டக்கர் சினிமா விமர்சனம் : டக்கர் ஒரு தலைகாதல் மக்கர் செய்ய டக்கராக தூக்கி இளைஞர்களுக்கு இளமை துள்ளலுடன் கவர்ச்சி ஆக்ஷன் கலந்த துரத்தல் விருந்து | ரேட்டிங்: 3/5

0
426

டக்கர் சினிமா விமர்சனம் : டக்கர் ஒரு தலைகாதல் மக்கர் செய்ய டக்கராக தூக்கி இளைஞர்களுக்கு இளமை துள்ளலுடன் கவர்ச்சி ஆக்ஷன் கலந்த துரத்தல் விருந்து | ரேட்டிங்: 3/5

பேஷன் ஸ்டுடியோஸ் சுந்தர் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்திருக்கும் டக்கர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் ஜி கிரிஷ்.

இதில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அருண் வைத்தியநாதன், விஸ்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:இசை : நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டிங் : ஜி.ஏ.கௌதம், கலை : உதய குமார் கே, ஸ்டண்ட் : தினேஷ் காசி, கதை : ஸ்ரீனிவாஸ் கவிநயம், நடனம் : சதீஷ், ஸ்ரீதர்,மக்கள் தொடர்பு : டி ஒன்.

அம்மா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வறுமையில் வாழும் குணசேகரன் (சித்தார்த்), பணக்காரன் ஆகியே தீருவேன் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து, பணம் சம்பாதிக்க பல்வேறு விஷயங்கள் செய்கிறார். அவரது கோபம் அவருக்கு எப்போதும் பிரச்சினைகளை உருவாக்க கடைசியாக பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்து டாக்சி ஓட்டுகிறார். ஒரு விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்து, உரிமையாளர் அவரைத் தாக்கி சம்பளமில்லாமல் டிரைவராக  வேலை செய்ய சொல்கிறார். நிறைய பணப் பிரச்சனைகளலும், அவமானத்தாலும் சாக முடிவு செய்யும் குணசேகரன் ரவுடி கும்பல் இருக்கும் ஏரியாவில் சென்று கலாட்டா செய்கிறார். இறப்பதற்கான வழிகளைத் தேடும் போது, குணா தன்னை முன்பு ஏமாற்றிய ஒரு ரவுடியைச் காண்கிறான். குணா அவனை அடித்து விட்டு அவனது காரை எடுத்துச் செல்கிறான். இச்சூழலில், வில்லன் கும்பலால் காரின் டிக்கியில் கடத்தப்பட்ட பெரிய தொழிலதிபரின் மகள் லக்கியை (தியான்ஷா கௌஷிக்) சந்திக்கிறான். லக்கி தன் இஷ்டப்படி செய்தால் சம்பளத்துடன் பணம் தருவதாக கூற அவளை அழைத்துச் செல்கிறான்.அதன் பின் நடந்தது என்ன? லக்கி கடத்தப்பட்டது ஏன்? இருவரையும் துரத்தும் வில்லன் கும்பலிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சாதா இமேஜிலிருந்து ‘டக்கர்’ இமேஜிற்கு மாறியிருக்கிறார் சித்தார்த். குறுந் தாடி, புதிய கெட்டப், பணம் சம்பாதிக்க ஆசை, லக்கியுடன் காதல், அது நிறைவேறாத போது மனஉளைச்சல் ஏற்படும் இடங்களிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் தூள் பரத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் அதிரடி நெருக்கம் அதிகம்.

படம் முழுவதும் வரும் திவ்யன்ஷா கௌசிக் அல்ட்ரா மாடர்ன் யுவதியாக, எதற்கும் துணிந்த பெண்ணாக, அரைகுறை ஆடை, மது, சிகரேட் என்று பணக்கார திமிர் பிடித்த பெண்ணின் குணாதியங்களை அப்பட்டமாக வழங்கியுள்ளார். அழகு, இளமை, துணிச்சல், தைரியம் கலந்த கலவையாக கவர்ச்சியில் வசீகரிக்கிறார்.

வில்லனாக அபிமன்யு சிங், யோகி பாபுவின் கதாபாத்திரத்தில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. முனீஸ்காந்த் திரைப் பிரவேசம் குறைவாக இருந்தாலும் சிறப்பு செய்துள்ளார். நண்பனாக ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் தனித்து இயல்பாக நடித்துள்ளார்.

நிவாஸ் பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசையில் உறுதியான மதிப்பை சேர்க்கிறது. நேர்த்தியான வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவும், ஜி.ஏ.கௌதமின் படத்தொகுப்பும், தினேஷ் காசியின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், இவர்களின் கண்ணியமான கூட்டணி கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பணத்தை சம்பாதிக்க ஆசைப்படும் பயந்த சுபாவம் உள்ள இளைஞன், சாவை எதிர்கொள்ளும் போது ஏற்படும் மாற்றம் பலசாலியாக மாற்ற  பணத்தை வெறுக்கும் கோடீஸ்வர காதலியை தைரியமாக கை பிடிக்கும் கதைக்களத்தை நிறைய கவர்ச்சி, அதிவேக ஆக்ஷன், துரத்தல் காட்சிகள் இணைத்து இயக்கியிருக்கிறார் கார்த்திக் ஜி கிரிஷ்.

மொத்தத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் சுந்தர் சுந்தரம், ஜி.ஜெயராம் இணைந்து தயாரித்திருக்கும் டக்கர் ஒரு தலைகாதல் மக்கர் செய்ய டக்கராக தூக்கி இளைஞர்களுக்கு இளமை துள்ளலுடன் கவர்ச்சி ஆக்ஷன் கலந்த துரத்தல் விருந்து.