ஜவான் திரைப்பட விமர்சனம் : ஜவான் தியேட்டரையே விசில் அடிக்கும் ஸ்டேடியமாக மாற்றிய ஷாருக்கானின் மேஜிக் சூப்பர், ஃபுல் பைசா வசூல் | ரேட்டிங்: 4/5
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரித்திருக்கும் ஜவான் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அட்லீ. ஸ்ரீ கோகுலம் மூலம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளனர்.
இதில் ஷாருக்கான் விக்ரம் ரத்தோராகவும் ஆசாத் ரத்தோராகவும், நர்மதா ராயாக நயன்தாரா, காளி கைக்வாடாக விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன், லக்ஷ்மியாக பிரியா மணி, டாக்டர் ஈராமாக சான்யா மல்ஹோத்ரா, இரானியாக சுனில் குரோவர், ஹெலினாவாக சஞ்சீதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக் இஷ்க்ராவாக, கல்கியாக லெஹர் கான், ஜான்வியாக ஆலியா குரேஷி, காவேரியாக ரித்தி டோக்ரா, பப்புவாக யோகி பாபு, காளியின் சகோதரர் மணீஷ் கெய்க்வாடாக எய்ஜாஸ் கான், ஜூஜூவாக சங்கே ஷெல்ட்ரிம், நம்ரதாவின் மகள் சுசி ராய் வேடத்தில் சீசா சரோஜ் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை அட்லீ மற்றும் எஸ்.ராமநகரிவாசன், ஒளிப்பதிவு – ஜிகே விஷ்ணு, இசை – அனிருத் ரவிச்சந்தர், எடிட்டிங் – ரூபன், ஸ்டண்ட் இயக்குனர்கள் – அனல் அரசு, ஸ்பிரோ ரசாடோஸ், கிரெய்க் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ்.மக்கள் தொடர்பு – யுவராஜ்.
நேர்மையான இந்திய ராணுவ அதிகாரியான விக்ரம் ரத்தோர் ( தந்தை ஷாரூக்கான்) செய்யாத குற்றத்திற்காக அவமானப்படுத்தப்பட்டு படுகாயமடைந்து மலைப்பிரதேச அருவியில் விழுந்து கிடக்கிறார். அவரை காப்பாற்றி பிழைக்க வைக்கும் மலைவாழ் மக்களை எதிரிகளிடமிருந்து சண்டையிட்டு மீட்பதால் அவர்கள் கிராமத்திலேயே தங்கி விடுகிறார். அடிபட்டதால் தான் யார் என்ற நினைவு இழந்து தவிக்கும் ரத்தோரை கிராம மக்கள் பார்த்துக் கொள்கின்றனர்.அதன் பின் முப்பது வருடங்களுக்கு பிறகு கதைக்களம் செல்கிறது. ஜெயிலராக இருக்கும் ஆசாத் ரத்தோர் (மகன் ஷாரூக்கான்) ஜெயிலில் கைதிகளாக இருக்கும் லக்ஷ்மி (ப்ரியா மணி), ஈரம் (சன்யா மல்ஹோத்ரா), இஷ்க்ரா (கிரிஜா ஓக்), கல்கி (லெஹர் கான்), ஹெலினா (சஞ்சீதா பட்டாச்சார்யா) மற்றும் ஜான்வி (ஆலியா குரேஷி) ஆகியோரை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். அந்த ரயிலில் ஆயுத வியாபாரியும் பெரும் கோடீஸ்வரரும் அரசியல் செல்வாக்கு மிக்கவருமான காளி கெய்க்வாட்டின் (விஜய் சேதுபதி) மகளும் பயணம் செய்கிறார். போலீஸ் அதிரடி சிறப்புப்படை அதிகாரி நர்மதா (நயன்தாரா) இவர்களை சமரசம் செய்து சமாதானப்படுத்தி பிடிக்க அனுப்பப்படுகிறார்.காளியின் மகளை பணயக் கைதியாக வைத்து 40,000 கோடியை குறிப்பிட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் சிறைப்பிடித்த மக்களை விடுவிப்பதாக சொல்ல, வேறு வழியில்லாமல் காளியிடம் பேசி அந்தப்பணத்தை கொடுத்து மக்களை விடுவிக்கிறார் நர்மதா. ரயிலிலிருந்து வெளியே வரும் போது தந்திரமாக ஆசாத் மற்றும் மற்ற பெண்களும் தப்பித்து செல்கின்றனர். அந்தப்பணம் கோடிக்கணக்கான விவசாய மக்களின் வங்கிக் கணக்கில் போய் சேர்ந்து விடுகிறது. பின்னர் சுகாதரத்துறை அமைச்சரை கடத்தி அரசு மருத்துவமனைகளை சீரமைக்க கெடு வைக்கிறார். நர்மதா ஆசாத் ரத்தோரை பிடிக்க முடியாமல் திணறுகிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக நர்மதாவின் மகள் அறிமுகம் கிடைக்க, நர்மதாவை திருமணம் செய்து கொள்கிறார் ஆசாத். நர்மதாவிற்கு உண்மை தெரிய வரும் போது ஆசாத்தையும், நர்மதாவையும் காளி கடத்தி துன்புறுத்துகிறார். இவர்களை மீட்க விக்ரம் ரத்தோர் களமிறங்குகிறார்? தந்தை விக்ரம் ரத்தோரின் கண்ணீர் கதை என்ன? தந்தை விக்ரம் மகன் ஆசாத் இருவரும் ஏன் பிரிந்தார்கள்? என்ன காரணம்? ஆசாத் ரத்தோர் ஏன் அரசாங்கத்தையும், காளி கெய்க்வாட்டையும் பழி வாங்க துடிக்கிறார்? விக்ரம் ரத்தோருக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? தந்தை மகன் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
