குடிமகான் விமர்சனம் : குடிமகான் உணவும், பணமும் அளவுக்கு மீறினால் பகையாகும் என்பதை நகைச்சுவையோடு அறுசுவையாக கொடுத்துள்ளனர் | ரேட்டிங்: 4/5

0
626

குடிமகான் விமர்சனம் : குடிமகான் உணவும், பணமும் அளவுக்கு மீறினால் பகையாகும் என்பதை நகைச்சுவையோடு அறுசுவையாக கொடுத்துள்ளனர் | ரேட்டிங்: 4/5

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில்; எஸ்.சிவகுமார்; தயாரித்துள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் இயக்கியிருக்கிறார்.

விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், , ஜி.ஆர் கதிரவன், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-தனுஜ் மேனன்,ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், படத்தொகுப்பு-ஷிபு நீல், தயாரிப்பு நிர்வாகி –ஜி.ஆர்.கதிரவன், ஆடை-பிரியா கரன், பிரியா ஹரி, கலை-சுரேஷ் விஷ்வா, தயாரிப்பு வடிவமைப்பு-பிரேம் கருத்தமலை, நடனம்-அமீர், சண்டை-பயர் கார்த்திக், மக்கள் தொடர்பு-ஜான்.

ஏடிஎம் வங்கியில் பணம்; நிரப்பும் வேலை செய்யும் சின்சியர் ஊழியர் விஜய்; சிவன். இவர் மனைவி சாந்தினி, பள்ளிpயில் படிக்கும் மகன், மகள் மற்றும் குடிகார தந்தை சுரேஷ் சக்கரவர்த்தியுடன் வசிக்கும் நடுத்தர குடும்பம். வேலைக்கு செல்லும் இடமெல்லாம் கிடைக்கும் துரித உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாகவும், வழக்கமாகவும் கொண்டவர். அதனால் ஆட்டோ பிரவரி சின்ரொம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு துரித உணவு உட்கொள்ளும் போது குடிப்பது போன்று போதை தலைக்கேறி விடும். இதனை அறியாமல் தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது இந்த நோய் தாக்க பெரிய கலாட்டா செய்ய வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். மனைவி, தந்தை நம்ப மறுத்து விஜய்; சிவன் குடித்து விட்டுத்தான் வருகிறார் என்று சண்டை போடுகின்றனர். பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இதனிடையே இந்த பாதிப்பாபல் ஒரு ஏடிஎம்மில் பணம் நிரப்பும் போது 100 ரூபாய் பதிலாக 500 ரூபாய் கட்டை நிரப்பி விட்டு வந்து விட பணம் எடுக்க வந்தவர்களுக்கு 100 பதிலாக 500 வருவதை பார்த்து போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அலைமோதி பெரிய கலவரமாகி விடுகிறது. இதனால் எட்டு லட்சத்திற்கு நஷ்டம் அடைந்து பெரும் சிக்கலுக்கு உள்ளாகும் பணம் நிரப்பும் ஏஜென்சி விஜய் சிவனை வேலையை விட்டு தூக்கி விடுகிறது. வேலையை இழந்து வீட்டிற்கு வரும் விஜய் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியாக அவருடைய தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். குடும்பத்தை நடத்தவே சிரமம்படும் விஜய் சிவனுக்கு அந்த எட்டு லட்சம் பணத்தை எடுத்தவர்களை கண்டு பிடிக்க புறப்படுகிறார். அவர்களின் முகவரியை நண்பர் உதவியுடன்; தேடி எடுத்து விசாரிக்கும் போது குடிமகன் சங்கத் தலைவர் நமோ நாராயணன் தன் சகாக்களுடன் உதவி செய்ய முன் வருகிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து களவு போன பணத்தை மீட்டார்களா? பணம் எடுத்தவர்கள் திருப்பி கொடுத்தார்களா? இதனால் இவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து மீண்டார்களா? மீண்டும் விஜய் சிவன் பணியில் சேர்ந்தாரா? என்பதே கலகலக்கும் க்ளைமேக்ஸ்.

