சில நொடிகளில் விமர்சனம் : சில நொடிகளில் பார்த்தவுடன் வசப்படுத்தும் மர்மங்கள் நிறைந்த காதல் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
164

சில நொடிகளில் விமர்சனம் : சில நொடிகளில் பார்த்தவுடன் வசப்படுத்தும் மர்மங்கள் நிறைந்த காதல் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கொயர் புரொடக்ஷன்ஸ் சார்பில் புன்னகை பூ கீதா தயாரித்திருக்கும் சில நொடிகளில் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினய் பரத்வாஜ்.

இதில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை- மசாலா காஃபி, பிஜோன் சுராரோ, தர்ஷன்கே.டி, ஸ்டக்காடோ மற்றும் ரோஹித் மாட், ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், பின்னணி இசை – ரோஹித் குல்கர்னி, எடிட்டிங் – ஷைஜல் பிவி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா டிஒன்.

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் வரதன் (ரிச்சர்ட் ரிஷி) தனது மனைவி மேதாவுடன் (புன்னகைபூ கீதா) சொகுசாக வசிக்கிறார். சமூக சேவகியுமான மனைவி மேதாவின் உதவி மற்றும் பெருமுயற்சி காரணமாக தனியாக கிளினிக் வைத்து நடத்தும் அளவிற்கு லண்டனில் பெரிய அளவில் புகழ் பெற்று பணம் செல்வாக்குடன் வாழ்கிறார். பெரிய மாடல்களுக்கும், பிரபலங்களுக்கும் முக்கிய ஆலோசகராக விளங்கும் டாக்டர் ராஜ் வரதன் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் மாடல் அழகி மாயா பிள்ளையின் (யாஷிகா ஆனந்த்) மீது ஈர்ப்பு ஏற்பட கள்ளக்காதலாக மாறுகிறது. இருவரும் சேர்ந்து வாழ நினைக்கும் வேளையில் எதிர்பாராத சம்பவம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. ராஜ் வரதனுடன் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் வேளையில் அதிக போதை பொருள் எடுக்கும் மாயா பிள்ளை இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராஜ் வரதன் தன் மனைவிக்கு தெரியாமல் மாயாபிள்ளையை அப்புறப்படுத்தி வெறொரு இடத்தில் புதைத்து விடுகிறார். அது முதல் காதலி இழந்த சோகம், குற்ற உணர்ச்சியில் சிக்கி தவிக்கும் ராஜ் வரதன் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவரது கிளினிக்கிற்கு பேட்டி எடுக்க வரும் பெண் பத்திரிகையாளர் மாயா பிள்ளை இறந்த விவகாரத்தை சொல்லி ராஜ் வரதனை மிரட்டி பணம் கேட்கிறார். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ராஜ் வரதன் தன் மனைவி மேதாவிடம் உண்மையை சொல்கிறார். முதலில் அதிர்ச்சியாகும் மேதா பின்னர் தன் கணவனுக்கு உதவ முன் வருகிறார். மேதா கணவர் ராஜ் வரதனை மீட்க என்ன செய்தார்? மாயா பிள்ளைக்கு நடந்த சம்பவம் தற்செயலா? கொலையா? மிரட்டல் விடுக்கும் பெண்ணிற்கு ராஜ் வரதன் பணம் கொடுத்தாரா? இறுதியில் என்ன நடந்தது? இதற்கெல்லாம் காரணம் யார்? என்பதே படத்தின் சஸ்பென்ஸ் கலந்த க்ளைமேக்ஸ்.

ரிச்சர்ட் ரிஷி, பிரபல டாக்டராகப் கச்சிதமாக பொருந்தி, மேல்தட்டு மக்களின் ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலித்து, மனைவியையும், காதலியையும் சமாளித்து, நல்ல கம்பீர தோற்றம், அடர்த்தியான தலைமுடி புதுவித ஸ்டைலுடன் பலவித உணர்ச்சிகள், குழப்பான மனநிலையை பிரதிபலித்து  யாஷிகாவுடன் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாமல் தாராளமாக நெருக்கமாக நடித்ததுடன் திறமையான முறையில் கதாபாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்.

மனைவி மேதாவாக புன்னகை பூ கீதா கண்ணியமானவராக, கணவரின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணகர்த்தாவாக, கணவன் மேல் அதிக பாசம் கொண்ட மனைவியாக, கணவனின் விவகாரம் வரும்போது அவர் கையாளும் விதம் நேர்த்தியாக இருந்தாலும் அதில் இவரின் உள்நோக்கம் வெளிப்படும் போது படத்தின் கதைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இறுதிக் காட்சியில் சல்சா நடனத்திலும் அசத்தியுள்ளார்.

யாஷிகா ஆனந்த் மாடல் அழகி மாயா பிள்ளையாக கனகச்சிதம். அவர் வரும் காட்சிகளில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டு கொஞ்சம் யதார்த்தத்தையும் உணர வைத்து தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார். படம் ஆரம்பிக்கும் காட்சியில் வருவதோடு இறுதிக் காட்சியில் முடிப்பதும் இவரே.

மற்ற நடிகர்களும் சிறப்பாக செய்து அசத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் லண்டனின் அழகையும், ரிச்சர்ட் வீடு , கிளினிக், ரெஸ்டாரண்ட், எழில் கொஞ்சும் தெருக்கள் என்று பார்த்து பார்த்து கண்களுக்கு குளிச்சியாக  திறம்பட படம்பிடித்துள்ளார். ஒளிப்பதிவு ஒரு காட்சி விருந்து, படத்தின் அமைப்பில் உள்ள அழகையும் மர்மத்தையும் பிரமிக்க வைக்கிறது.

ஷைஜல் பிவியின் எடிட்டிங் ரேஸர்-கூர்மையானது, படத்தின் வேகத்தை விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸையும் எப்போதும் உச்சத்தில் வைத்திருக்கிறது.

மசாலா காஃபி, பிஜோன் சுராரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்காடோ மற்றும் ரோஹித் மாட் ஆகியோர் இப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் இணைந்து ஒரு இசை மாஸ்டர் பீஸை உருவாக்கியதோடு துள்ளலான பாடல்களுடன் ஹிட் கொடுத்துள்ளனர்.

சில நொடிகளில் திரைப்படம் மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. லண்டனில் வசிக்கும் மகிழ்ச்சியான தம்பதியரின் வாழ்க்கை மூன்றாவது நபர் அவர்களின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு ஒரு திடீர் திருப்பமும் பின்னர் ஒரு கொலையும் அதைத் தொடர்ந்து ஒரு புதிரான மர்மமும் ஒளிந்திருப்பதை தனது திறமையாக திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் பெரு வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.தமிழில் தனது முதல் படத்திலேயே காதல் மற்றும் கொலையுடன் கலந்த ஒரு மர்மத் த்ரில்லர், ஈர்க்கக்கூடிய திரைக்கதையுடன் பார்வையாளர்களை ஆர்வத்துடன் வைத்திருக்கும் சில திருப்பங்களை இயக்குனர் வினய் பரத்வாஜ் சேர்த்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஹாலிவுட் படங்களை பார்ப்பது போல் காட்சிகளையமைத்து ஒருவித ரிச் லுக் கலந்து மேல்நாட்டு கலாச்சாரத்தை இணைத்து இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிகுறியுடன் முடித்துள்ளார்.

மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கொயர் புரொடக்ஷன்ஸ் சார்பில் புன்னகை பூ கீதா தயாரித்திருக்கும் சில நொடிகளில் பார்த்தவுடன் வசப்படுத்தும் மர்மங்கள் நிறைந்த காதல் த்ரில்லர்.