ஷாருக்கான் நடிப்பு பயணத்தில் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய கேரக்டர்களில் நடித்த போதெல்லாம், மக்கள் அவரை மிகவும் விரும்புவர். அவரது ஆளுமையில் நேர்மையுடன் அவர் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் திரையில் எதையாவது சொல்ல முயற்சிக்கும்போது, அது நேரடியாக மக்கள் மனதில் சென்றடைகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் தந்தை மகன் என்ற இரு வேடங்களில் தனித்துவமான அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு வசனத்தின் ஒவ்வொரு காட்சியிலும் விசில் சத்தம் தான். முதன்முறையாக, வழுக்கையான ஷாருக்; தனது இமேஜை தானே உடைத்துள்ளார். கிங் கான் திரையில் கொண்டு வரும் எழுச்சியை தியேட்டரில் அமர்ந்தாலே உணரலாம். ஷாருக் வெள்ளை முடி மற்றும் தாடியுடன் வரும்போது, ஒன்றன் பின் ஒன்றாக புதிய அவதாரத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்துகிறார். ஷாருக் குறும்புதனத்துடன், புதிய கோணத்தில் நடித்து உண்மையிலேயே இந்திய சினிமாவின் ராஜா தான் என்று நிரூபித்துள்ளார்.
விஜய் சேதுபதி ஆயுத வியாபாரியாக வரும் தேர்தலில் தான் நிiனைக்கும் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம், செல்வாக்கை வைத்து காரியத்தை சாதித்தாலும்,ஷாரூக்கால் தன்னுடைய சாம்ராஜ்ஜியம் சரியும் போது எடுக்கும் பழி வாங்கும் முடிவால் தனக்கே எதிராக முடிய நிகரில்லா நடிப்பு திறமையால் தனது வில்லன் கதாபாத்தித்திற்கு உயிர் கொடுத்துள்ளார். மேலும், வாய்ப்பு கிடைக்கும்போது, க்ளைமாக்ஸில், ‘ஏய், முடித்துவிடு, இல்லையேல் மீண்டும் பாட ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று க்ளைமாக்ஸில் சொல்லி சிரிப்பின் தருணங்களையும் வரவழைக்கிறார்.
ஜவான் படம் முழுக்க பெண் கதாபாத்திரங்கள். இந்தி நடிகர் ராஜ் கபூர் போல் ஷாருக் பெண்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்தப் படத்தில்; நடித்திருப்பது சிறப்பு. இந்தபடத்தில் இந்தியில் நயன்தாரா கதாநாயகியாக பதவி உயர்வு பெற்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகி தீபிகா படுகோனே. முதல் காட்சியிலேயே அரங்கில் காதலனை தோற்கடிக்கும் ஐஸ்வர்யா வேடத்தில் தீபிகா, குறிப்பாக தூக்கிலடப்படும் போது அம்மாவாக தன் மகனிடம் பிரியா விடை பெறும் காட்சிகள் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து விடுகிறது. அதே சமயம் நயன்தாரா சிறப்பு படை அதிகாரி நர்மதாவாக சக்தி வாய்ந்;த பெண்ணாக ஆக்ஷன், அதிரடி காட்சிகளில் ஜொலிக்கிறார்.
லட்சுமியாக பிரியாமணி, டாக்டர் ஈராமாக சான்யா மல்ஹோத்ரா, இரானியாக சுனில் குரோவர், ஹெலினாவாக சஞ்சீதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக் இஷ்க்ராவாக, கல்கியாக லெஹர் கான், ஜான்வியாக ஆலியா குரேஷி, காவேரியாக ரித்தி டோக்ரா, பப்புவாக யோகி பாபு, காளியின் சகோதரர் மணீஷ் கெய்க்வாடாக எய்ஜாஸ் கான், ஜூஜூவாக சங்கே ஷெல்ட்ரிம், நம்ரதாவின் மகள் சுசி ராய் வேடத்தில் சீசா சரோஜ் மேத்தா ஆகியோர் கதையில் ஏதாவது ஒரு திருப்பத்திற்கு காரணமாக அமைந்து சிறப்பாக செய்துள்ளனர்.
