கட்டா குஸ்தி விமர்சனம் : கட்டா குஸ்தி காமெடிக்கு கேரண்டி தரும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 4.5/5

0
646

கட்டா குஸ்தி விமர்சனம் : கட்டா குஸ்தி காமெடிக்கு கேரண்டி தரும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 4.5/5

நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. கதாநாயகனாக விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ்காந்த், கருணாஸ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ், காளி வெங்கட் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் : பிரசன்னா ஜி கே
கலை : உமேஷ்
ஆக்ஷன் : அன்பறிவு சகோதரர்கள்
இயக்கம் : செல்லா அய்யாவு
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்.சிறு வயதில் அப்பா அம்மாவை இழந்த வீராவுக்கு (விஷ்ணுவிஷால்) ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸ், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் உலகம். அடிப்படையில் பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான், அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும் கருணாஸ், அதை வீராவுக்கும் புகுத்துகிறார். இந்த நிலையில்தான் தனக்கு வரும் பெண் தன்னை விட அதிகம் படித்திருக்க கூடாது. முடி நீளமாக இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களோடு வீராவுக்கு பெண் தேடும் படலம் நடக்கிறது. மறுபுறம், பி.எஸ்சி படித்த கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) கேரளாவைச் சேர்ந்த சராசரி பெண். அவளுக்கு மல்யுத்தப் போட்டிகள் மிகவும் பிடிக்கும். வீட்டில் அவள் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறார்கள். இருப்பினும், முடியை சிறியதாக வெட்டி, தனது சித்தப்பாவின் (முனீஷ்காந்த்) உதவியுடன் மல்யுத்தப் போட்டிகளுக்கு செல்கிறார் பல பரிசுகளையும் வெல்கிறார். இதை அறிந்த அவர்கள் வீட்டில் சண்டை போடுகிறார்கள். மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்பதாலும், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதால் யாரும் திருமணம் செய்ய முன்வருவதில்லை. தன் மகளுக்கு திருமணம் ஆகவில்லை என வேதனையில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அதற்கு அவள் சம்மதிக்காதால் மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற மாயையில் அவளது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். எப்படியும் கீர்த்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் அவளது சித்தப்பாவுக்கு ஒரு யோசனை வருகிறது. ஏழாம் வகுப்பு வரை தான் படித்ததாகவும், முடி நீளமாக இருப்பதாகவும் பொய் சொல்லி வீராவுக்கு கீர்த்தியை திருமணம் செய்து வைக்கிறார் முனீஷ்காந்த். திருமணம் முடிந்து சில நாட்கள் நன்றாக இருக்கிறார்கள். ஒரு நாள் திருவிழாவில் வீராவை சில குண்டர்கள் அடித்து உதைத்தபோது, கீர்த்தி சண்டை போட்டு காப்பாற்றுகிறாள். பின்னர் கீர்த்தி பற்றிய விஷயங்கள் வீராவுக்கு தெரிய வருகிறது. அவள் ஒரு மல்யுத்தப் வீராங்கனை, நன்றாகப் படித்தவள், முடி நீளம்  இல்லாதவள் என்பது வீராவுக்கு தெரிய வருகிறது. முனீஷ்காந்த் சொன்ன பொய்கள் வீராவுக்கு தெரிய வர, கணவன் மனைவி மற்றும் மாமன் கருணாஸ், இவர்கள் இடையே நடக்கும் வாக்குவாதத்தால் கீர்த்தி கருணாஸை கன்னத்தில் அறைய கணவன் மனைவி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது?  கீர்த்தியின் கட்டா குஸ்தி கனவு பலித்ததா? இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தது எப்படி? என்பதே மீதிக்கதை.

விஷ்ணு கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தி இருக்கிறார், அது அவருக்கு மிகவும் சவாலான புதிய கதாபாத்திரம். ஏனென்றால் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் தந்த விஷ்ணு விஷாலை பாராட்ட வேண்டும்.

ஐஸ்வர்யா லட்சுமி தனது நடிப்பால் அனைவரின் மனதை திருடி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஐஸ்வர்யா லட்சுமி தான் கட்டா குஸ்தி கதையின் ஆன்மா பலம் எல்லாம். மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் பெண்ணாக கம்பீரமாக காட்சியளித்து ஆக்ஷன் காட்சியிலும் தன் பலத்தை வெளிப்படுத்தி அதகளம் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் திரைக்கு வரும்போது, நமது கவனத்தை ஈர்த்து தனது கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் செய்துள்ளார்.

விஷ்ணு விஷால், கருணாஸ், வக்கீலாக வரும் காளி வெங்கட் காம்போவின் காமெடி ஒர்க் அவுட்  ஆகியிருக்கிறது. குறிப்பாக மாமாவாக கருணாஸ் மற்றும் சித்தப்பாவாக வரும் முனீஷ்காந்த், இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் துணை கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களில் போதுமான அளவு தங்களது பங்களிப்பை தந்து படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும் பின்னனி இசையும் அருமை. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் கிராமப்புற சூழலை இனிமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டிங் மற்றும் கலை இயக்குனர் உமேஷ் ஆகியோரின் பங்களிப்பு கூடுதல் பலம்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கு அன்பறிவு சகோதரர்கள் கம்போஸ் செய்த சண்டை காட்சி அருமை.
இயக்குனர் செல்ல அய்யாவுவின் ஸ்கிரிப்ட் ஒரு புதிய கருத்தை கொண்டிருக்கவில்லை, என்றாலும் ஸ்கிரிப்டைப் பற்றிய ஒரே புதிய விஷயம் என்னவென்றால், மனைவி ஒரு மல்யுத்த வீரராகவும், உடல் ரீதியாக கணவனை விட உயர்ந்தவராகவும் இருக்கும் அமைப்பை கதையின் கருவாக வைத்து சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை அமைத்து படம் முழுவதும் ஆங்காங்கே பொழுதுபோக்கு பகுதிகள் இடம்பெற செய்து பெண்களிடம் இருக்கும் திறமையை அழகாக வெளிப்படுத்தி காட்டி இயக்கியிருக்கிறார். முதல் பாதியில் தியேட்டரில் தொடர்ச்சியான சிரிப்பலை. மற்றும் திடமான நகைச்சுவையுடன் உணர்வுகள் கலந்த இரண்டாம் பாதி.
மொத்தத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கட்டா குஸ்தி காமெடிக்கு கேரண்டி தரும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரம்.