கிடா விமர்சனம் : கிடா கிராமத்து தீபாவளி கொண்டாட்ட விருந்து மட்டுமல்ல நெகிழ்ச்சியூட்டும் உணர்ச்சி குவியலின் பாசப்போராட்டம் | ரேட்டிங்: 3.5/5
ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில் கிடா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ரா.வெங்கட்
இதில் பூராம், காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லெட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜூ, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எம்.ஜெயப்பிரகாஷ், இசை-தீசன், எடிட்டர்-ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள்- ஏகாதசி, கலை-கே.பி.நந்து, சண்டை-ஒம் பிரகாஷ், பிஆர்ஒ- ஏய்;ம் சதீஷ்.
மதுரை அருகே சின்னஞ்சிறு மலைப்பிரதேசத்தின் அருகே வசிக்கும் செல்லையா(பூராம்) மற்றும் மீனம்மாள் (பாண்டியம்மா) பெற்றோரை இழந்த பேரன் கதிருடன் (மாஸ்டர் தீபன்) வசிக்கின்றனர். தன் தாத்தா பாட்டி மற்றும் வளர்க்கும் ஆட்டு கிடா ஆகிய மூன்றும் தான் அவன் உலகம். செல்லையா தன்னால் முடிந்த வேலையை செய்து சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தீபாவளி நெருங்குகிறது.கதிர் தாத்தாவிடம் விளம்பரத்தில் வரும் உடையை தீபாவளிக்கு எடுத்து தருமாறு கேட்கிறான். தாத்தாவும் எடுத்து தருவதாக கூறி விட்டு அந்த உடையை எடுக்க ரூபாய் இரண்டாயிரம் தேவைப்படுவதால் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்கிறார். ஆனால் ஒருவரும் அவருக்கு உதவி செய்ய முன் வராததால் வேறு வழியின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தன் பேரனின் ஆசையை நிறைவேற்ற கிடாவை விற்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த கிடா சாமிக்கு நேர்;ந்து விட்டதை அறிந்ததும் யாரும் வாங்க முன் வராமல் இருக்கின்றனர். இருந்தாலும் செல்லையா அதை தீபாவளிக்குள் விற்பதற்காக முயற்சி செய்கிறார். இதனிடையே வெள்ளைச்சாமி (காளி வெங்கட்) பல வருடங்களாக கறி வெட்டும் வேலை செய்யும் தொழிலாளி. தினமும் இரவு குடித்து விட்டு காலையில் வேலைக்கு தாமதமாக வரும் வெள்ளைச்சாமியை கடையின் முதலாளி மகன் திட்ட வேலையை விட்டு செல்கிறார். தீபாவளிக்குள் போட்டி கடை போடுகிறேன் என்று சவால் விட்டுச் செல்லும் வெள்ளைச்சாமியால் ஒரு கிடா கூட கிடைக்காமல் திண்டாடுகிறார். அந்த சமயத்தில் செல்லையாவின் கிடாவைப் பற்றி கேள்விப்பட்டு பணம் கொடுத்து வாங்கிச் செல்வதாக் கூறிவிட்டு செல்கிறார் வெள்ளைச்சாமி. பணத்தை புரட்டி எடுத்து வரும் போது கிடா காணாமல் போகிறது. அதனை தேடி செல்லையா, பேரன் கதிர் மற்றும் வெள்ளைச்சாமி, அவருடைய மகன் லோகி (பாண்டி) ஆகியோர் செல்கின்றனர். இவர்களுக்கு கிடா கிடைத்ததா? வெள்ளைச்சாமி தன் போட்ட சவாலில் ஜெயித்தாரா? செல்லையா தன் பேரனுக்கு புதுத்துணி வாங்கி கொடுத்தாரா? பேரன் கதிர் மகிழ்ச்சி அடைந்தானா? என்பதே படத்தின் அருமையான முடிவு.
தாத்தா செல்லையாவாக பூராம் கிராமத்தில் இருக்கும் வயதான முதிய தோற்றத்தை பிரதிபலித்து, பேரனின் ஆசையை நிறைவேற்ற படும் அவஸ்தையை பிரமாதமாக செய்திருக்கிறார். எந்த நேரத்தில் பாசத்தை காட்ட வேண்டும், எந்த நேரத்தில் கோபத்தை காட்ட வேண்டும் என்பதை அளவோடு ஆனால் அழுத்தமாக பதிவுடன் மனதில் நிற்கிறார். பேரன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பான் என்பதை அறிந்து பணத்திற்காக எடுக்கும் முயற்சி நிறைவேறாமல் போக அதற்கேற்றவாறு தாமதமாக வருவதும், கிடாவை காணாமல் பதைபதைக்கும் காட்சிகளில் தத்ரூபமான வெளிப்பாடு சிறப்பு. இறுதிக் காட்சியில் தன் பேரனின் சாதுர்யத்தை மெச்சும் ஒரு கிராமத்து தாத்தாவின் பாசப்பிணைப்பை படத்தில் காணலாம்.
