காலேஜ் ரோடு விமர்சனம் : காலேஜ் ரோடு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை ஏழை எளியவர்கள் பயில ஏழை மாணவன் எடுக்கும் விபரீத முடிவால் ஏற்படும் அதிரடி மாற்றம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் அல்ல பாடம் | ரேட்டிங்: 3.5/5
எம்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரவீன், சரத் மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய் அமர் சிங்.
இந்தப் படத்தில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, அடாவடி அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஆப்ரோ, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம், படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி, இணை இயக்கம் – சேகர், சண்டை இயக்கம் – பி.சி., நடன இயக்கம் – விஜி, ஒப்பனை – கார்த்திக் குமார், விளம்பர வடிவமைப்பு – லிங்கம் அழகர், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, மக்கள் தொடர்பு – குணா.
இந்தியாவில் மிக முக்கியமான கல்லூரியாக கருதப்பட்டு மாணவர்களின் வாழ்நாள் கனவாக சேர நினைக்கும் பெசிபிகா யூனிவர்சிடியில் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்ற லிங்கேஷ் சேர்கிறார். முதலாமாண்டில் சேர்ந்து சைபர் செக்யூட்டி சம்பந்தப்பட்ட ரிவர்ஸ் ஹாக்கிங் பற்றி ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க தீவிரமாக படித்து வருகிறார் லிங்கேஷ். இந்த சமயத்தில் கல்லூரியில் வங்கி கணக்கு ஆரம்பிக்க லிங்கேஷ் செல்ல, அந்த சமயத்தில் முகமுடி அணிந்த கும்பல் வங்கியில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறது. கொள்ளையடித்த ஒரு நபரின் முகத்தை பார்க்கும் லிங்கேஷ், இதனை போலீசிற்கு தெரிவிக்கிறார். போலீஸ் ஒரு தனிப்படையமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர். லிங்கேஷ் முக்கிய சாட்சியாக இருப்பதால் அவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கொள்ளையடித்த கும்பல் லிங்கேஷை பயமுறுத்த காரணம் என்ன? வங்கியில் கொள்ளையடித்த கும்பல் யார்? எதற்காக? என்பதே படத்தில் கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக லிங்கேஷ் இரு வேறு காலகட்டத்தில் தன் இளமைக்கால பள்ளி மாணவனாக பட்ட துன்பங்கள், குடும்பத்தின் வறுமை நிலை ஆகியவற்றை தத்ரூபமாக தன்னுடைய யதார்த்தமான, அழுத்தமான நடிப்பால் வேறுபட்டு காண்பித்திருக்கும் விதம் அருமை. முதல் பாதியில் லிங்கேஷ் பணக்கார பையனாக கல்லூரி படிப்பு, காதல், நட்பு என்று கலகலப்பாக நடித்து இரண்டாம் பாதியில் ஏழ்மையால் அவதிப்படும் சராசரி மாணவனாக தன் நண்பர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கண்டு வருந்தி எடுக்கும் முடிவு படத்தின் இறுதிகட்டத்தில் மாறுபட்ட தேர்ந்த நடிப்பால் அதிர வைத்து கண் கலங்க வைத்து விடுகிறார். வெல்டன்.
மோனிகா, ஆனந்த்நாகு, நகைச்சுவைக்கு அடாவடி அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா ஆகியோர் கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களாக வந்து படத்தின் முக்கிய காட்சிகளுக்கு சாட்சியாக உயிரோட்டமுள்ள திரைக்கதையில் முத்திரை பதித்துள்ளனர். இவர்களுடன் ஜெய் அமர் சிங் கிராமத்து நண்பராக வந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
இளமை துள்ளல் கலந்த இசையில் மனதை மகிழ்விக்கிறார் இசையமைப்பாளர் ஆப்ரோ.
நகரம், கிராமம் என்று இரு வேறு காலகட்டத்தின் மாற்றங்களை தன் காட்சிக்கோணங்களால் வர்ணஜாலம் காட்டி முத்தரை பதித்து சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம்.
படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி கச்சிதம்.
காலேஜ் ரோடு டைட்டிலுக்கேற்ற கதைக்களம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அழுத்தமான பதிவுடன் இயக்கியிருக்கிறார் ஜெய் அமர் சிங்.அனைவருக்கும் கல்வி கிடைக்க வங்கிகளில் கல்விக்கடன் தாராளமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பால் ஏழை, எளிய மாணவர்கள் வங்கிகளில் அலைந்து திரிந்து அவமானப்படுகிறார்கள். பின்னர் கடன் பெற்று கிடைக்கும் பணத்தை கொண்டு படிக்கும் போதே, வட்டியை கட்ட சொல்லி நிர்பந்திக்கும் நிலையில் வேறு வழியில்லாமல் படிப்பதை விட்டு விட்டு வேலை செய்து கடனை அடைக்க போராடும் ஏழ்மையான மாணவர்களின் நிலையை, வங்கி அதிகாரிகளின் அடாவடி போக்கையும், திமிரையும் காண்பித்து, அதனால் பாதிக்கப்படும் ஏழைக்குடும்பங்கள் எடுக்கும் விபரீத முடிவால் பாதிக்கப்படும் மாணவன் அதிகாரத்தை கையிலேடுத்து அவர்களை பழி தீர்த்து டிரஸ்ட்டை உருவாக்கி பல ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வதாக திரைக்கதையமைத்து முதல் பாதி ஜாலியான இளமை காதல் கலந்து பின்னர் இரண்டாம் பாதியில் கிராமத்து மாணவனின் வலியை உரக்கச் சொல்லி யதார்த்தமாக கொடுத்து க்iளைமேக்ஸ்; காட்சியில் அதிர்ச்சி கலந்து அசத்தலுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர் சிங். கல்விக் கடன் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் அனைவருக்கும் உணர்த்திய இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
எம்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரவீன், சரத் மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் காலேஜ் ரோடு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை ஏழை எளியவர்கள் பயில ஏழை மாணவன் எடுக்கும் விபரீத முடிவால் ஏற்படும் அதிரடி மாற்றம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் அல்ல பாடம்.