தண்டுபாளையம் சினிமா விமர்சனம்: தண்டுபாளையம் இரக்கமற்ற மிருகத்தனம் நிறைந்த கொடூர கொலைகார கும்பலின் வெறியாட்டம் | ரேட்டிங்: 2.5/5
வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் கதை, திரைக்கதை,வசனம்,பாடல், தயாரிப்பு செய்து கே.டி.நாயக்குடன் சேர்ந்து இயக்கமும் செய்திருக்கும் படம் தண்டுபாளையம்
இதில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், டைகர் வெங்கட், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, சுமா ரங்கநாத், பூஜாகாந்தி, முமைத்கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – பி.இளங்கோவன், இசை – ஜித்தின் கே.ரோஷன், நடனம் – பாபா பாஸ்கர், மக்கள் தொடர்பு – வெங்கட்
பரம்பரை பரம்பரையாக 1990களின் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தொடர் கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளைச் ஒரு பிரபல குற்றக் பின்னணி கொண்ட கொடூரக் கும்பல் செய்த, உண்மையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது தண்டுபால்யம் திரைப்படக் கதை. தண்டுபாளையம் கொலைக் கும்பலைச் சேர்ந்த சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் போலீஸ் அதிகாரி டைகர் வெங்கட் வீட்டின் வேலைக்காரியை பகடைக்காயாக வைத்து அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து போலீஸ் அதிகாரியை கொலை செய்து கொள்ளையடித்து செல்வது போல் கதைக்களம் ஆரம்பிக்கிறது. இதற்கான பின்னணி என்ன என்பதே படத்தின் கதை விரிவடைகிறது. கர்நாடகா மாநிலத்தில் சுமா ரங்கநாத் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் பெரிய பங்களாக்கள், ஆரவாரம் இல்லாத தெருக்கள் ஆகியவற்றை நோட்டம் விட்டு கையில் குழந்தையோடு பெண்கள் வீட்டின் கதவைத்தட்டி தண்ணீர் கேட்க, அந்தப் பெண் உள்ளே செல்லும் வேளையில் பின்தொடர்ந்து சென்று கொலை செய்து விட்டு, பின்னர் தன் சகாக்களை உள்ளே கூப்பிட்டு கொள்ளையடித்து விட்டு, சாகும் தருவாயில் இருக்கும் பெண்ணை அந்த கும்பலைச் சேர்ந்த ஆண்கள் கற்பழித்து விட்டு வெளியேறுவதே இவர்கள் வழக்கம். தொடர்ச்சியாக இந்த கொலைகார கும்பலின் அட்டகாசத்தை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சி செய்வதற்குள், அவர்கள் அந்த நகரத்தை விட்டு மற்ற இடங்களுக்கு சுலபமாக தப்பிச் சென்றுவிடுவதில் கில்லாடிகள். கர்நாடகா முழுவதும் அவர்களின் அட்டகாசம் விரிவடைந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலர் பிடிபட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனை கிடைக்கிறது. தண்டுபாளையம் கும்பலை பிடித்து விட்டதாக போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் செய்திகள் பரவுகிறது. அதே சமயம் மறைமுகமாக அவர்களுக்காக வாதாட தண்டுபாளையம் கும்பல் தங்களுக்கு உதவி செய்யும் பல செல்வாக்குமிகுந்த நபர்களை அணுகி, வக்கீல்களை நியமிக்கின்றனர். அதனால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாறுகிறது. இதற்காக செலவாகும் பணத்திற்காக இவர்கள் இன்னும் தீவிரமாக கற்பழிப்பு, கொலை, கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அதனால் இந்த கொலைக்கும்பல் முழுமையாக பிடிபடவில்லை, இதற்கு பின்னால் பலர் இருக்கின்றனர் என்பதை க்ரைம் நிரூபரால் உண்மை வெளிவந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது. அதன் பின்னர் போலீஸ் அதிகாரி டைகர் வெங்கட் சமார்த்தியமாக மீதமிருக்கும் சுமா ரங்கநாத் கும்பலை பிடிக்க வியூகம் அமைக்கிறார். இந்த தண்டுபாளையம் கும்பலை கைது செய்தாரா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது? அதன் பின்னும் தொடர்ச்சியாக கொலைகள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் ரத்தக்களறியான க்ளைமேக்ஸ்.
