சீதா ராமம் திரை விமர்சனம்: சீதா ராமம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஃபீல் குட் மனதை மயக்கும் ஹைகூ காதல் கவிதை  | ரேட்டிங்: 4/5

0
522

சீதா ராமம் திரை விமர்சனம்: சீதா ராமம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஃபீல் குட் மனதை மயக்கும் ஹைகூ காதல் கவிதை  | ரேட்டிங்: 4/5

வைஜெந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் -ஸ்வப்னா தத் தயாரிப்பில் சீதாராமம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹனு ராகவபுடி.

இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா, வெண்ணிலா கிஷோர், சுமந்த், பிரகாஷ்ராஜ், சச்சின் கடேகர், பூமிகா சாவ்லா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன், கௌதம் வாசுதேவ மேனன், தருண் பாஸ்கர், சுனில், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : பி எஸ் வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை : விஷால் சந்திரசேகர், பாடல்கள்-மதன் கார்க்கி, படத்தொகுப்பு-கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்,  மக்கள் தொடர்பு : யுவராஜ்

கதை இரண்டு இணையான காலகட்டங்களில் நடைபெறுகிறது. 1985 இல், லண்டனில் படிக்கும் பாகிஸ்தான் மாணவியான அப்ரின் (ரஷ்மிகா மந்தனா) இந்தியாவை விரும்புவதில்லை. மற்றவர்களிடம் மன்னிப்பு கூட சொல்ல விரும்பாத திமிர் பிடித்தவர். ஆனால் ஒரு வழக்கில் அவருக்கு அவசரமாக பத்து லட்சம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது தாத்தா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பரிக் (சச்சின் கேத்கர்) வீட்டிற்கு பணத்திற்காக செல்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிடுவார். சொத்துக்காக வழக்கறிஞரைச் சந்தித்தபோது தாத்தா கடைசியாக எழுதிய கடிதத்தைப் படிக்கிறார். ஆதில், ராஷ்மிகாவுக்கு அவரது தாத்தா ஒரு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அதில் தாத்தாவின் விருப்பப்படி சீதாமகாலட்சுமி என்ற இளம்பெண்ணுக்கு லெப்டினன்ட் ராம் என்ற இளைஞன் எழுதிய கடிதம் கொடுக்கப்பட வேண்டும். அவள் உண்மையில் பொறுப்பை விரும்பவில்லை என்றாலும் சொத்தின் ஒரு பகுதிக்காக அந்த கடிதத்தை சீதாமகாலட்சுமியிடம் கொடுக்கச் செல்கிறார். சீதாமகாலட்சுமியை தேடும் போது அப்ரின் (ரஷ்மிகா மந்தனா) பல சிரமங்களை எதிர்கொள்கிறார்…

60களில் ராணுவத்தில் லெப்டினன்டாக பணிபுரியும் ராம் (துல்கர் சல்மான்) நாட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர். ஆனால் அவரும் அனாதைதான். ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் காஷ்மீரில் நடந்த படுகொலையை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றிய ராம் பற்றி அனைவரும் அறிந்து, அவர் அனாதை இல்லை, எங்களிடம் இருக்கிறார் என்று அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பலர் கடிதம் எழுதுகிறார்கள். இந்த வரிசையில், சீதா மகாலட்சுமி என்ற பெண், ராமுக்கு நான் உன் மனைவி என்று முகவரி இல்லாமல் கடிதம் எழுதுகிறாள். அவரால் ஈர்க்கப்பட்ட ராம், அவர் யார் என்பதைக் கண்டறிய ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்.

யார் இந்த சீதாமாலட்சுமி? யார் லெப்டினன்ட் ராம்? அவர்களுக்குள் என்ன நடந்தது? இருவருக்கும் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம்? இவர்களின் காதல் கதையின் திருப்பங்கள் என்ன?   கடைசியில் சீதாமகாலட்சுமியிடம் கடிதம் கொடுத்தாரா ராஷ்மிகா, அந்த கடிதத்தில் ராம் என்ன எழுதியுள்ளார், ரகசிய பணியில் இருந்த ராம்மை பிடிக்க பாகிஸ்தான் அரசுக்கு யாராவது உதவி செய்தார்களா? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் சீதாராமம் படத்தை பார்க்க வேண்டும்.

