ககனச்சாரி (மலையாளம்) சினிமா விமர்சனம் : ககனச்சாரி கற்பனைக்கெட்டாத அறிவியல் புனைகதையை நகைச்சுவை சுவாரஸ்யத்தின் புதிய முயற்சியை கண்டு ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5
அஜித் விநாயகா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ககனச்சாரி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் சந்து.
இதில் அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் மற்றும் கேபி கணேஷ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் :நிர்வாக தயாரிப்பாளர் : கிரிஷாந்த், கதை : அருண் சந்து – சிவா சாய், ஒளிப்பதிவு : சுர்ஜித் எஸ் பை, இசை : சங்கர் சர்மா ,எடிட்டிங் : சீஜய் அச்சு , அரவிந்த் மன்மதன் இணைந்து தொகுத்துள்ளார்,ஒலி வடிவமைப்பு: சங்கரன் ஏஎஸ், கேசி சித்தார்த்தன், ஒலி கலவை: விஷ்ணு சுஜாதன், வசனங்கள் : விவேக் ரஞ்சித் (பிரேக் பார்டர்ஸ்), தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சஜீவ் சந்திரூர், பாடல் வரிகள்: மனு மஞ்சித், ராகுல் மேனன் (ஆங்கில ராப்), கலை இயக்குனர்: எம் பாவா, ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர், மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்.
2030 ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலை எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்ததால் ஏலியன் ஹன்டர் என்று அழைக்கப்படுபவர் விக்டர் வாசுதேவன் (கணேஷ் குமார்). இவருடன் இரண்டு உதவியாளர்கள் ஆலன் ஜான் வலம்பரம்பில் (கோகுல் சுரேஷ்) மற்றும் வைஷ்ணவ் (அஜு வர்கீஸ்) ஆகியோர் சேர்ந்து பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக வாழ்கின்றனர். 2043 ஆம் ஆண்டு, வேற்றுகிரகவாசிகளுடனான விக்டரின் அனுபவ பயணத்தைப் படம்பிடிக்க ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் குழு அவர்களின் வீட்டில் முகாமிடுகிறது. அப்போது தனது வாழ்க்கை பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன், சந்தித்த சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள். இதற்கிடையில், மனித உருவில் 250 வயதாகும் ஒரு வேற்றுகிரகவாசியான (அனார்கலி மரிக்கார்) வருகை விக்டரின் குடியிருப்பில் பல விஷயங்களை சிக்கலாக்குகிறது. அப்பொழுது இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஏலியன் வருகையை கண்காணித்து விக்டரின் இல்லத்திற்கு அடிக்கடி வந்து விசாரித்து விட்டு பணம் (‘புள்ளிகள்’) பறிக்கிறார்கள். இதனிடையே ஆலன் ஏலியன் மீது காதல் வயப்படுகிறார். இறுதியில் ஏலியன் விருந்தினரின் வருகையால் மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? ஏலியன் தன் கிரகத்திற்கு செல்ல முடிந்ததா? என்பதை கலகலப்புடன் கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் சந்து.
விக்டர் வாசுதேவனாக திரையில் பெரும் பங்கை ஆக்ரமித்து, சாதனையாளர் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு நகைச்சுவை உரையாடல்களை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் கணேஷ்குமார்.
அஜு வர்கீஸ், வைபவ்வாக, மோசமான யோசனைகள், ஆலோசனைகளை வழங்கும் ஹைபர் நண்பனாக வந்து தன் இருப்பை உறுதி செய்துள்ளார்.
ஆலன் ஜான் வலம்பரம்பிலாக வரும் கோகுல் சுரேஷ் முதலில் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பது போல் தெரிந்தாலும் பின்னர் காட்சிகள் விரிவடைய அவரின் காமெடி, ஏலியனிடம் காட்டும் பரிவு, காதல், பிரிவுக்கு பின் அனுப்பும் மெசேஜ்கள் என்று அவரின் செய்கையால் நகைச்சுவையை அதிகப்படுத்தியுள்ளார்.
அனார்கலி மரிக்கார் அமைதியான பேச முடியாத ஆனால் பேசுவதை புரிந்து கொள்கிற வேற்றுகிரகவாசியாக நடிக்கிறார், மேலும் அவரது பார்வைகள் காட்சிகளில் நகைச்சுவையை உருவாக்குவதோடு ஒரு கருவி மூலம் பேச முயற்சிக்கும் காட்சிகளில் தனித்து நிற்கிறார். வேற்றுகிரகவாசியாக மனித உருவத்தில், நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம், கோபம் வந்தால் ஆக்ரோஷ லேசர் பார்வை என அவர் படத்தின் முக்கிய அம்சமாக ஒரு சிறந்த நடிப்பை வழங்கி கச்சிதமாக செய்துள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ராகவன் இருப்பு படத்திற்கு சிறப்பு.
இருபது வருடங்களுக்கு பிறகு கேரளா என்ற கற்பனை வடிவத்தை தன் கனகச்சிதமான ஒளிப்பதிவால் அழுத்தமாக கொடுத்தும், ஏலியனின் உலகத்தினையும் நம் கண் முன்னே நிறுத்தியிருப்பதில் பெற்றி பெற்றுள்ளார் சுர்ஜித் எஸ் பாய்.
ஷங்கர் சர்மாவின் இசையும், சி.ஜே.அச்சு வின் எடிட்டிங்கும், பட்ஜெட்டிற்கு கேற்ற சிஜிஐ தொழில்நுட்பமும் கவனிக்க வைக்கின்றன.
நடிகர்கள் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்து இந்த திரைப்படம் வியக்கத்தக்க வகையில் திரைக்கதையில் பயணித்துள்ளது. வெள்ள நீரில் மூழ்கி, வேற்றுகிரகவாசிகளின் படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பேரழிவுக்கு பிந்தைய கேரளாவில் நிகழ்வுகள் அமைக்கப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் நிகழ்வுகளின் ஆவணப் பாணியில் விவரிக்கப்பட்ட ககனாச்சாரி, ஒன்றாக வாழும் மூன்று நபர்களின் வாழ்க்கையையும் ஒரு ஏலியன் வருகையால் எப்படி மாறுகிறது என்பதை வித்தியாசமான திரைக்கதையால் கவர்ந்துள்ளார் இயக்குனர் அருண் சந்து. உலகின் மொத்த அழிவையும் முடிவையும் மனிதநேயமற்ற, பயமுறுத்தும் வாழ்க்கையை மக்கள் நடத்தும் ஒரு கற்பனையில் மிக மோசமான எதிர்காலத்தையும் காட்டி விவரிப்பதும், கதை, காட்சிப்படுத்துதல், விவரிக்கும் முறையில் சோதனை முயற்சியாக வந்துள்ளது. 2025ல் தங்கம், போதை மருந்து கடத்துதலை விட பெட்ரோல் தான் ஆதிக்கத்தை செலுத்தும் என்றும், கீஃப் என்ற அசைவ உணவு மற்றும் கடந்த கால படங்களையும், இடங்களையும் நையாண்டி செய்வது போன்ற பாணியில் சில காட்சிகளில் கதை பயணிக்கிறது. இத்தகைய அறிவியல் புனைகதைகள் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்தால் எதிர்காலத்தில் வித்தியாச படைப்புளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் அஜித் விநாயகா பிலிம்ஸ் தயாரித்துள்ள ககனச்சாரி கற்பனைக்கெட்டாத அறிவியல் புனைகதையை நகைச்சுவை சுவாரஸ்யத்தின் புதிய முயற்சியை கண்டு ரசிக்கலாம்.