சத்திய சோதனை திரைப்பட விமர்சனம் : ‘சத்திய சோதனை’ அனைவரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் பரிசோதனை| ரேட்டிங்: 2.5/5
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கும் சத்திய சோதனை படத்தை எழுதி இயக்கியவர் சுரேஷ் சங்கையா
இதில் பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா ,ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வ முருகன், ஹரிதா, பாரதி, ராஜேந்திரன், ஞானசம்பந்தம், முத்துப்பாண்டி, கர்ண ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: ஆர்.வி. சரண், எடிட்டர்: வெங்கட் ராஜன்,கலை இயக்குனர்: வாசுதேவன், பாடல் வரிகள்: வேல்முருகன், இசை: ரகு ராம். எம், பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி, பாடியவர்கள்: கங்கை அமரன், வீரமணி ராஜு, திவாகர், வசனங்கள்: வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா, வண்ணம்: அஜித் வெடி பாஸ்கரன், கலவை: ராஜா நல்லையா, மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
அருப்புக்கோட்டையில் உள்ள சங்குப்பட்டி கிராமத்தில் ஒரு நாள் இரவு பல சவரன் தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வரும் பணக்காரரை பன மரங்கள் நிறைந்த காட்டில் நான்கு பேர் துரத்திச் சென்று கொலை செய்கின்றனர். மறுநாள் காலை அந்த வழியே வரும் பிரேம்ஜி அமரன் இறந்த உடலை இழுத்து ஒரு பனை மரத்தின் நிழலில் விட்டு விட்டு அந்த உடலில் இருக்கும் வாட்ச், செல்போன் மற்றும் ஒரு செயினை எடுத்துக் கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு பாட்டி நடந்து போய் கொண்டிருக்க, அவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று காவல் நிலைய வாசலில் இறக்கி விட்டு செல்கிறார். சங்குப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜிக்கு பல பிரச்சனைகள் உருவாகிறது. இதனிடையே திடீர்திருப்பமாக கொலையாளிகள் நான்கு பேரும் சரணடைகின்றனர். கொலை செய்யப்பட்டவரின் மேலே பல சவரன் நகைகள் இருந்ததாகவும் கொலையாளிகள் சொல்ல போலீசிற்கு சந்தேகம் வலுக்கிறது. சங்குப்பட்டியில் புகார் அளிக்க வந்த பிரேம்ஜியை நன்றாக விசாரித்தால் நகையை மீட்கலாம் என்ற தோரணையில் விசாரணை திசை மாறுகிறது. பிரேம்ஜியோ தான் ஒப்படைத்த பொருட்களை தவிர வேறு எதுவும் உடலின் மேல் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, போலீசார் குழப்படைகின்றனர். இறுதியில் தொலைந்து போன நகைகளை பத்திரமாக மீட்டார்களா? பிரேம்ஜி என்ன ஆனார்? யார் நகையை எடுத்தார்கள்? என்பதே கலகலக்கும் க்ளைமேக்ஸ்.
பிரேம்ஜி அமரன் படிப்பறிவில்லாத அப்பாவி இளைஞனாக, நல்லது செய்யப்போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கதாபாத்திரம். காதலி, குடும்பம் என்று அனைவரும் கேள்விகளால் துளைத்து எடுக்கும் நேரத்திலும் அமைதியாக பதில் சொல்லும் நேர்த்தியிலும், போலீசாரிடம் அடி வாங்கி புலம்பும் இடத்திலும் சிறப்பாக செய்துள்ளார்.
நீதிபதியாக ஞானசம்பந்தம், நீதிமன்றத்தில் அனைவருக்கும் அறிவுரை வழங்கி விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்குள் ஏற்படும் பல சிக்கல்களை யதார்த்தமாகவும் அதை சமயம் சிந்தனையை தூண்டும் வகையிலும் பேசி கவனம் ஈர்க்கிறார்.
காதலி பிரவீணாவாக ஸ்வயம் சித்தா, பிரதீப் சகோதரி அன்னமாக ரேஷ்மா, கான்ஸ்டபிள் குபேரனாக சித்தன் மோகன், மகாதேவனாக செல்வ முருகன், மகாலட்சுமியாக ஹரிதா, முப்பிடாதியாக பாரதி, உளவாளி ராமராக ராஜேந்திரன், இசக்கியாக முத்துப்பாண்டி, பிரதீப் மாமா செல்வராஜாக கர்ண ராஜா ஆகியோர் அனைத்து கிராமத்து முக பாவனையோடு படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு நடிப்பில் அசத்தியுள்ளனர். லட்சுமி பாட்டி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பலம்.
வேல் முருகன் பாடல்கள் ரகுராமின் இசையில் இனிமை சேர்ப்பதோடு, தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர்: ஆர்.வி. சரண், எடிட்டர்: வெங்கட் ராஜன்,கலை இயக்குனர்: வாசுதேவன் ஆகியோர் காவல் நிலையம், நீதிமன்றம், பாட்டி வீடு, பனக்காடு ஆகியவற்றை சுற்றியே கதைக்களம் நகர்வதை அலுப்பு ஏற்படாத வண்ணம் திறம்பட கொடுத்துள்ளனர்.
இரு கிராம காவல் நிலையத்திற்கிடையே நடக்கும் ஒரு கொலை, நேர்மையாக நடந்து கொள்ளும் இளைஞர், காணாமல் போகும் நகை, அதை தேடிக் கண்டு பிடித்து ஏமாற்ற நினைக்கும் போலீஸ் அதிகாரிகள், அவர்களை பேசியே வெறுப்பேற்றும் பாட்டி, சரியாக நடந்து கொள்ள பாடம் நடத்தும் நீதிபதி என்று படம் முழுவதும் சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை மட்டுமே பிரதானமாக வைத்து லாஜிக் இல்லாமல் மெஜிக் செய்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை. நல்லதிற்கு காலமில்லை என்பதை காமெடி நெடியுடன் உணர்த்தியுள்ளார்.வெல்டன்.
மொத்தத்தில் சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கும் சத்திய சோதனை அனைவரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் பரிசோதனை.