திரு.மாணிக்கம் சினிமா விமர்சனம் : திரு.மாணிக்கம் தடைகளை தாண்டி நேர்மையை சோதிக்கும் லட்சிய தேடுதல் பயணம் | ரேட்டிங்: 3/5
ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ஜிபி ரேகா ரவிக்குமார, சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்திருக்கும் திரு.மாணிக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி.
இதில் பி.சமுத்திரக்கனி – மாணிக்கம், பாரதி ராஜா – மாதவபெருமாள், அனன்யா – சுமதி, தம்பி ராமையா – லண்டன் திரும்பிய வணிகர், இளவரசு – பெரியப்பா, நாசர் – வாப்பா, சின்னி ஜெயந்த் – தேவாலய தந்தை சாமுவேல் , வடிவுக்கரசி – கற்பகம், கிரேசி – செல்லம்மாள் , கருணாகரன்- சர்குணம், சுனில்குமார் – கேசவன், சந்திரு, சாம்ஸ் – பஸ் டிரைவர்கள் – நாராயணன், ஸ்ரீமன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- பாடல் வரிகள்: சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன், சொர்க்கோ, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சுகுமார், எடிட்டிங் – குணா, கலை- சாஹ{, எடிட்டிங் மேற்பார்வை- ராஜா சேதுபதி, இயக்குனர் குழு- சுபாஷ்.கே, சதீஷ் பாலா, கார்த்திக் காமராஜ், தேனா சக்திவேல், ஜெய்சங்கர்.பி, மேக் அப் – ஜி.சுரேஷ் குமார், காஸ்ட்யூமர் – ஆர்.முருகன், ஸ்டண்ட்ஸ் – தினேஷ் காசி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – சேது.சி, மிக்சிங் – டி.உதய் குமார் , டப்பிங் – பரணி ஸ்டுடியோஸ் ராஜா மற்றும் கோவிந்த், ஸ்டில்ஸ் – கே.ராஜ், தயாரிப்பு நிர்வாகி – அழகர் குமாரவேல், வெளியீடு – மாஸ்டர் பீஸ், பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்.
கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளியில் மனைவி சுமதி (அனன்யா) இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் நடுத்தர வாழ்க்கை வாழும் லாட்டரி சீட்டு மற்றும் புத்தகம் விற்பனை செய்யும் சராசரி மனிதர் மாணிக்கம் (சமுத்திரகனி). இரண்டாவது மகளுக்கு பேசும் திறன் குறைபாடு சிகிச்சை, மனைவியின் தம்பிக்கு வெளிநாட்டு பயண செலவு, லாட்டரி சீட்டு கடை இடம் மாறுதல் என்று ஏகப்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறும் போது மனைவி சுமதி தன் தங்கச் சங்கலியை கொடுத்து பணம் வாங்கிக் கொள்ள சொல்கிறார். இதனிடையே மாணிக்கத்தின் கடைக்கு முதியவர் மாதவபெருமாள் ( பாரதிராஜா) தட்டுத்தடுமாறி வருகிறார். தன் மகளின் பிரசவ செலவு, கல்யாணத்தில் பேசிய நகையை கொடுக்க வேண்டிய கட்டாயம், மனைவிக்கு மருத்துவ செலவு என்று தன் மனக்குமறலை சொல்லி மாணிக்கத்திடம் லாட்டரி சீட்டை வாங்கும் நேரத்தில் பணம் காணாமல் போக வேறு வழியின்றி மறுநாள் வந்து பணத்தை கொடுத்து அந்த லாட்டரி சீட்டை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். மாணிக்கம் முதியவரின் லாட்டரி சீட்டை பத்திரமாக வைக்கிறார். மறுநாள் குலுக்கலில் முதியவர் லாட்டரி சீட்டிற்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. இதனால் சந்தோஷ அதிர்ச்சியில் இருக்கும் மாணிக்கம் இடுக்கியில் அந்த முதியவரிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க புறப்படுகிறார். அதற்கு முன் தன் மனைவியிடம் லாட்டரி பரிசு பற்றி கூற கடனை அடைக்கவும், செலவுகளை சமாளிக்கவும், மருத்துவ செலவிற்கும் உதவும் பணத்தை கொடுக்க வேண்டாம் என்று மனைவி தடுத்தும் முதியவரை பார்க்க இடுக்கிக்கு பஸ்ஸில் ஏறிச் செல்கிறார். இதனால் கோபமடையும் சுமதி