சுமா ரங்கநாத் அசால்டாக புடவையை இழுத்து சொருகிக்கொண்டு நடந்து வரும் விதமும், ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஸ்கெட்ச் போட்டு விட்டு சாதாரணமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மற்றவர்களை வழி நடத்துவதும், கொலை, கொள்ளைக்கு உறுதுணையாக இருந்து, மனசாட்சியே இல்லாமல் ஆண்களின் அட்டகாசத்தை கண்டும் காணாதவாறு செல்வதும், பிடிபட்ட பிறகு சொல்லும் தெனாவட்டு பதிலுமாக பார்ப்பவர்களின் மனதில் வெறுப்பை நன்றாக சம்பாதித்து கொலைகார கொடூர தலைவியாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இக்காலத்து தண்டுபாளைய கொலைகாரிகளாக சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், போலீஸ் அதிகாரியாக டைகர் வெங்கட் கஷ்டப்பட்டு பிடித்து விட்டு அவர்களை விடுவித்து கால்களில் சுட்டு வரண்ட மலைபகுதியில் விட்டு விட்டு செல்லும் இடத்தில் தனித்து நிற்கிறார். அதனால் அவரை பழி வாங்க வரும் கும்பலிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
இவர்களுடன் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, வில்லத்தனத்தில் பூஜாகாந்தி, ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமான ஆட்டும் போட்டு விட்டு செல்லும் முமைத்கான் தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளனர். க்ரைம் வக்கீலாக வரும் ஸ்ரூதி இறுதியில் ஆபத்து என்று தெரிந்தும் கொலைகார கும்பலை தனியாக விசாரிக்க சந்திக்க செல்வது ஏன்? என்ற காரணம் புரியவில்லை.
ஒளிப்பதிவாளர் பி.இளங்கோவன் குற்ற சம்பவங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் விதம், பதற வைத்து பார்ப்பவர்களை நடுங்க வைத்து விடுகிறார்.
ஜித்தின் கே.ரோஷன் இசை மிரட்டல் ரகம்.
தனிமையில் இருக்கும் பெண்களிடம் இரக்கத்தை சம்பாதித்து, அவர்களை தாக்கி கற்பழித்து, கொடூரமாக கொலை செய்து, வீட்டில் கொள்ளையடித்து செல்லும் தண்டுபாளையம் கொலைகார கும்பலின் அட்டகாசத்தையும், அட்டூழியத்தையும் செய்யும் இரக்கமற்ற எண்ணிப் பார்க்க முடியாத நடுங்க வைக்கும் மனித மிருகங்களைப் பற்றிய படத்தில் வன்முறை, கற்பழிப்பு காட்சிகளை மிதமாக காட்சிப்படுத்தியிருந்தால் அனைவரும் பார்த்து விழிப்புணர்வும், எச்சரிக்கையோடு இருந்திருக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம் இயக்குனர்கள் கே.டி.நாயக் மற்றும் டைகர் வெங்கட். இருந்தாலும் சொல்ல வந்த கருத்து முன்பின் தெரியாதவர்களை வீட்டினுள் அனுமதிக்காதீர்கள், விபரீத விளைவுகளை சந்திப்பீர்கள் என்பதை கொடூர சம்பவங்களின் பின்னணியில் ரத்தமும் சதையுமாக உண்மையில் நடந்த சம்பவங்களை சொல்லியிருக்கின்றனர் என்பதற்காக பாராட்டலாம்.
மொத்தத்தில் வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்துள்ள தண்டுபாளையம் இரக்கமற்ற மிருகத்தனம் நிறைந்த கொடூர கொலைகார கும்பலின் வெறியாட்டம்.