சார் சினிமா விமர்சனம் : சார் கல்வி சமத்துவத்தை சீர்திருத்தத்தை உருவாக்கி மூட நம்பிக்கையை உடைத்த செம்மல்களான ஆசிரியர்களின் பிரகாசமான தியாக தீபத்தின் ஒளிச்சுடர்  | ரேட்டிங்: 3.5/5

0
345

சார் சினிமா விமர்சனம் : சார் கல்வி சமத்துவத்தை சீர்திருத்தத்தை உருவாக்கி மூட நம்பிக்கையை உடைத்த செம்மல்களான ஆசிரியர்களின் பிரகாசமான தியாக தீபத்தின் ஒளிச்சுடர்  | ரேட்டிங்: 3.5/5

எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் எஸ், நிலேஃபர் சிராஜ் தயாரித்திருக்கும் சார் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் போஸ் வெங்கட். இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிடுகிறது.

இதில் விமல், சாயா தேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெய பாலன், விஜய் முருகன், சரவண சக்தி, ஸ்ரீராம் கார்த்திக், பிரானா, எலிசபெத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – இனியன் ஜே ஹரிஷ், இசை – சித்து குமார், எடிட்டிங் – ஸ்ரீஜித் சாரங், கலை இயக்கம் – பாரதி புத்தர், பாடல் வரிகள் – விவேகா, அந்தக்குடி இளையராஜா மற்றும் இளங்கவி அருண், ஒலி கலவை சிவகுமார். நிர்வாகத் தயாரிப்பாளர் கண்ணன், மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2மீடியா.

மாங்கொல்லை கிராமத்தில் 1950 முதல் 1980கள் வரை நடைபெற்ற கதையாக இந்த படம் விரிவடைகிறது. 1950களில் விமலின் தாத்தா அண்ணாதுரை, உயர்ந்த சாதித் தலைவர் ஜெயபாலனை அணுகி பள்ளிக்கூடம் கட்ட நிலம் கேட்க, அதற்கு மறுப்பு தெரிவிக்க, ஜெயபாலனின் தம்பி தன் நிலத்தை அண்ணாதுரைக்கு பள்ளி கட்ட நல்லெண்ணத்தோடு கொடுக்கிறார்;. அதன் பின் அண்ணாதுரை உயர் சாதி சமூகத்தை எதிர்த்து ஒரு தொடக்கப் பள்ளியை அந்த இடத்தில் ஆரம்பிக்கிறார். அதனால், ஆதிக்க சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கற்பித்தால் அடிமைகளாக இருக்க மாட்டார்கள் அவர்களால் கடவுளின் பெயராலும் மூடநம்பிக்கைகளாலும் கிராமத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயல்படுவார்கள் என்கிற நோக்கத்துடன் கடவுளின் பெயரை பயன்படுத்தி அந்த பள்ளிக் கூடத்தையே இடிக்க சதித்திட்டம் தீட்டுகிறார். ஓவ்வொரு முறையும் ஆதிக்க தலைவர் சாமியாடியாக வந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பள்ளி இருக்கிறது அதை இடிக்க வேண்டும் என்று வாக்கு கூறுவதும் மயக்கும்போட்டு விழுவதுமாக இருக்கிறார். இதனால் மக்களை திசை திருப்ப நினைக்கும் ஜெயபாலனின் திட்டத்தை அறிந்து வாத்தியார் அண்ணாதுரை அவர்களுக்கு படிப்பின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து புரிய வைத்து விடுவதால் ஒடுக்கப்பட்ட மக்கள் பள்ளியை இடிக்காமல் பார்த்துக் கொள்கின்றனர். இதனிடையே அண்ணாதுரைக்கு திடீரென உடல் நலம் பாதித்து மனநிலை பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார். அவருடைய மகன் அரசன் (சரவணன்) அந்தப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக மாற்றி தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அரசன் ஒய்வு பெறும் போது ராமநாதபுரத்திலிருந்து சொந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியரான மகன் சிவஞானம் (விமல்). அரசன் தன் மகன் ஞானத்திடம் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தி ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்ற தாத்தாவின் கனவை நிறைவேற்றச் சொல்கிறார். அதன் பின் பள்ளியை நிர்வகிக்கும் ஞானம் அங்கே வேலைக்கு சேரும் சக ஆசிரியை வள்ளியை (சாயாதேவி கண்ணன்) காதலிக்கிறார். இதனிடையே அரசனுக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட வீட்டில் முடங்கி விடுகிறார். அதன் பின் மரணப்படுக்கையில் இருக்கும் உயர் சாதி பெரியவர் ஜெயபாலன் தன் பேரன் சக்திவேலிடம் (சிராஜ் எஸ்), அந்த பள்ளியை எப்படியாவது இடித்து விட வேண்டும் அதற்காக அவர்களுடன் ‘உறவாடி கெடு’ என வாக்குறுதியை வாங்கிவிட்டு மரணிக்கிறார். பெரியவரின் பேரன் சக்திவேல் சிறுவயதிலிருந்தே ஞானத்தின் நெருங்கிய நண்பன் என்பதால் சக்திவேல் சாமியாடியாக இருந்து, பள்ளிக்கூடத்தை இடிக்கும் முயற்சிகளை மறைமுகமாக தொடர்கிறான்.இதனால் ஒவ்வொரு தலைமுறையிலும் விடாமல் சண்டை தொடர்கிறது. உயர் சாதி சமூகத்தைச் சேர்த்தவர்கள் ஞானத்தின் தாத்தா, தந்தை இருவரும் மனநலம் பாதிப்புக்கு உள்ளானதால், கடவுளின் சாபத்திற்கு உள்ளானதாக புரளி கிளப்புகின்றனர். அதன் பின் ஞானத்திற்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக அவதூறு பரபரப்புகின்றனர். இந்த நிலையில் ஞானம் எவ்வாறு இந்த சூழ்ச்சியை முறியடித்தார்? தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரத்திற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்தாரா? பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றினாரா? அந்த ஊர் மக்களுக்கு கல்வி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் ‘சார்’ படத்தின் க்ளைமேக்ஸ்.