பாட்டி மீனம்மாவாக பாண்டியம்மா முதலில் குறிப்பிட்ட காட்சிகளில் வரும் பாண்டியம்மா, பின்னர் தன் கணவனின் நடவடிக்கையை கண்டித்து கோபப்படுவதும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்ட வேளையில் வரும் ஞாபகம் தான் படத்தின் முக்கிய காட்சிக்கு ஊன்றுகோலாக உதவுகிறார்.அவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவதும், அதன் பின் எடுக்கும் முடிவு, தன் பேரனுக்காக செல்லும் இடமெல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.
வெள்ளைச்சாமியாக காளிவெங்கட் குடிப்பதால் தனக்கு எற்பட்ட இழப்பை உணர்ந்து திருந்தி வாழ நினைக்கும் நேரத்தில் வரும் இன்னல்களை சமாளிக்க முடியாமல் திணறுவதும், பின்னர் கையில் பணம் இல்லையென்றாலும் கிராமத்து மக்களிடம் வசூலிக்கும் முறையில் கலகலப்பில் இன்னொரு காளிவெங்கட்டை பார்த்து ரசிக்கலாம். இறுதிக்காட்சியில் கஷ்டப்பட்டாலும் பணத்தை விட குணம் தான் பெரிது என்று நிரூபித்து கை தட்டல் பெறுகிறார்.
மாஸ்டர் தீபன் அவன் வளர்க்கும் கிடாவைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்வதால் சிறுவனின் பங்களிப்பு படத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஆசையை விட கிடாமேல் இருக்கும் பாசம் தான் கடைசியில் ஜெயிக்கிறது.
காளிவெங்கட்டின் மனைவி லெட்சுமியாக வரும் விஜயா புதுமுகம் என்பதை விட தேர்ந்த நடிப்பும், எடுக்கும் அதிரடி முடிவும் கடைசி நேரத்தில் தன் கணவனின் மானத்தை காப்பாற்றி, தன் மகனின் காதலுக்கும் ஆதரவாக இருந்து அழுத்தமான வசன உச்சரிப்பு என்று கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.
காளிவெங்கட்டின் மகனாக வரும் பாண்டி, பாண்டியின் காதலியாக ஜோதி, ராஜூ, டீக்கடைக்காரராக கருப்பு, திருடர்களாக வந்து நகைச்சுவையில் கலக்கும் ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோர் புதுமுகங்கள் ஆனால் நடிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை என்பதை அசத்தலாக மெய்பித்துள்ளனர்.
கிராமத்து கதைக்கேற்ப கீற்று குடிசை, டீக்கடை, கசாப்பு கடை, காளி வெங்கட்டின் வீடு, பூராம் செல்லும் இடங்கள், திருடும் இடங்கள் என்று தன் காட்சிக்கோணங்களில் தன் திறமையை காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷ்.
ஏகாதசி பாடல்களில் தீசனின் இசையை ரசிக்கலாம்.
எடிட்டர்-ஆனந்த் ஜெரால்டின், கலை-கே.பி.நந்து, சண்டை-ஒம் பிரகாஷ் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
ஒரு சிம்பிள் கதைக்களத்தை சுவாரஸ்யமாக கொடுப்பது என்பது பெரிய திறன் வேண்டும். அதை கச்சிதமாக காட்சிகளில் தோய்வில்லாமல் திரைக்கதையை கொண்டு சென்று இறுதி வரை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சுபமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ரா.வெங்கட். ஓவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு நுட்பமான திருப்பத்தை வைத்து அதிரடியாக முடித்திருக்கும் விதம் அருமை. தாத்தா, பாட்டி, பேரன் பாசம், தொழிலில் ஜெயிக்க போராடும் மனிதர், காதல் ஜோடி, கணவன் மனைவி புரிதலான அன்பு, உதவ மனம் வேண்டும் என்று புரிய வைக்கும் கிராமத்து மக்களின் பண்பு, வலுவான பெண்களின் பாத்திரப்படைப்புகள், கிடாவின் பரிதவிப்பு கதைக்குள் விரியும் கிளைக்கதைகள், அதை சாமர்த்தியமாக ஒன்று சேர்த்து இறுதி காட்சி வரை பார்த்து பார்த்து காட்சிகளை அழகிய சிலை போல் அனைவரும் ரசிக்கும் விதத்தில் செதுக்கி திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார் ரா.வெங்கட். இவரின் படைப்பு பல விருதுகளை நிச்சயம் வெல்லும்.
மொத்தத்தில் ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்திருக்கும் கிடா கிராமத்து தீபாவளி கொண்டாட்ட விருந்து மட்டுமல்ல நெகிழ்ச்சியூட்டும் உணர்ச்சி குவியலின் பாசப்போராட்டம்.