ஐடென்டிட்டி சினிமா விமர்சனம் : ஐடென்டிட்டி குற்ற பின்னணி கொண்ட ஆக்ஷன் கலந்த அதிரடி திருப்பங்கள் நிறைந்த த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் | ரேட்டிங்: 3/5
ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சார்பில் ராஜு மல்லையாத் மற்றும் ராய் சி.ஜே.ராய் தயாரித்துள்ள ஐடென்டிட்டி படத்தை எழுதி இயக்கியுள்ளனர் அகில் பால் மற்றும் அனஸ் கான்.
இதில் டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ் மற்றும் ஷம்மி திலகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை: ஜேக்ஸ் பெஜாய், ஒளிப்பதிவாளர்: அகில் ஜார்ஜ், எடிட்டர்: சமன் சாக்கோ, அதிரடி இயக்குனர்: யானிக் பென், லைன் புரொடியூசர்: பிரத்வி என் ராஜன், மக்கள் தொடர்பு சதீஷ்குமார்.
ஹரன் ஷங்கர் (டோவினோ தாமஸ்) குழந்தை பருவத்தில் தனது தாயை பிரிந்து தந்தையுடன் செல்ல, தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். திடீரென்று தந்தை இறக்க மகன் ஒவிய நிபுணரான தாயிடம் வந்து சேர்;க்கிறார். அதிர்ச்சிகரமான குழந்தைப் பருவத்தின் காரணமாக ஒரு வித மனநோயால் பாதிக்கப்பட அதன் பின் தன் தாயின் வழிகாட்டுதலோடு போலீசில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விசித்திரமான ஒவியக் கலைஞராக உருவெடுக்கிறார். இந்நிலையில் ஒரு துணிக் கடையின் ட்ரயல் ரூமில் மொபைல் போனில் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் மர்ம நபரின் இருப்பிடத்திலேயே கொல்லப்படுகிறார். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி அலிஷா (த்ரிஷா கிருஷ்ணன்). இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஆலன் ஜேக்கப் (வினய் ராய்) கொலை முயற்சியிலிருந்து தப்பும் சாட்சி அலிஷாவை ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் பாதுகாப்பாக வைக்கிறார். அவர்களின் வழக்கு விசாரணையின் போது, ஆலன் அலிஷா சொல்லச் சொல்லக் குற்றவாளியின் முகத்தை வரைந்திட வேண்டி, அரிய அறிவாற்றல் திறன் கொண்ட ஓவியக் கலைஞரான ஹரன் சங்கரின் உதவியை நாட இவர்களோடு இணைகிறார். விசாரணையின் போது, அலிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து, ஹரன் வரையும் முகம் ஹரனின் முகச் சாயலிலேயே இருக்கிறது. ஆலன் மற்றும் ஹரன், அலிஷா சரியாக முகங்களை நினைவில் கொள்ள முடியாத குழப்பத்தில் உள்ள ஒரு நோயால் அவதிப்படுவதைக் கண்டுபிடிக்கின்றனர். இது என்ன புது குழப்பம் என்று நினைக்கும் போது, முக்கிய குற்றவாளியின் இன்னொரு கதை ஆரம்பமாகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து யார் குற்றவாளி என்று கண்டுபிடித்தார்களா? கொலையாளியின் அடையாளத்தை தேடும் முயற்சியில் யாருக்கு வெற்றி கிடைத்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
எதிலும் அதிக உணர்ச்சிவசப்பட முடியாத நோயால் அவதிப்படும் ஹரன் சங்கராக டோவினோ தாமஸ் சமீபகாலமாக தனது நடிப்புக்கு தனித்துவத்தை அளிக்க முயற்சித்திருக்கும் கடினமான மற்றும் கட்டுப்பாடான உடல் மொழியுடன் அளவாக நடித்துள்ளார். அவர் ஒரு தற்காப்புக் கலை நிபுணர், ஒவியக் கலைஞர் என்று இரண்டு வித பரிமாணங்களை சண்டைக் காட்சிகளின் போதும் பயிற்சி பெற்ற தொழில்முறை சார்ந்த காட்சிகள் கூர்மையாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. படம் முழுவதும் தன்னுடைய தோளில் தாங்கி பிடித்து கதை நகர்வை சுவாரஸ்யமாக்கியுள்ளார். ஹரன் சங்கர் கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸ் நடித்திருப்பது படத்தின் ஹைலைட். அவரது வினோதங்களும் பழக்கவழக்கங்களும் கதாபாத்திரத்திற்கு ஆழத்தை கொண்டு வருகின்றன, இதனால் அந்த பாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்ய முடியாத வண்ணம் உள்ளது.
த்ரிஷாவுக்கு குற்றவாளியின் அங்க அடையாளங்களை விவரிக்கும் ரோல் என்பதால் இவருடைய இருப்பு இந்த படத்தில் மிக குறைவாக இருந்தாலும் முக்கிய குற்றவாளியை பிடிக்க தன்னால் முடிந்ததை செய்துள்ளார்.
போலீஸ் அதிகாரி ஆலனாக வினய் ராய் வசனம் உடல்மொழி என்று ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக வந்து பின்னர் மிரட்டும் வில்லனாக உருமாறுவதில் கவனம் ஈர்க்கிறார். இவரின் கதாபாத்திர சித்தரிப்பு படத்திற்கு ப்ளஸ்சாக அமைந்துள்ளது.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு மற்றும் சமன் சாக்கோவின் விறுவிறுப்பான படத்தொகுப்பு படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. அதன் அதிரடி காட்சிகள், குறிப்பாக விமானத்தில் பரபரப்பான க்ளைமாக்ஸ் ஸ்டண்ட் டைரக்டர் யானிக் பென் ஒரு மறக்கமுடியாத சண்டைக் காட்சியை உருவாக்கியிருப்பதில் பாராட்டுக்குரியவர். ஜேக்ஸ் பெஜோயின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
அகில் பால் மற்றும் அனஸ் கானின் இயக்கம் அடையாளம் மற்றும் குற்றத்தை மையமாகக் கொண்ட படத்தின் மையக் கருத்து புதிரானது மற்றும் தனித்துவமானது. ஆரம்ப திருப்பங்கள் திறமையாக வடிவமைக்கப்பட்டு, உங்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும். படத்தின் பல திருப்பங்கள் சில நேரங்களில் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த அனுபவம் ஈர்க்கக்கூடியதாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது. திறமையான நடிகர்கள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சிக்கலான கதைக்களம் ஆகியவற்றுடன், இந்த வகையின் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
மொத்தத்தில் ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் இணைந்து தயாரித்திருக்கும் ஐடென்டிட்டி குற்ற பின்னணி கொண்ட ஆக்ஷன் கலந்த அதிரடி திருப்பங்கள் நிறைந்த த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும்.