அறிமுக நாயகன் விஜய் சிவன் மதியாக முதல் படத்திலேயே வித்தியாசமான கதையின் நாயகனாக தேர்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நேர்மையான ஊழியராக, பாசமிகு தந்தையாக, அன்பான கணவராக, விதன்டாவாத தந்தையின் மகனாக தனக்கு ஏற்பட்ட அரிய நோயிலிருந்து விடுபட முடியாமலும், பணத்தை மீட்டு கொடுத்து வேலையில் சேர எடுக்கும் நடவடிக்கைகள் அவருக்கே திரும்பி சிக்கல்கள் ஏற்படுத்த அதிலிருந்து மீள்வதற்கு அவர் படாதபாடு பட்டு, அடிபட்டு எடுக்கும் முயற்சிகள் நகைச்சுவை கலந்து படம் முழுவதும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி நிறைவாக, அற்புதமாக தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். ஏடிஎம்மில்; பணத்தை நிரம்பும் ஊழியராக, அதில் கையாளப்படும் விதம் சித்தரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இருப்பது சினிமாவில் இதுவே முதல் முறை என்பது சிறப்பம்சம்.

மனைவி பவித்ராவாக சாந்தினி தமிழரசன் முதல் பாதியில் நடுத்தர குடும்பத்து தலைவியாக அச்சு அசலாக பிரதிபலித்து குழந்தைகளை கவனிப்பதும், கணவனை நச்சரிப்பதும், மாமானாரின் அலப்பறையை சகித்துக் கொள்வதும் என்று நச்சென்று பொருந்தியுள்ளார்.

வயது முதிர்ந்தாலும் இளமை துள்ளலுடன் தன் சந்தோஷத்திற்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் வலம் வரும் தந்தை சுந்தரமாக சுரேஷ் சக்கரவர்த்தி,குடிகார சங்க தலைவர் மதுசூதனனாக நமோ நாராயணன் வந்தவுடன் தான் படம் களை கட்ட தொடங்குகிறது.

மற்றும் வயது முதிர்ந்தும் திருமண தடைப்பட்டதால் நொந்து கொண்டிருக்கும் மாப்பிள்ளையாக சேது ராமன், , சங்க உறுப்பினர்களாக ஜி.ஆர் கதிரவன் மற்றும் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், பாவாடை ராஜனாக டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, சிறுமி இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, கந்து வட்டிக்காரராக மனோகர் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் கவனிக்க வைத்து தடம் பதித்துள்ளனர்.

தனுஜ் மேனன் இசையும், பின்னணி இசையும் கவனம் பெறுமாறு திறம்பட அமைத்திருக்கிறார்.

ஏடிஎம் சம்பந்தப்பட்ட காட்சிகள், குடியிருப்பு, திருமண மண்டபத்தில் நடக்கும் சம்பவங்கள், கந்து வட்டிக்காரர் துரத்தும் காட்சிகள் என்று பார்த்து பார்த்து காட்சிக் கோணங்களை அமைத்து சிரிப்பலை அதிர மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தொகுப்பு-ஷிபு நீல் கச்சிதம். சண்டை-பயர் கார்த்திக் துரத்தல் சண்டைக் காட்சிகளை கலகலப்பாக கொடுத்துள்ளார்.

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் இயக்குனர் குடிமகான் படத்தில் தடம் பதித்து மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். நாட்டின் பிரஜையை குடிமகன் என்று சொல்வார்கள். குடிப்பவர்களையும் அப்படித்தான் அழைக்கிறார்கள். டைட்டில் குடிமகன் இல்லை என்றாலும் குடிமகான் என்று வைத்ததால் முதலில் தயக்கமாக இருந்தாலும் படத்தை பார்த்த பிறகு எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு நல்ல எண்டர்டெயிண்ட்மெண்ட் படமாக சிரிக்க ரசிக்க கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ்.என். குடிக்காமலேயே துரித உணவால் போதையாகும் புதிய களத்தை தேர்ந்தெடுத்து அதில் மாயமான பணத்தை மீட்கும் முயற்சியில் நகைச்சுவையை கலந்து கொடுத்து திரைக்கதையாக்கி ஒரு ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ்.என். இது சமீபத்தில் ஏடிஎம்மில் உண்மையான சம்பவமாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தை எடுத்தவர்கள், வசதியானவர்களோ, வசதியில்லையோ ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க தயங்குவதை அழுத்தமான பதிவாக கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் துரித உணவுகள் அதிகம் உண்பதின் தீமையையும், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு முக்கியத்துவத்தையும் அறிவுரையாக சொல்லமால், காமெடி கலந்து விறுவிறுப்பும், கலகலப்பும் கலந்து அருமையாக கொடுத்து மனதில் மகிழ்ச்சியோடு படம் பார்த்து செல்வதை உறுதி செய்துள்ளார் இயக்குனர் பிரகாஷ்.என். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் தயாரித்துள்ள படம் குடிமகான் உணவும், பணமும் அளவுக்கு மீறினால் பகையாகும் என்பதை நகைச்சுவையோடு அறுசுவையாக கொடுத்துள்ளனர்.