இந்தியில் கால் பதித்திருக்கும் அனிருத் ரவி சந்தர் இசை படத்திற்கு வேகத்தை கொடுக்க, பின்னணி இசை உத்வேகத்தை கொடுத்து அதிரடி இசையால் அனைவரையும் கவர்ந்து ஈர்த்துள்ளார்.
‘ஜவான்’ படத்தின்; ஆக்ஷன் காட்சிகளில் ஜி.கே.விஷ்ணு சர்வதேச தரத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் எடிட்டிங்கை விறுவிறுப்புடன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஸ்டண்ட் இயக்குனர்கள் – அனல் அரசு, ஸ்பிரோ ரசாடோஸ், கிரெய்க் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ் ஆகியோரின் பங்களிப்பு ஹாலிவுட் படத்தின் சண்டைக் காட்சிகளைப் பார்ப்பது போல் கார் சேசிங் போன்றவை பிரமாண்டமானவையாகவும் மற்றும் சில காட்சிகள் மிகவும் தத்ரூபமாகவும் கொடுத்துள்ளனர்.
இந்த படத்தின் சரியான பெயர் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்று இருக்க வேண்டும், படத்தில் நிறைய அரசியல் பேசப்படுகிறது. சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவை பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடைய விஷயங்கள், இது தவிர, தேர்தல்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் ரவடிகளை விநியோகிப்பது என்ற மற்றொரு பிரச்சினை நாட்டில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற விவாதங்களுக்கு மத்தியில், வாக்காளர்களுக்கு நினைவூட்டும் படமாக ‘ஜவான்’ படமும் அமைந்திருக்கிறது.
ஏராளமான கைதிகளுடன் திரையில் ஜாலியாக ஆக்ஷன் செய்து, பாடல்கள் பாடி, தெறிக்கும் டயலாக்குகள் கலந்து மகனின் போராட்டத்தையும் ராணுவ வீரரின் கதையையும் கலந்து சுவாரசியமான கதையை உருவாக்கியுள்ளார் அட்லீ. கடனை கட்ட முடியாத விவசாயி, மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிர் விடும் குழந்தைகள், தொழிற்சாலையில் கசிந்திடும் நச்சு, ஒட்டு போடுவதின் முக்கியத்துவம் என்று ஒவ்வொரு நிஜ சமூகப்பிரச்சனையையும் கையிலெடுத்து அதை திறம்பட கையாளும் திரைக்கதையால் தனித்து நிற்கின்றனர் அட்லீ மற்றும் எஸ்.ராமநகரிவாசன்.
ஜவான்’ ஒரு மாஸ் கலந்த மசாலா என்டர்டெய்னர் படம். மும்பை சினிமா கடந்த காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன. ஆனால் இது ஒரு ஆக்ஷன் படத்தின் முக்கியத்துவத்தைப் பெற்று ஒரு எழுத்தாளர்-இயக்குனர் என்ற முறையில், அட்லீ மிகவும் புத்திசாலித்தனமாக கதையின் சாரம்சங்களை பின்னியுள்ளார். இந்தப் படம் முதல் 30 நிமிடங்கள் ஒரு அருமையான ஆக்ஷன் ரகளை. இதற்குப் பிறகு பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைத்தாலும் அதிகம் பாதிப்பில்லை. படத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ட்விஸ்ட்கள் வந்து ஆச்சரியப்பட வைக்கிறது. மோசமான அரசு முறையால் ஒரு இளைஞனின் வாழ்க்கை சீரழிந்து, பின்னர் இந்த முறையைப் பயன்படுத்தி அவரது மகன் எவ்வாறு அமைப்பைச் சரிசெய்கிறான் என்பது பற்றிய கதை இது. கதையில் ஊழலுக்கு எதிரான போராட்டம், ஏழைகளின் உரிமைகள் பற்றியது. விவசாயிகள் தற்கொலை, சுகாதார சீர்கேடு, சரியான தலைவருக்கு வாக்களியுங்கள் என்ற பேச்சு என்பது கதை புதிதல்ல ஆனால் சொல்லியிருக்கும் விதத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தால் உணர்வீர்கள்.
மொத்தத்தில் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரித்திருக்கும் ஜவான் தியேட்டரையே விசில் அடிக்கும் ஸ்டேடியமாக மாற்றிய ஷாருக்கானின் மேஜிக்; சூப்பர், ஃபுல் பைசா வசூல்.