தன் தம்பி, உறவினர்கள், பாதரியார் என்று ஒருவரை விடாமல் தொடர்பு கொள்ளச் செய்து மாணிக்கத்தின் மனதை மாற்ற நினைக்கிறார். ஆனால் மாணிக்கம் தன் முடிவை மாற்றாமல் அவர்களிடம் செல்லும் இடத்தின் விவரத்தை தெரிவிக்காமல் பயணிக்கிறார். இறுதியில் மாணிக்கத்தால் முதியவர் மாதவபெருமாளை சந்திக்க முடிந்ததா? லாட்டரி சீட்டை கொடுக்க முடிந்ததா? அல்லது தன் உறவினர்களின் வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தாரா? போலீஸ் மாணிக்கத்தை துரத்த காரணம் என்ன? உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த பரிசு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி மாசற்ற திரு.மாணிக்கமாக தன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்த நடிப்பால் நேர்மையான நல்ல மனிதராக புகழ் சேர்த்திருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் அழுத்தத்துடன் நிதானமாக யோசித்து முடிவு செய்வது, மனைவியின் எண்ணத்திற்கு அடிபணியாமல் தன் போக்கில் பயணிப்பது,தனக்கு நெருக்கடி கொடுக்கும் நேரத்தில் போனை சுவிட்ஸ் ஆப் செய்வது, போனில் தன் ஃபிளாஷ்பேக் கதையை மகளுக்கு எடுத்துரைத்து நேர்மையின் வலிமையை உணர்த்துவது இறுதியில் முதியவரின் சந்தோஷத்தை கண்டு அகமகிழ்வது என்று அவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடத்தில் தனித்து நிற்கிறார்.
முதியவர் மாதவ பெருமாளாக அனுபவ நடிப்பும் ஏழ்மையின் பரிதவிப்பையும் ஒருசேர உணர செய்கிறார்.
அனன்யா மனைவி சுமதியாக நிதானத்தை முதலில் கடைபிடித்து, பின்னர் விடாப்பிடியாக தன் கணவனை சம்மதிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் என்று இரு வித குணாதிசியங்களை வேறுபடுத்தி காட்டி அசத்தியுள்ளார். குறிப்பாக தன் மகள்களை காட்டி மிரட்டிவிட்டு, கணவன் திரும்பி கூப்பிடும் போது, அதை எடுக்காமல் உணவை பரிமாற சொல்லி சாப்பிடும் இடத்தில் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.
நகைச்சுவை என்ற பெயரில் நெளிய வைக்கும் தம்பி ராமையா, பெரியப்பாவாக இளவரசு, சில காட்சிகள் என்றாலும் வாப்பாவாக நாசர் நெகிழ வைத்து விடுகிறார், பாதரியராக சின்னி ஜெயந்த், பாரதிராஜாவின் மனைவியாக வடிவுக்கரசி, கிரேசி, கருணாகரன், சுனில்குமார், சந்திரு, சாம்ஸ், ஸ்ரீமன் மற்றும் பலர் குறைந்த நேரமே என்றாலும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
குமுளி, இடுக்கி ஆகிய இடங்களின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், பஸ் பயணம், லாட்டரி கடை, மாணிக்கத்தின் வீடு, துரத்தல் காட்சிகள் என்று காட்சிக் கோணங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
கலை இயக்குனர் சாஹ{வும், எடிட்டிங் குணாவும் கச்சிதமாக செய்துள்ளனர்.
நடிகர் வெற்றி, அரிஷ் பேரடி நடித்த பம்பர் படத்தின் சாயலுடன் லாட்டரி சீட்டை மையமாக வைத்து திரு.மாணிக்கம் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் நந்தா பெரியசாமி. தன் இளவயதில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற உயரிய எண்ணத்துடன் கொள்கை பிடிப்புடன் வாழும் மனசாட்சிக்கு பயந்த சாமன்ய மனிதரின் நேர்மைக்கு நடக்கும் பலப்பரீட்சையை விறுவிறுப்பாக, நேர்த்தியாக சொல்லி அதற்கான வெகுமதியையும் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
மொத்தத்தில் ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்திருக்கும் திரு.மாணிக்கம் தடைகளை தாண்டி நேர்மையை சோதிக்கும் லட்சிய தேடுதல் பயணம்.