 

ஆசிரியர் பேரன் சிவஞானமாக விமல் முதல் பாதியில் தன் தந்தையின் மீது வெறுப்புடன் நடந்து கொள்வது, காதலிப்பது என்று விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், அதன் பின்னர் தன் தவறை உணர்ந்து தாத்தா, தந்தையின் உன்னத தியாகம், நோக்கத்தை புரிந்து கொண்டு இறுதியில் தன்னை பழி வாங்க நினைக்கும் நண்பனை வதம் செய்யும் காட்சியில் பள்ளியை மீட்டெடுக்க எடுக்கும் முயற்சியில் தலைமுறை சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிரியை காதலி வள்ளியாக சாயா தேவி காட்சிகளில் தன் இருப்பை தக்க வைத்துள்ளார்.

வில்லன் நண்பன் சக்திவேலாக தயாரிப்பாளர் சிராஜ் எஸ் நண்பனாக கூடவே இருந்து தன் காரியத்தை சாதிக்கும் சாதுர்யமான கதாபாத்திரத்தில் இறுதியில் சாமியாடியாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தந்தையாக சரவணன் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் கண் கலங்க வைத்துவிடுகிறார்.

தாயாக ரமா அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக அநியாயத்திற்கு பயந்து, தன் மகனை பைத்தியமாக ஒப்புக் கொள்ளும் இடத்தில் இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்பிலும் கை தட்டல் பெறுகிறார்.

போஸ் வெங்கட் இயக்கிய முந்தைய படம் கன்னி மாடத்தில் கதாநாயகனாக வந்த ஸ்ரீராம கார்த்திக் இந்த படத்தில் சிறிய வேடம் என்றாலும் தனித்து நிற்கிறார்.

மற்றும் ஜெய பாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரானா, எலிசபெத் ஆகியோர் படத்தின் நம்பகத்தன்மையை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

மூன்று வித காலகட்டத்தின் கிராமத்தின் பிரம்மாண்டமான நிலப்பரப்பு காட்சிகளுடன் அழகையும் கொண்டு வந்து பள்ளி வளாகத்தின் சில உட்புறக் காட்சிகளும் பிரமிக்க வைத்து இப்படத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு.

சித்து குமாரின் இசையும், பின்னணி இசையும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.

முதல் பாதியில் சில காட்சிகளை எடிட் செய்து இன்னும் விறுவிறுப்பாக கையாண்டிருக்கலாம் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்.

பாரதி புத்தர் கலை இயக்கம் பிரீயட் படத்திற்கு பெரும் பலம்.

ஒரு நேர்மையான சமூக சீர்திருத்தவாதியின் கல்வி கற்பித்தலின் உன்னத நோக்கங்களைக் கொண்ட திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் போஸ் வெங்கட். சாதி மத பாகுபாடு காட்டும் ஒரு சமூகத்தில், ஒரு ஆசிரியர் உண்மையிலேயே நேர்மறையான மாற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்க முடியுமா? உண்மையான, தரமான கல்வியை தங்கள் கிராமத்திற்கு கொண்டு வர விரும்பும் மூன்று தலைமுறையாக தொடரும் கதையின் மூலம் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். எல்லாவற்றிற்கும் மேலாக, விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர செய்து ஒரு சமூகத்தை மேம்படுத்த உருவாக்க முயற்சித்த தன்னலமற்ற ஆசிரியர்களின் உன்னத பணியை நினைவுகூறும் படம்.

மொத்தத்தில் எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் எஸ், நிலேஃபர் சிராஜ் தயாரித்திருக்கும் சார் கல்வி சமத்துவத்தை சீர்திருத்தத்தை உருவாக்கி மூட நம்பிக்கையை உடைத்த செம்மல்களான ஆசிரியர்களின் பிரகாசமான தியாக தீபத்தின் ஒளிச்சுடர்.