குட் நைட் விமர்சனம் : தியேட்டரில் புன்னகை பூக்கச் செய்யும் விஷுவல் ட்ரீட் படம் | ரேட்டிங்: 3.5/5

0
435

குட் நைட் விமர்சனம் : தியேட்டரில் புன்னகை பூக்கச் செய்யும் விஷுவல் ட்ரீட் படம் | ரேட்டிங்: 3.5/5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,எம்.ஆர்.பி.என்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி  வெளியீட்டில் வந்துள்ள குட் நைட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விநாயக் சந்திரசேகரன்.

இதில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் ரெபேக்கா, ஸ்ரீ ஆர்த்தி, பக்ஸ், கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை- -ஷான்  ரோல்டன், ஒளிப்பதிவு-ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு-பரத் விக்ரமன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

மோகன் (மணிகண்டன்) தாய், அக்கா, அக்கா கணவர், தங்கையுடன் வசிக்கிறார். வீட்டோட மாப்பிள்ளையாக ரமேஷ் (ரமேஷ் திலக்) இருக்கிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மோகன் ஐடி கம்பெனியில் வேலை செய்தாலும் காதலும், திருமணமும் எட்டா கனியாக இருப்பதற்கு காரணம் தூங்கும் போது விடும் குறட்டை சத்தம் தான். இதனால் அவரை மோட்டார் மோகன் என்று அழைக்கும் அளவிற்கு அவரின் குறட்டை சத்தம் அனைவருக்கும் இம்சை கொடுக்கிறது.மோகனின் அக்கா (ரேச்செல் ரெபெக்கா) கணவர், ரமேஷ் (ரமேஷ் திலக்), வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியைப் பொருத்தும் வேலை பார்க்கிறார். அப்படி அவர் செல்லும் வீட்டின் மாடியில் பெற்றோரை இழந்த அனு(மீதா ரகுநாத்), தனியாக வசிக்கிறார். மோகன் எதிர்பாராத விதமாக அனுவை (மீதா ரகுநாத்) சந்திக்க காதல் ஏற்பட்டு, திருமணத்தில் முடிகிறது. குறட்டை சத்தத்தை மறைத்து திருமணம் செய்து கொள்ளும் மோகனுக்கு அதுவே பிரச்சனையாகிறது. இரவில் விடும் குறட்டையால் மனைவிக்கு உடல்நலம் பாதிக்க, இந்த குற்ற உணர்வு காரணமாக மோகன் இன்னொரு அறையில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்;. இவர்களின் திருமண வாழ்க்கை என்ன ஆனாது? குறட்டையுடன் வாழ்க்கை தொடர முடிந்ததா? இல்லையா? குறட்டைக்கு தீர்வை மணிகண்டன் கண்டாரா? என்பதே படத்தின் கலகலக்கும் க்ளைமேக்ஸ்.

சில நல்ல வேடங்களில் ஜொலித்து ஒரு தனிப்பட்ட நடிப்பை தந்து கொண்டிருக்கும் மணிகண்டன் இந்தப் படத்தின் மெயின் கதாநாயகன். இவரின் குறட்டை பிரச்சனை, அதை அனாயசியமாக இயல்பாக செய்திருக்கும் விதம், காதல் கைகூடினாலும் திருமணத்தில் ஏற்படும் விரிசல், அதை சரி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் என்று காட்சிக்கு காட்சி தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் கவனத்தை ஈர்த்து காமெடியிலும் அதகளம் பண்ணியிருக்கிறார். வெல்டன் மணிகண்டன்.

முக்கிய வேடத்தில் ரமேஷ் திலக் எத்தகைய கேரக்டரையும் அதற்கேற்றவாறு மனதில் நிற்கும் அளவில் தன்னுடைய நடிப்பால் ஈர்க்கக்கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அமைதி பெண்ணாக வந்து அசத்தலாக மிகையில்லா நடிப்பை தந்திருக்கும் மீத்தா மற்றும் பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் ரெபேக்கா, ஸ்ரீ ஆர்த்தி, பக்ஸ், கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் நன்றாக தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக பிரதிபலிக்கின்றனர்.

இசை- -ஷான்  ரோல்டன், ஒளிப்பதிவு-ஜெயந்த் சேது மாதவன் இருவரின் பங்களிப்பு படத்தின் முக்கிய கருத்தை மையப்படுத்தி அதற்கான மெனக்கெடலுடன் தத்ரூபமாக கொடுத்துள்ளனர். ஒலி வடிவமைப்பு படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

படத்தொகுப்பு-பரத் விக்ரமன் நடுவில் சிறிது நேரம் தோய்வு ஏற்பட்டாலும் இறுதியில் அதை சரிசெய்து கச்சிதமாக கொடுத்துள்ளார்.

சாதாரண மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி சிந்தித்து அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி, படம் எடுப்பது எளிதானது அல்ல, குட் நைட் கதையை மிகவும் தெளிவாகவும் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். இதற்கு முதல் காரணம் அழுத்தமாகவும், துல்லியமாகவும் அனைவரும் சந்திக்கும் பிரச்சனையை அனைவராலும் தொடர்புபடுத்தக்கூடிய திரைக்கதையை நாயகன், நாயகி தொடர்புடைய பின்னணி, இயல்பான காதல் காட்சிகள், பிரச்சனைகள், விரிசல்களை இவை தொடர்புடைய காட்சிகளை கச்சிதமாக கொடுத்து இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் எழுதியிருக்கும் விதமே. பொழுதுபோக்காக செல்லும் முதல் பாதியைப் போலல்லாமல், இரண்டாம் பாதியில் திருமணத்திற்குப் பிறகு, மோகனும் அனுவும் தங்களின் முக்கியப் பிரச்சனைகளைச் சமாளிக்கப் போராடும் விதம், நவீன உறவுகளில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை காமெடி கலந்து அதற்கான சிகிச்சைகள், சந்திக்கும் போராட்டங்கள் க்ளைமேக்சில் மீண்டும் விறுவிறுப்பை கூட்டி தீர்க்கமுடியாத பிரச்சனையை சமாளித்து பழகவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அசத்தலுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்.ஆர்.பி.என்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி  வெளியீட்டில் வந்துள்ள குட் நைட் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் குறட்டையிலிருந்து விடுபட செல்லலாம் நகைச்சுவையும், சுவாரஸ்யத்தையும் கொடுக்கும் தியேட்டரில் புன்னகை பூக்கச் செய்யும் விஷுவல் ட்ரீட் படம்.