எத்தனை வலிமையான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அந்த எடையை தோளில் சுமக்கும் நடிகர்கள் கிடைத்தால்தான் கதாபாத்திரங்கள் உயரும். படம் பார்க்கும் போது துல்கர் சல்மானை திரையில் பார்க்கவே இல்லை. லெப்டினன்ட் ராம் மட்டும் தோன்றுகிறார். ராமின் கதாபாத்திரத்திற்கு தன்னைத் தவிர வேறு யாராலும் நியாயம் செய்ய முடியாது என்பதில் துல்கர் உறுதியாக இருப்பது தெரிகிறது . காதலாக இருந்தாலும், நகைச்சுவையாக இருந்தாலும், எமோஷனலாக இருந்தாலும் ஒவ்n;வாரு காட்சியிலும் சிறந்ததை கொடுத்துள்ளார்.

மேலும் சீதையாக தோன்றிய மிருணாள் தாக்கூருக்கு கனமான பாத்திரம் கிடைத்துள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் நியாயம் செய்துள்ளார்.  ராமர், சீதை வேடங்களில் துல்கர், மிருணாள் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது அந்த அளவுக்கு இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதம்.

இவர்கள் இருவருக்குப் பிறகு ராஷ்மிகா மந்தனா, பிரிகேடியர் விஷ்ணுவாக சுமந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்கள். சீதைக்கான பயணத்தின் போது திமிர் பிடித்த அஃப்ரினாக மாறுகிறார். ராஷ்மிகா கேரக்டரில் ஏற்பட்ட மாற்றத்தை நன்றாகவே காட்டியிருக்கிறார். சுமந்த் நடித்துள்ள விஷ்ணு ஷர்மா  ஒரு நொடியில் மகிழ்ச்சி, அடுத்த நொடியில் கோபம் என பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மேஜர் செல்வனாக கவுதம் வாசுதேவ் மேனன், ராஷ்மிகாவின் தாத்தாவாக சச்சின் கடேகர், பாலாஜியாக தருண் பாஸ்கர், நாடகநண்பர் வெண்ணிலா கிஷோர் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

காதல் கதைகளுக்கு இசை மற்றும் ஒளிப்பதிவு மிக முக்கியம். இந்த இரண்டு விஷயங்களிலும் சீதாராமம் முதன்மையாக விஷால் சந்திரசேகர் பாடல்களால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இதயம் நிறைந்த பின்னணி இசை, கதையோடு கைபிடித்து இழுத்துச் செல்கிறது. பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, எண்ணங்களுக்கு அழகான காட்சி வடிவம் தந்துள்ளனர்.

மதன் கார்க்கியின் பாடல்கள் படத்திற்கு பலம்.

இனிமையான காதல் கதையை, ராணுவப் பின்னணியில் காதல் மற்றும் நாட்டுப்பற்றை ஒன்றாக கலந்து ஒரு அழகான காதல் கவிதையை திரையில் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. ஆச்சரியமான திருப்பங்கள் கொண்ட அவரது திரைக்கதை. ஒரு எழுத்தாளராக, ஒரு இயக்குனராக தனது சிறந்த திறமையை வெளிப்படுத்திய அவர், ஒரு உன்னதமான காதல் கதையை வழங்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் கதையுடன் இணைத்த விதமும், கதை பார்வையாளர்களின் மனதைத் தொடும் விதமும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஹனு ராகவபுடியின் படம் என்றாலும் மணிரத்னத்தை போல் காதல் காட்சிகள். 60 மற்றும் 70 களில் நடந்த காதல் கதைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் துல்கர் சல்மான் வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் சார்பில் அஸ்வினி தத் – ஸ்வப்னா தத் தயாரித்துள்ள சீதா ராமம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஃபீல் குட் மனதை மயக்கும் ஹைகூ காதல் கவிதை.