கலன் சினிமா விமர்சனம்: கலன் துஷ்டனை களையெடுக்கும் எமன் | ரேட்டிங்: 2.5/5

0
298

கலன் சினிமா விமர்சனம்: கலன் துஷ்டனை களையெடுக்கும் எமன் | ரேட்டிங்: 2.5/5

ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை கிடுகு படத்தின் இயக்குனர் வீரமுருகன் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், காயத்ரி, சேரன் ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ்,மோகன், பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜெர்சன், படத்தொகுப்பு-விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு-ஜெயக்குமார், ஜேகே, பாடலாசிரியர்-குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன், கலை- திலகராஜன், அம்பேத், நடனம்- வெரைட்டி பாலா, சவுண்ட் எஞ்சினியர் – சந்தோஷ், துணை இணை இயக்குனர் – ஜெகன் ஆல்பர்ட், துணை இயக்குனர்- பாலாஜி சாமிநாதன், மகேஷ், பிஆர்ஒ- கார்த்திக்.

சிவகங்கையைச் சேர்ந்த விதவையான வெட்டுடையார் காளி (தீபா) தன் தம்பி அப்புக்குட்டியின் உதவியுடன் தன் மகன் வேங்கையை (யாசர்) படிக்க வைக்கிறார். வேங்கையின் நண்பன் கஞ்சா கும்பல் தலைவன் வேலுதம்பி(சம்பத்ராம்) மற்றும் அவரது அக்கா விஜயாவிடம் (காயத்ரி) வேலை செய்கிறான். ஏழ்மையில் இருக்கும் வேங்கையின் நண்பன் தன் தங்கை படிப்பிற்கு முன் பணம் கேட்க, வேலு தம்பியால் அவமானப்படுத்தப்படுகிறான். இதனை கேள்விப்படும் வேங்கை தன் நண்பனை அ​வமானப்படுத்திய அக்கா விஜயாவை மிரட்டிவிட்டு போகிறான். அதன் பிறகு வேலு தம்பியை பழிவாங்க கஞ்சா பொருளை வேங்கையின் நண்பன் திருடி விற்கிறான். இதனால் வேலுதம்பி நண்பனின் தங்கையை கடத்துகிறான்.அவர்களிடமிருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்திற்கும் முடிவு கட்ட நினைக்கிறான். அதற்கு முன் வேலு தம்பி  தன் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கும் வேங்கையை அவனது நண்பன் மூலமாகவே வரவழைத்து கொலை செய்து பழி தீர்த்து கொள்கிறான். தன் ஒரே மகனை பறிகொடுக்கும் வெட்டுடையார் காளி வெகுண்டெழுந்து தன் தம்பியுடன் சேர்ந்து கொலையாளிகளை தேடுகிறார். அதன் பின் தான் உயிர் நண்பனே தன் மகனுக்கு எதிரியாக ஆனதை தெரிந்து கொள்கிறார். இறுதியில் காளியும், அவரது தம்பியும் குற்றவாளிகளை கூண்டோடு அழித்தனரா? கஞ்சா கும்பலின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

தாய் வெட்டுடையார் காளியாக தீபா கிராமத்து பெண்மணியாக மகனின் இறப்பிற்கு காரணமானவர்களை பழி வாங்க எடுக்கும் அவதாரம் கூச்சல் நிறைந்த உக்ரத்தின் உச்சம். மகனின் நண்பர்களுக்கு உதவும் கருணை உள்ளம், காவல் நிலையத்தில் அடிவாங்கி கதறும் போதும், அங்கே நடக்கும் சம்பவங்களை பார்த்து எச்சரிக்கும் போதும் ஆக்ரோஷமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். இறுதியில் அவரின் நிலை என்னானது என்பதை சரியாக காட்டவில்லை.

தீபாவின் தம்பியாக அப்பு குட்டி அக்காவின் மகனை தன் மகன் போல் பாசத்துடன் வளர்ப்பதும், அவன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறும் காட்சிகளை இயல்பாக செய்துள்ளார்.இறுதியில் பழி வாங்கி போலீசிடம் சரணடைந்து என்கவுண்டர் செய்யப்பட்டு இறக்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.

கஞ்சா வியாபாரியாக, மிரட்டலான வில்லனாக சம்பத் ராம், அவரின் அக்கா விஜயவாக காயத்ரி எப்போதும் சுருட்டு, மது என்று போதையில் மிதந்து அனைவரையும் அதட்டி உருட்டி தெனாவட்டு நிறைந்த கஞ்சா பெண்மணியாக காட்சிகளில் தனித்து நிற்கிறார்.

இவர்களுடன் காவல் ஆய்வாளர் ஞானசம்பந்தமாக சேரன் ராஜ் முதலில் மோசமான நபராக நினைக்க, பின்னர் அவர் செய்யும் நல்ல காரியங்கள் அவரது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளது.வேங்கையாக யாசர் இவரைச் சுற்றித் தான் மொத்த கதையும் பயணிக்கிறது. மற்றும் குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ்,பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா ஆகியோர் பக்கமேளங்கள்.

குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல் வரிகளில், குறிப்பாக “வெட்டுடையார் காளி” இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் அம்மனின் அலங்காரத்துடன் பாடி ஆடும் நடனம் மெய் சிலிர்க்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அதிர வைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளையும், அவர்கள் வாழ்வியலையும், இரத்தம் தெறிக்கும் காட்சிகள், காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்கள், மருத்துவமனையின் ஏமாற்று வித்தைகள், திருவிழா காட்சிகள், பழி வாங்கும் காட்சிகளை இருவரும் சிறப்பாக கொடுத்துள்ளனர்.

விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் இருவரின் படத்தொகுப்பு நான் லீனியர் கதைக்களமாக சில இடங்களில் தடுமாற்றத்துடன் பயணித்து, இறுதியில் சொல்ல வந்ததை புரியும்படி கொடுக்க முயற்சித்துள்ளனர்.

கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகள், கஞ்சா விற்பனை, பாலியல் வன்கொடுமை அதை எதிர்க்கும் இளைஞனுக்கு நேரும் அநியாயம், அதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார அழுத்தம், காவல் துறையின் நடவடிக்கை, என்கவுண்டர் கலந்து பழி தீர்க்கும் உணர்ச்சிகள் நிறைந்த கிராமத்து ஆக்ரோஷ தாயின் கதையாக இயக்கியுள்ளார் வீரமுருகன். சில சாதி அடிப்படையிலான குறியீடுகள், லாஜீக் மீறலுடன் ரத்தம் தெறிக்கவிட்டு காவல் துறையினரை நல்லவிதமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் வீரமுருகன்.

மொத்தத்தில் ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்திருக்கும் கலன் துஷ்டனை களையெடுக்கும் எமன்.