கும்பாரி சினிமா விமர்சனம் : கும்பாரி குமரி மாவட்டத்து நட்பின் உன்னதத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில்; கும்பாரி படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.
இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா, ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தில்குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்- பிரசாத் ஆறுமுகம், இசையமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி, படத்தொகுப்பாளர் டி.எஸ்.ஜெய், நடன இயக்குனர் ராஜுமுருகன், சண்டை இயக்குநர் மிராக்கல் மைக்கேல், கலை இயக்குநர் சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்கள் வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி, மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
குமரி மாவட்டம் முட்டத்தில் மீன்பிடி தொழிலை செய்து வரும் நலீப் ஜியா, கேபிள் கனெக்ஷன் கொடுக்கும் வேலை செய்யும் விஜய் விஷ்வா இருவரும் அனாதைகள் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்வதால் உயிர் நண்பர்கள். சமூக வலைதளங்களில் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகரிக்க பிரான்க் ஷோ செய்யும் மஹானாவை எதிர்பாராதவிதமாக சந்திக்கும் விஜய் விஷ்வாவிடம் கன்னத்தில் அடி வாங்கும் மஹானா பின்னர் காதலிக்க தொடங்குகிறார். விஜய் விஷ்வா முதலில் தயங்கினாலும் பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். மஹானாவின் காதலுக்கு ரவுடி அண்ணன் ஜான் விஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள செல்லும் போது மஹானாவிற்கு 21 வயது முடிய ஒரு வாரம் இருப்பதால் அப்பொழுது தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சொல்ல, வேறு வழியில்லாமல் ஒரு வாரம் தலைமறைவாக இருக்க விஜய் விஷ்வா மற்றும் மஹானா முடிவு செய்கிறார்கள். வீட்டை விட்டு செல்லும் மஹானாவை தேடி அண்ணன் ஜான் விஜய், சாம்ஸ் மற்றும் அடியாட்களுடன் வருகிறார். நலீப் ஜியா தன் நண்பன் விஜய் விஷ்வாவிற்கு மஹானாவை திருமணம் செய்து வைப்பேன் என்று ஜான் விஜய்யிடம் சவால் விடுகிறார். இதற்கிடையே நலீப் ஜியா தன் நண்பன் திருமண செலவிற்காக மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார். அதன் பின் காணாமல் போகிறார். நண்பன் நலீப் ஜியா காணாததால் ஜான் விஜய் மீது விஜய் விஷ்வா கொலை குற்றம் சாட்டி வழக்கு போடுகிறார். இறுதியில் நலீப் ஜியா உயிரோடு மீட்கப்பட்டாரா? ஜான் விஜய் தான் கொலை செய்தாரா? விஜய் விஷ்வாவிற்கும் மஹானாவிற்கும் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நட்புக்கு இலக்கணமாக அருணாக விஜய் விஷ்வா – ஜோசப்பாக நலீப் ஜியா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஜான் விஜய்யின் தங்கையாகவும், காதலி தர்ஷிpனியாக மஹானா பொருத்தமான தேர்வு, அழகும் நடிப்பும் கலந்து காதல் தேவதையாக ஜொலிக்கிறார்.
பாசக்கார அண்ணன் துரையாக ஜான் விஜய் அலுப்பூட்டும் மேனரிசம் மற்றும் நாடகத்தன்மையான ஒவர் ஆக்டிங்கை மாற்றிக் கொண்டால் தான் பேசப்படுவார்.
ஜான் விஜய்க்கு ரைட் ஹெண்ட் சாம்ஸ் அடிவாங்குவதும், அடியாட்களுடன் சுற்றுவது, சில இடங்களில் முடிந்த வரை சிரிப்பை வரவழைக்க முயற்சிக்கிறார்.
இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், மதுமிதா, செந்தில்குமாரி,காதல் சுகுமார் ஆகியோர் பக்க மேளங்கள்.
படத்தில் நாகர்கோவில், முட்டம் கன்னியாகுமரியின் அழகையும், புதிய லொகேஷன்களையும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மீன் பிடிக்கும் போது வில்லன்களால் சுற்றி வளைக்கும் காட்சிகள், கடலை ஒட்டிய மீனவர்களின் வீடுகள், சண்டைக்காட்சிகள், கேரளவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளின் காட்சிக் கோணங்கள் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகத்தின் உழைப்பும், திறமையும் தெரிகிறது. படத்தின் பெரும் பலமே படத்தின் ஒளிப்பதிவு தான்.
இரட்டை இசையமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவியின் இசையும், பின்னணி இசையும் கச்சிதமாக உள்ளது. கன்னியாகுமரியின் மண் மாறாத மொழியில் நட்பின் புகழைப் பாடும் கும்பாரி பாடல் கவனிக்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.ஜெய், நடன இயக்குனர் ராஜுமுருகன், சண்டை இயக்குநர் மிராக்கல் மைக்கேல், கலை இயக்குநர் சந்தோஷ் பாப்பனாங்காடு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் திறன் பட்ஜெட்கேற்றவாறு பளிச்சிடுகிறது.
கன்னியாகுமரி மீனவர்கள் நண்பனை கும்பாரி என்று அழைப்பதையே படத்தின் தலைப்பாக வைத்து இயக்கியுள்ளார் கெவின் ஜோசப். இதில் நட்பு, காதல், அண்ணன் தங்கை பாசம், கடத்தல், துரத்தல், தேடுதல், ஆக்ஷன், கொஞ்சம் நகைச்சுவை, வழக்கு விசாரணை என்று காட்சிகள் அமைத்திருந்தாலும் ஒன்றொடொன்று தொடர்பில்லாமல் சில காட்சிகள் தெரிவதும், பழைய பாணியில் கதையை சொல்லியிருக்கும் விதமும், தோய்வு ஏற்படாதவாறு முடிந்தவரை இயக்கியிருந்தால் வித்தியாசமான டைட்டில் போல் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கும் கும்பாரி.
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் கும்பாரி குமரி மாவட்டத்து நட்பின் உன்னதத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லும் படம்.