காரி விமர்சனம் : காரி மனிதன்-விலங்கு பந்தத்தை அழுத்தமாக வித்தியாசமான கோணத்தில் சொல்லி அசத்தும் பொதுநலவாதி தரும் நீதி | ரேட்டிங்: 3.5/5
பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார் தயாரித்து அறிமுக இயக்குனர் ஹேமந்த் காரி படத்தை இயக்கியுள்ளார்.
இதில் சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம்குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனிமுருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, இசை-டி.இமான், பாடல்கள்-லலித் ஆனந்த், ஹேமந்த், எடிட்டர்-சிவாநாதீஷ்வரன், சண்டை-அன்பறிவு, கலை-மிலன், விஷ_வல் -ஹரிஹரசுதன், பிஆர்ஒ-ஜான்.
காரியூர், சிவனேந்தல் என்ற இரு ஊர்களுக்கு பொதுவாக இருக்கும் கோயிலுக்கு நிர்வாக பொறுப்பு ஏற்கும் விஷயத்தில் முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் ஒரு ஊரிலிருந்து 18 காளைகளை கொண்டு வர வேண்டும் மற்ற ஊரிலிருந்து 18 மாடிபிடி வீரர்கள் வந்து அதிகபட்சமாக 10 மாடுகளையாவது பிடிக்க வேண்டும் இதில் ஜெயிப்பவர்கள் தான் கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று இரண்டு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி முடிவெடுக்கின்றனர்.இதற்கிடையே சென்னையில் பந்தய குதிரைகளுக்கு பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் அவரது மகன் சசிகுமார் இருக்கின்றனர். ;ஜாக்கி சசிகுமார் ஒட்டிய குதிரை பந்தயத்தில் தோற்க அதன் எஜமானன் குதிரையை சுட்டு கொன்று விடுகிறார். இதனால் சசிகுமாரை கோபித்துக் கொள்ளும் ஆடுகளம் நரேன் அதிர்ச்சியில் இறந்தே விடுகிறார். தந்தையின் இழப்புடன் சொந்த ஊர் மக்களின் அழைப்பின் பேரில் சசிகுமார் மீண்டும் கிராமத்திற்கு வருகிறார். அங்கே வறட்சி நிலையால் கிராமத்து இடங்களை குப்பைகளை குவிக்கும் இடமாக தேர்வு செய்யும் அரசாங்கத்தின் ஆணையை ரத்து செய்ய சசிகுமார் என்ன செய்தார்? அடங்காத பந்தய குதிரைகள், காளைகள் ஆகியவற்றை வாங்கி விருந்தாக்கி ருசி பார்க்கும் கார்ப்பரேட் ஜே.டி.சக்கரவர்த்தியின் பணக்கார திமிரை அடக்கினாரா? சசிகுமார் ஊரில் அடங்காத மதிப்புமிக்க காரி என்ற காளையை வாங்க ஜே.டி.சக்கரவர்த்தி சதி திட்டம் தீட்ட அதை முறியடித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
சசிகுமார் கிராமத்து இளைஞன் சேதுவாக, குதிரையின் ஜாக்கியாக, கிராமத்தின் வளங்களை காப்பாற்றும் மனிதராக, காளையை காப்பாற்றும் மாடிபிடி விரராக, காதலிக்கு கொடுக்கும் வாக்கை காப்பாற்ற போராடும் காதலனாக, தந்தையின் சமூக அக்கறையை பின்பற்றும் மகனாக பலவித கோணங்களில் வரும் சிக்கல்களை சமாளிக்கும் பொறுப்புள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நூறு சதவித உழைப்பை கொடுத்து வெற்றியும் காண்கிறார். கிராமத்து இளைஞராக பொருத்தமாக சசிகுமாருக்கு அமைந்து விடுவதால் எளிதாக கச்சிதமாக நடித்து விடுகிறார்.
நாயகி பார்வதி அருண் காளை காரியை வளர்க்கும் மீனாவாக எதிர்பாராத இயல்பான நடிப்பு. காரியை காணாமல் அழுது புலம்பும் ஒரு சீனில் படத்தின் மொத்த கைதட்டலையும் ஒருங்கே பெற்று விடுகிறார். வரும் படங்களில் கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தினால் முக்கியமான நடிகையாக முன்னணியில் வருவார்.
காரியாக வரும் காளையின் கம்பீரம், முரட்டு பார்வை, ஆக்ரோஷம் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சியில் வாடி வாசல் வழியே சீறிப் பாய்ந்து வரும் காட்சி ஒன்றே போதும் படத்திற்கு கூடுதல் பலமமும் பெற்றியும் ஒருசேர தந்துள்ளது.
அலட்டலும், அதட்டலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி, சிரிப்பை வரவழைக்க முடியாமல் திணறும் ரெடின் கிங்ஸ்லி, பொறுப்பான அப்பா ஆடுகளம் நரேன், நச்சென்ற நடிப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், கம்பீர ஊர் தலைவர் நாகி நீடு, பிரேம்குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனிமுருகன் மற்றும் பலர் படத்திற்கு உற்ற துணை கதாபாத்திரங்களாக வந்து சிறப்பு செய்கின்றனர்.
கணேஷ் சந்திரா படத்தின் ஒளிப்பதிவு மற்றும் டி. இமான் பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் முறையே குதிரை பந்தயம், ஜல்லிக்கட்டு க்ளைமேக்ஸ் காட்சி போன்றவற்றை திரைக்கதையின் போக்கில் உயர் மட்டத்திற்கு காட்சிகளை செதுக்கியுள்ளனர். வெல்டன்.
எடிட்டர்-சிவாநாதீஷ்வரன், சண்டை-அன்பறிவு, கலை-மிலன் ஆகியோரின் பணி சிறப்பு.
இயக்குனர் ஹேமந்தின் எழுத்து பெரும்பாலான பகுதிகளில் கிராமத்து மண் சார்ந்த வாழ்வியலாக கொடுத்துள்ளார். செல்லமாக வளர்த்த குதிரையின் மரணம் மற்றும் குடும்பம் போல் வளர்க்கப்பட்ட காளை காணாமல் போவது போன்ற இரண்டு காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டு இரண்டு காட்சிகளுடன் மனித-விலங்கு பந்தத்தை சொல்லியிருப்பதில் நெஞ்சை தொடுகிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய பகுதியில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் தனித்துவமாகவும் உள்ளன. வாடி வாசலில் இருந்து வெளியேறும் அனைத்து உயர்ரக காளைகளின் சீறிப் பாயும் காட்சிகள் கிராம மக்கள் அதை அடக்குவது பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதற்காக பாராட்டுக்கள். இப்படத்தில் விலங்குகளின் விடுதலை, கார்ப்பரேட் நிறுவன பேராசை, இறைச்சி உண்ணும் நெறிமுறைகள் பற்றி காண்பிப்பது புதிய களத்தில் பிற விஷயங்களையும் விவாத பொருளாக மாற்றியுள்ளார் இயக்குனர் ஹேமந்த். இவரின் அபரிதமான முயற்சியும், கடின உழைப்பும் படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக உள்ளது. காளையை அடக்குவது, கிராமத்தை காப்பாற்றுவது. காளையை மீட்பது என்ற ஒரே படத்தில் மூன்று வித பாதையில் பயணித்து ஒரே புள்ளியில் நேர்கோட்டில் முடித்திருப்பது கச்சிதம். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார் தயாரித்திருக்கும் காரி மனிதன்-விலங்கு பந்தத்தை அழுத்தமாக வித்தியாசமான கோணத்தில் சொல்லி அசத்தும் பொதுநலவாதி தரும் நீதி.