டிராமா திரைவிமர்சனம் : டிராமா சிங்கிள் ஷாட் படமாக கொலையை கண்டுபிடிக்கும் திறமையான சாதுர்யமான பாதுகாப்பாளன் | ரேட்டிங்: 2/5

0
218

டிராமா திரைவிமர்சனம் : டிராமா சிங்கிள் ஷாட் படமாக கொலையை கண்டுபிடிக்கும் திறமையான சாதுர்யமான பாதுகாப்பாளன் | ரேட்டிங்: 2/5

ஜெயச்சந்திரன் பிபி, டாக்டர் ஜாலி அம்புகான் ஆகியோருடன் இணைந்து ஆண்டனி ராஜ் எம் தயாரித்து டிராமா படத்தை எழுதி அஜுகீழ்மாலா இயக்கியுள்ளார்.

இதில் கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஷினோஸ் – ஒளிப்பதிவு, பிஜிபால், ஜெய கே டோஸ் மற்றும் ஜெசின் ஜார்ஜ்; – இசை, பிஜிபால் பின்னணி இசை, பிஆர்ஒ – பரணி அழகிரி.

காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்கும் சப் இன்ஸ்பெக்டர் ஜெய் பாலாவின் காதலி காவ்யா பெல்லுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற, திடீரென மின்சார தடை ஏற்படும் நேரத்தில் தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். கொலையாளியை ஒரே நாளில் கண்டுபிடிக்க உயரதிகாரி கிஷோர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. பணிபுரிந்த காவலர்கள், கைதி, காதல் ஜோடி, சப்-இன்ஸ்பெக்டர், அவருடைய காதலி என்று விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்படுகின்றனர். இதில் உண்மையான குற்றவாளி யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? திட்டமிட்டு நடந்த கொலையா? என்பதே க்ளைமேக்ஸ்.

உயரதிகாரியாக கிஷோர் அதட்டல்,உருட்டல், மிரட்டல் தோரணையுடன் நடத்தும் விசாரணை அசத்தல் ரகம். அவருக்கு ஈடு கொடுத்து உதவிக்காக வரும் திருநங்கை போலீஸ் அதிகாரி சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களைத் தவிர சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி ஆகியோர் நாடகத்தன்மை கலந்து கதாபாத்திரங்களாக மாறியுள்ளனர்.

சிங்கள் ஷாட் பிலிம் என்பதால் ஒளிப்பதிவு கடினமானது என்பதால் ஷினோஸின்; உழைப்பு அபரிதமானது, பாராட்டுக்குரியது.

பிஜிபால், ஜெய கே டோஸ் மற்றும் ஜெசின் ஜார்ஜ் ஆகியோரின் இசை மற்றும் பிஜிபால் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

உலகின் முதல் நான்-லீனியர், சிங்கிள் ஷாட் படம் என்று இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகு இப்போது ‘டிராமா’ படம் ஒரே ஷாட்டில் உருவாகி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் போலீஸ் நிலையத்தைச் சுற்றியே படம் நகர்வதால் சிங்கிள் ஷாட் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அஜுகீழ்மாலா. இவரின் முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நம்பும்படியாக இல்லை. காவல் நிலையத்தில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகள் ஜெயில் கைதிக்கு பூட்டு கிடையாது, சுதந்திரமாக போய் விட்டு வருகிறார், போலீஸ் நிலையத்தில் காதல், நக்கல் தெனாவெட்டுடன் எடுத்தெறிந்து பேசும் போலீஸ்காரர், கான்ஸ்டபிள்களின் கூத்து, நடனம், பியூட்டி பார்லர் என்று காவல் நிலையத்தை வேறு மாதிரி காட்டியுள்ளார். இயக்குனர் அஜுகீழ்மாலா ஒரே படத்தில் ஒரே சிங்கிள் ஷாட்டில் காதல், நட்பு, பகை, பழி, பாடல், நடனம், கொலை, விசாரணை, கண்டுபிடிப்பு என்று காட்சிபடுத்த நினைத்த விதத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அழுத்தமான யதார்த்தமான கதையாக வந்திருக்கும். இருந்தாலும் க்ளைமேக்ஸ் காட்சியில் இணையதளத்தில் பதிவிட்ட கருத்து ஒரு உயிரை பலிவாங்க, அதற்காக காத்திருந்து பழி வாங்க காவல் நிலையத்திற்கு வந்து உணர்ச்சிகரமான வசனம் பேசி, அழுத்தமான இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார் இளம் பெண் மரியா பிரின்ஸ். இறுதியில் இவரின் நடிப்பு தான் படத்தின் ஹைலைட்.

மொத்தத்தில் ஜெயச்சந்திரன் பிபி, டாக்டர் ஜாலி அம்புகான் ஆகியோருடன் இணைந்து ஆண்டனி ராஜ் எம் தயாரித்திருக்கும் டிராமா சிங்கிள் ஷாட் படமாக கொலையை கண்டுபிடிக்கும் திறமையான சாதுர்யமான பாதுகாப்பாளன்.