திரையின் மறுபக்கம் விமர்சனம் : திரையின் மறுபக்கம் சினிமாத்துறையில் நடக்கும் தில்லாலங்கடி ஏமாற்று வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டி எச்சரிக்கும் மாயஉலகின் கண்ணாடி | ரேட்டிங்: 2.5/5

0
236

திரையின் மறுபக்கம் விமர்சனம் : திரையின் மறுபக்கம் சினிமாத்துறையில் நடக்கும் தில்லாலங்கடி ஏமாற்று வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டி எச்சரிக்கும் மாயஉலகின் கண்ணாடி | ரேட்டிங்: 2.5/5

திரையின் மறுபக்கம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு இயக்கியுள்ளார் நிதின் சாம்சன்.

நடிகர்கள்: முகமது கவுஸ், மணிகண்டன், ஹேமா ஜெனிலியா, நிதின் சாம்சன், ஸ்ரீP ரிஷா, ஜோதி, யாசர், சத்தியண்ணதுரை.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – அனில் என் சி, எடிட்டிங் – நிஷாந்த் ஜேஎன்எஸ்,பிஜிஎம் – ரித்திக் மாதவன்,டிஐ – பங்கஜ் ஹல்தேர், பிஆர்ஓ – சிவக்குமார்.

விவசாயியான சத்தியமூர்;த்தி தீவர சினிமா ரசிகர், அவரின் தீராத ஆசையை அறிந்து கொண்ட ஏமாற்று பேர்வழி இயக்குனர் செந்தில் அவரை அணுகி படத்தை தயாரித்தால் விரும்பிய நடிகரோடு ஒரே மேடையில் அமரும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார். இவரின் பேச்சை நம்பி நிலத்தை விற்று பணத்தை இயக்குனர் செந்திலிடம் கொடுக்க, படு மோசமாக ஒரு படத்தை எடுத்து கொடுத்து விடுகிறார். அந்தப் படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் தயாரிப்பாளர் அதை எப்படியாவது வியாபாரம் செய்தால் போதும் என்று விநியோகஸ்தர்களை அணுகுகிறார். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு கவர்ச்சியான பாடல், சண்டை மற்றும் அனுபவமுள்ள நல்ல தெரிந்த நடிகர்களை வைத்து நகைச்சுவை காட்சிகளை சேர்த்தால் படத்தை வாங்கிக் கொள்வதாக கூறுகின்றனர். அதனை நம்பி வீட்டை சினிமா பைனான்சியர் அன்பரசிடம் அடமானம் வைத்து சத்தியமூர்த்தி பணத்தை கொடுக்க மீதிக் காட்சியை இயக்குனர் செந்தில் எடுக்கிறார். அதுவும் சரியாக இயக்குனர் செந்தில் எடுக்காததால் படத்தில் நடித்த ஹீரோ மற்றும் உதவி இயக்குனர்கள் உதவியுடனும் தயாரிப்பாளர் சத்தியமூர்;த்தி படத்தை எடுத்து முடிக்கிறார். இந்த சமயத்தில் பணமதிப்பிழப்பு  ஏற்பட, விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கின்றனர். அதன் பின் படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கும், அதனை விநியோகஸ்தர்களை தேடி கண்டுபிடித்து வியாபாரம் செய்யவும் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு பக்கம் பணம் கொடுத்தவர் பணம் கேட்டு சத்தியமூர்த்தி நெருக்கடி கொடுக்க மற்றொரு பக்கம் சினிமா பைனான்சியர் அன்பரசு அவரது வீட்டிற்கு சென்று அவரை அவமானப்படுத்தி, அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டைவிட்டு வெளியேற்றி வீட்டை அபகரிக்கிறார். இதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் சத்தியமூர்;த்தி தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் தயாரிப்பாளர் சத்தியமூர்த்தியின் படம் வியாபாரம் ஆனதா? அவரது குடும்ப நிலை என்ன ஆனாது? அன்பரசுவை கைது செய்தார்களா? படம் வெற்றிகரமாக வெளி வந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விவசாயி மற்றும் தயாரிப்பாளர் சத்தியமூர்த்தியாக முகமது கவுஸ் சிறந்த தேர்வு. அச்சு அசலாக ஏமாளியாக, சொன்னதையெல்லாம் நம்பும் அப்பாவியாக, வெள்ளந்தி மனதுடன்,இயக்குனரை திட்டுவதற்கு கூட யோசிப்பவராக, படத்தை வியாபாரம் செய்ய எடுக்கும் முயற்சிகள், அதற்காக கடன் மேல் கடன் வாங்கி கஷ்டப்படுவதை தன்னுடைய தேர்ந்த நடிப்பால் மனதில் பதிந்து விடுகிறார்.

இயக்குனர் செந்திலான மணிகண்டன் ஒருவரை எப்படியெல்லாம் ஏமாற்றி பிழைக்கலாம் என்பதை கற்றுத் தேர்ந்த இயக்குனர் கதாபாத்திரத்தில் வசனத்திலும், சில இடங்களில் நகைச்சுவையிலும் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார். அதே சமயம் ஹீரோயினிடம் மறுப்பு தெரிவிக்கும் இடத்தில் அறிவுரை கூறி தனித்து நிற்கிறார்.

கதாநாயகியாக வர முயற்சிக்கும் புதுமுகமாக படத்தில் ஹேமா ஜெனிலியா, தயாரிப்பாளர் எடுத்த படத்தில் ஹீரோவாக வரும் நிஜ தயாரிப்பாளர் நிதின் சாம்சன், இவர்களுடன் ஸ்ரீP ரிஷா, ஜோதி, யாசர், சத்தியண்ணதுரை ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

இசை – அனில் என் சி, எடிட்டிங் – நிஷாந்த் ஜேஎன்எஸ் ஆகியோரின் பங்களிப்பு இயன்றவரை சிறப்பாக கொடுக்க முயற்சி செய்துள்ளனர்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது எந்த துறையிலும் இருக்கிறார்கள். அதிலும் பணம் அதிகம் புழங்கும் சினிமாத்துறை மட்டும் விதிவிலக்கல்ல. அப்படி ஏமாறும் சினிமா தயாரிப்பாளரின் கதையைத் தான் திரையின் மறுபக்கம் ஆணித்தரமாக சொல்கிறது. ஒரு படத்தை எடுப்பது முதல் அதை வெளியிடுவது வரை இடைப்பட்ட காலத்தில் சினிமா பற்றி தெரியாத தயாரிப்பாளர்கள் எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், செலவுகளை செய்ய வைக்கிறார்கள், வட்டிக்கு கடன் பெற்று துன்பப்படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக சொல்லி அதை வெளிப்படையாக நகைச்சுவை கலந்து இயக்கியிருக்கிறார் நிதின் சாம்சன். திரைக்கதையில் இன்னும் அழுத்தத்தோடு இயக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இவரின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் நிதின் சாம்சன் தயாரித்திருக்கும் திரையின் மறுபக்கம் சினிமாத்துறையில் நடக்கும் தில்லாலங்கடி ஏமாற்று வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டி எச்சரிக்கும் மாயஉலகின் கண்ணாடி.