சமரா திரைப்பட விமர்சனம் : ‘சமரா’ வரலாற்று போர் பின்னணி ரகசியத்துடன் கூடிய குற்ற புலனாய்வு கதையில் தடுமாறும் தந்தை மகளின் பிணைப்பு | ரேட்டிங்: 3/5

0
365

சமரா திரைப்பட விமர்சனம் : ‘சமரா’ வரலாற்று போர் பின்னணி ரகசியத்துடன் கூடிய குற்ற புலனாய்வு கதையில் தடுமாறும் தந்தை மகளின் பிணைப்பு | ரேட்டிங்: 3/5

பீக்காக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் “சமரா” படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சார்லஸ் ஜோசப்.

இதில் ஆண்டனி ஜேயாக ரஹ்மான், டாக்டர் ஜாகீர் ராசா கானாக பரத், ஜானியாக சஞ்சனா திபு, டாக்டர் ஆலன் மோசஸாக பினோஜ் வில்லியா,டாக்டர் ஆசாத் ஆக ராகுல் மாதவ்,ஏசிபி செந்தில் குமாராக கோவிந்த் கிருஷ்ணா, எஸ்ஐ அபயாக டினிஜ், தேனாக விவியா சாந்த்,மிலன் பாவாவாக வீர் ஆரியன், ஜேம்ஸாக தினேஷ் லம்பா, கீதாவாக சோனாலி சூடான்,பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய்,ஐஜி கிஷோராக டாம் ஸ்காட், சூரியாக பிஷால் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் : ஒளிப்பதிவு – சினு சித்தார்த், இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், பாடல்கள் – எடிட்டிங் –பாப்பன்,ஸ்டண்ட் – தினேஷ் காசி, நடனம் – டேனி பவுல், பிஆர்ஒ-மணவை புவன்.

இமாச்சல பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில், ஆலன் மோசஸ் இராணுவ மருத்துவப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆலன் அர்ப்பணிப்புடனும் தைரியத்துடனும் முக்கிய இராணுவ பணியில் ஈடுபட்டு இருக்கும் நிலையில்; ஒரு விபத்தை எதிர்கொள்ள நேரிட வாழ்க்கையில் தாங்கிக்கொள்ள முடியாத திருப்பம் ஏற்படுகிறது.இவருயை வெடிகுண்டு காயங்கள் கடுமையானவையாக மாறி அவருடைய உடல் முழுவதும் தோளில் நீங்காத வடுக்களாக மாறி விகாரமாகிவிடுவதால் அவரது கனவுகளையும் அவரது குடும்பத்தையும் சிதைத்து பிரிந்து விடும் அளவிற்கு நொறுங்கத் தொடங்குகிறது. அவரது மனைவி மகளை அழைத்துக் கொண்டு ஆலனிடமிருந்து பிரிந்து வேறொருவருடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இந்த முடிவு ஆலனைத் தனிமைப்படுத்துகிறது, அவரது வேலை மற்றும் பிரிந்த குடும்பத்தை நினைத்து தனிமையில் வாடுகிறார். தன் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மனைவியிடம் கேட்க, அதற்கு சம்மதம் வாங்கும் தருணத்தில் இமாச்சல பிரதேசத்தில் மகள் நடைபயணம் மேற்கொள்ளும் போது எதிர்பாராமல் விபத்தில் சிக்குகிறாள். அங்கே இறந்து கிடக்கும் இரண்டு மனிதர்களின் உடலிலிருந்து மனிதகுலத்திற்கும் அறிவியலுக்கும் அந்நியமான ஒரு வைரஸ் மகள் ஜானிக்கு தொற்றிக் கொள்கிறது.இந்த தொற்று ஒரு சிக்கலான சூழ்நிலையை கொண்டு வருகிறது. இந்த வைரஸ் மற்றும் இறந்த நபர்கள் பற்றிய விசாரணை அதிகாரியான ஆண்டனி ஜே, காட்சிக்குள் நுழைகிறார். அவர் வைரஸைச் சுற்றியுள்ள மர்மத்தையும் அதன் அபாயகரமான விளைவுகளையும் கண்டுபிடிக்கிறார். இது காலத்துக்கு எதிரான பந்தயம், கண்ணுக்கு தெரியாத எதிரியைப் புரிந்துகொண்டு வெற்றிகொள்ளும் போர் என்பதை உணர்ந்து ஆலனையும், ஜானியையும் ஒரு வீட்டில் தனிமை படுத்தச் சொல்கிறார். அவர்கள் இருவரையும் கண்காணித்து அவர்கள் சந்திக்கும் பாதிப்புக்களை கண்டறிந்து அதற்கான மருந்தையும் தீர்வையும் கண்டுபிடிக்க போராடுகிறார். அதற்குள் மனிதகுலம் அனைவருக்கும் பேராபத்தை விளைவிக்கும் வைரஸ் அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த சூழ்நிலையின் தீவிரம் எத்தகைய ஆபத்தை விளைவிக்கிறது? ஆலனும், ஜானியையும் காப்பாற்றினார்களா? ஆண்டனி இறந்த இருவர் யார் என்று துப்பறிந்தாரா? இறுதியில் யார் இத்தகைய ஆபத்தை விளைவித்தனர்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ரஹ்மான் இப்படத்தில் ‘ஆண்டனி’ என்ற துப்பறியும் நபராகவும் புரியாத புதிராகவும் படம் நெடுக வந்து தன்னுடைய ஸ்டைலான கம்பீர நடை, உடையுடன், கூலிங்கிளாஸ் அணிந்து விசாரணை நடக்கும் போது  ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கும் விதத்தில் அப்ளாஸ் வாங்குகிறார். ‘ஆண்டனி’ கதாபாத்திரமும் படம் போலவே மர்மம் நிறைந்தாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் ‘செந்தில்’ என்ற ஏசிபி போலீஸ் அதிகாரியாக கோவிந்த் கிருஷ்ணாவும், டாக்டர் ஆலன் வேடத்தில் பினோஜ் வில்யா வெடி குண்டால் பாதிக்கப்படும் உடம்பை பிரதிபலிக்கும் சிறப்பு செயற்கை ஒப்பனை 18 மணி நேரம் செய்து கொண்டு கண்களால் மட்டுமே தன்னுடைய உணர்ச்சிகளை காட்டி நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

