ஜப்பான் சினிமா விமர்சனம் : ‘ஜப்பான்’ தாய் பாசப்பிணைப்புடன் கமர்ஷியல் டிராஜிடி | ரேட்டிங்: 3.5/5
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ‘ஜப்பான்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜூ முருகன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் கார்த்தியின் 25வது படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் :-ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது ‘ஜப்பான்’.
கோவையில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சொந்தமான ராயல் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள்; சுவரில் ஒட்டை போட்டு கொள்ளை அடித்த விதத்தை வைத்து அது பிரபல கொள்ளையன் ‘ஜப்பான்’ என்பவனின் கைவரிசையாக இருக்கலாம் என்று முடிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையில் போலீசார் இறங்குகின்றனர். ஒரு குழு இன்ஸ்பெக்டர் ஸ்ரீPதர் (சுனில்) கீழ் மற்றும் மற்றொரு குழு இன்ஸ்பெக்டர் பவானி (விஜய் மில்டன்) கீழ் கொள்ளையர்களை காவல்துறை தீவிரமாக தேடுகிறது. ஜப்பான் சிறு வயதில் இருந்தே திருடனாக நகைக்கடைகளில் கொள்ளை அடிக்கத் தொடங்கி நாடு முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் நகைகளை கொள்ளையடித்து அந்தப் பணத்தில் சொகுசாக வாழ்பவர். இவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சினிமா பைத்தியம் பிடித்த ஜப்பான் , கொள்ளையடித்த அந்தப் பணத்தில் உயிருக்கு உயிராக நேசிக்கும் சஞ்சுவை (அனு இம்மானுவேல்) ஹீரோயினாக வைத்து ஒரு படத்தையும் தயாரித்து நடித்துள்ளார். ஜப்பான் இந்த கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்டு தான் செய்யாத குற்றத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்பதை அறிய முற்படுகிறார். இறுதியில் இந்த நகைக்கொள்ளையை யார் செய்தார்கள்? ஜப்பான் கொள்ளையனை கண்டுபிடித்தாரா? ஜப்பான் குற்றப்பின்னணியுடன் இருக்க யார் காரணம்? அவரின் கடந்த கால வாழ்க்கை ரகசியம் என்ன? ஜப்பான் என்கவுண்டரிலிருந்து யாரை தப்பிக்க வைத்தார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது 20 வருட திரையுலக பயணத்தில் அவரது 25வது படமாக ஜப்பான் வெளிவந்துள்ளது. இதில் பான் இந்தியா திருடன், நடிகர், எய்ட்ஸ் நோயாளி என்று பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தி வெல்வெட் உடை, வித்தியாசமான வசன உச்சரிப்பு, நகைச்சுவை பஞ்ச் வசனங்கள், தங்க முன்பற்கள், நகைகளின் மீது தீராத ஆசை, சொகுசு வாழ்க்கை, தாய் பாசம் என்று அக்மார்க் கொள்ளையான படம் முழுவதும் இவர் ஒருவரே தாங்கி பிடித்து முடிந்த வரை தனிமுத்திரை பதித்திருக்கிறார்.
முக்கியத்துவம் இல்லாமல் அழகு பொம்மையாக வந்து போகும் அனு இம்மானுவேல். இன்ஸ்பெக்டராக நடிகர் சுனில், கார்;த்தியின் வழிகாட்டி தோழனாக வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன், சணல் அமன் ஆகியோர் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் பாடல்களை விட பின்னணி இசையில் சரிசமம் செய்து விடுகிறார். விறுவிறுப்புடன் கூடிய ரவிவர்மன் ஒளிப்பதிவு, தடுமாறும் பிலோமின்ராஜ் படத்தொகுப்பு படத்தை தோய்வடையச் செய்துள்ளது.
நகைக்கொள்ளை, திருடன், போலீஸ், நண்பனின் துரோகம், துரத்தல், பாசம், சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞன், அரசியல் பிரஷர், என்கவுண்டர், என்று திரைக்கதையில் அத்தனை மசாலா அம்சங்களையும் கலந்து கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார் ராஜூமுருகன். ஆனால் அதை சுவாரஸ்யம் இல்லாமல் கொடுத்து, படத்தின் இறுதிக் காட்சியில் தான் குட்டி மீன் கதையோடு முடித்து கொஞ்சம் கவனிக்க வைத்துள்ளார்.
மொத்தத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ‘ஜப்பான்’ தாய் பாசப்பிணைப்புடன் கமர்ஷியல் டிராஜிடி.