெருமாள் கொடுக்கும் அழுத்தத்தாலும் கல்லூரியில் சேர முடியாமல் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடையில் வேலைக்கு சேர்கிறான். இதனிடையே அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சேகுவேரா ஏழை மாணவர்களை அரவணைத்து, கல்லூரியில் சேர இலவச நுழைவு தேர்வு பயிற்சி வகுப்பு எடுத்து உதவி செய்கிறார். இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து நெப்போலியன் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் கலியபெருமாளின் மகனும் சேர்கிறார். முதலாம் ஆண்டிலிருந்து கலியபெருமாளின் மகன், கல்லூரி முதல்வர் மற்ற பேராசிரியர்கள் நெப்போலியனை சாதி வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் படிக்க உதவிக் தொகை வழங்குவதிலும்; தாமதம் செய்கிறார்கள். இதற்காக உதவி செய்யும் சேகுவேராவையும் வேலையை விட்டு தூக்கி விடுகிறார்கள். எப்படியாவது படித்து முடித்து விட்டு செல்லலாம் என்று பொறுத்து போகும் நெப்போலியன் கலியபெருமாள் மகன் ஒரு சிறுமியை ஜாதி ரீதியாக அவமானப்படுத்த நினைக்கும் போது வெகுண்டெழுந்து அடித்து விடுகிறான். இந்த சம்பவத்திலிருந்து அரசியல்வாதி கலியபெருமாள் நெப்போலியனை பழி வாங்க துடிக்கிறார். அதன் பின் நடந்த சம்பவங்கள் என்ன? அதிகார வர்க்கத்தின் தாக்குதலிருந்து உயிர் பிழைத்தாரா நெப்போலியன்? அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
கதையின் நாயகன் நெப்போலியனாக இயக்குனர் அலெக்ஸ் ஏ.டி நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞனான வெறித்த பார்வை, நடை, உடை, பாவனையை பிரதிபலிப்பதோடு, பொறுமையும், நிதானமும் கொண்ட மாணவராக பின்னர் பொறுத்தது போதும் பொங்கி எழுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ஆர்ப்பாட்டமான ஆக்ஷன் காட்சிகளை திறம்பட செய்துள்ளார்.
கல்லூரி பேராசியர் சேகுவேராவாக சத்யராஜ், சிறிது நேரமே வந்தாலும் முதல்வருடனும், அரசியல்வாதியுடனும் ஏற்படும் வாக்குவாதத்தில் உணர்ச்சிகரமான வசனங்களை பேசுவதும், நெப்போலியனை தைரியமிக்க மாணவனாக வழி நடத்தும் விதத்திலும் தேர்ந்த நடிப்பில் ஜொலிக்கிறார். கல்லூரியை விட்டு செல்லும் போது நான் போகிறேன் பின்னாடியே வந்து விடாதே என்று அறிவுரை கூறியும், கதையின் சாரம்சத்தை சொல்லும் பின்னணிகளை படத்தில் விவரித்து சொல்வதிலும் தன் இருப்பை சரியாக செய்துள்ளார்.
சிரிக்க வைக்க முயற்சித்திருக்கும் மொட்டை ரஜேந்திரன், எழுச்சியூட்டும் வசனங்களை பேசி தைரியம் கொடுக்கும் தோழர் நாஞ்சில் சம்பத், நயவஞ்சக அரசியல் தொண்டனாக கூல் சுரேஷ், நீல் ஆனந்த், மற்றும் தயாரிப்பாளர் கலியபெருமாளின் மகனாக வில்லத்தனத்தில் சிறப்பாக மிரட்டும் கல்லூரி மாணவனாக தயாரிப்பாளர் அனிஷ் எட்மண்ட் பிரபு ஆகியோரின் பங்களிப்பு படத்தின் போக்கை மாற்ற முயற்சித்துள்ளது சிறப்பு.
இவர்களுடன் ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கௌதம் ராஜேந்திரன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஜாதி ரீதியான காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட, குரல்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவலங்களை தோலூரித்து, அதிகார வர்க்கத்தின் அராஜகத்தால் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க புறப்படும் ஒரு ஏழை இளைஞனின் வாழ்வியலையும், சந்திக்கும் இன்னல்களையும் அடிதடி ஆக்ஷன் களத்துடன் ரத்தம் சிந்த சிறப்பாக கொடுக்க முயற்சி செய்து இரண்டாம் பாகத்திற்கான அறிகுறியுடன் முடித்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் ஏ.டி.
மொத்தத்தில் கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் சார்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்திருக்கும் ‘தோழர் சேகுவேரா’ சாதி பாகுபாட்டை எதிர்த்து எழுச்சியோடு கிளர்ச்சி செய்யும் வன்முறை புரட்சியாளன்.