டாக்டர் ஜாகீர் ராசா கானாக பரத் இவரின் கதாபாத்திரம் இறுதி வரை சர்ப்பரைஸாக காட்டப்படுகிறது, ஜானியாக சஞ்சனா திபு, டாக்டர் ஆசாத் ஆக ராகுல் மாதவ், எஸ்ஐ அபயாக டினிஜ், தேனாக விவியா சாந்த், மிலன் பாவாவாக வீர் ஆரியன், ஜேம்ஸாக தினேஷ் லம்பா, கீதாவாக சோனாலி சூடான்,பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய்,ஐஜி கிஷோராக டாம் ஸ்காட், சூரியாக பிஷால் பிரசன்னா ஆகியோர் படத்தில் முக்கிய பங்கு வகித்து படத்தின் கதைக்களத்திற்கு திருப்புமுனையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

கோபி சுந்தரின் பின்னணி இசை படத்தின் மையக் கருத்தோடு ஒத்துப்போகிறது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் குலு மணாலி, தர்மசாலா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் ரிச்சாகவும் படைத்திருக்கும் விதம் நன்றாகவே உள்ளது. ஆர்.ஜே.பாப்பனின் எடிட்டிங் படத்தைக் கவர்ந்திருக்கிறது, ஸ்டண்ட் தினேஷ் காசி அசத்தல் ரகம்.

சமாரா என்பது ஹீப்ரு மொழியில் புரொடக்டர் ஆஃப் காட் என்பதை குறிக்கிறது. இந்தப் படம் குற்றப் புலனாய்வுக் கதையின் பரபரப்பைத் தாண்டி சமகாலச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு போலீஸ் விசாரணை நடைமுறை மற்றும் ஒரு விஞ்ஞானியைச் சுற்றி சுழுல, உயிரியல் போர் மற்றும் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்திற்கான போரைக் கருவாகக் கையாள்கிறது படம். ‘சமாரா’ என்ற பெயரில் அனைத்து ரகசியங்களின் மர்மத்தை உணர்த்தும் படம். ‘சமாரா’ படத்தின் பின்னணி இமயமலைப் பகுதிகள். ஒரு பனி பள்ளத்தாக்கில் இரண்டு கொலைகள் நடக்க ஒரு தீவிரவாதி தப்பியோடியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த பயங்கரவாதி உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், ‘சமாரா’ படத்தின் ஆரம்பக் காட்சிகளே தீம் பரபரப்பாக மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. இணையாக, ஒரு குடும்பத்தின் பிரிவினையும், தன் மகளை நேசிக்கும் தந்தையின் ஏக்கமும் முன்வைக்கப்படுகிறது. உலகளாவிய கருப்பொருளைக் கொண்ட திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும். மேலும் பல்வேறு மொழி நட்சத்திரங்கள் கதாபாத்திரங்களில் நடிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ‘சமாரா’ ஒரு புதிய உணர்வைத் தரும் படம்.குற்ற விசாரணை ஜானரில் தொடங்கும் இப்படம் பார்வையாளர்கள் பார்க்கும் அளவிற்கு அறிவியல் புனைகதை என்றாலும் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய பேரிடரை எவ்வாறு சமாளிப்பது என்பதை படம் விளக்குகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் குறிப்புகளுடன் இரண்டாம் உலகப் போரைப் பற்றிய குறிப்புகளும் படத்தில் உள்ளன.

அறிமுக இயக்குனர் சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சமாரா’. சார்லஸ் ஜோசப்பின் முதல் படத்தின் விவரிப்பு திறமை, மேக்கிங்கிலும் சுறுசுறுப்பு, ஸ்கிரிப்ட் எந்த குறையும் இல்லாமல், கவனமாக ஆய்வு மூலம் கதையை வரலாற்றுடன் திருப்பத்துடன் புத்திசாலித்தனமாக ஒருங்கிணைத்துள்ளது முதிர்ச்சியை பிரதிபலிக்கிறது. திரைக்கதையை சார்லஸ் ஜோசப் அவர்களே எழுதியுள்ளதால் குழப்பமில்லாமல் படத்தை எளிதாக இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் பீக்காக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘சமரா’ வரலாற்று போர் பின்னணி ரகசியத்துடன் கூடிய குற்ற புலனாய்வு கதையில் தடுமாறும் தந்தை மகளின் பிணைப்பு.