ஏ.ஆர்.எம் (ARM) சினிமா விமர்சனம் : ஏ.ஆர்.எம் கற்பனை கலந்த மாயாஜால வித்தைகளின் ஜகத்ஜால கில்லாடியாக வெற்றி வாகை சூடும் அசகாய சூரன் | ரேட்டிங்: 3/5
மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ் தயாரித்துள்ள ஏ.ஆர்.எம் படத்தை சுஜித் நம்பியார் எழுதி ஜித்தின் லால் இயக்கியிருக்கிறார்.
இதில் டொவினோ தாமஸ் – குஞ்சிகேலு, மணியன் மற்றும் அஜயன், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப்,ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சைட், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ்,சுதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை மற்றும் பின்னணி: திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவாளர்;: ஜோமோன் டி ஜான் இஸ்க், எடிட்டர்: ஷமீர் முஹம்மது, இணை தயாரிப்பாளர்: ஜஸ்டின் ஸ்டீபன், நிர்வாக தயாரிப்பாளர்: நவீன் பி தாமஸ், பிரின்ஸ் பால், லைன் தயாரிப்பாளர்: சந்தோஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் வர்மா, சண்டைக்காட்சிகள்: விக்ரம் மோர், பியோனிக்ஸ் பிரபு, நடன இயக்குனர்: லலிதா ஷோபி, களரி ஸ்டண்ட்: பி.வி. சிவகுமார் குருக்கள், கிரியேட்டிவ் டைரக்டர்: திபில் தேவ், ஒலி வடிவமைப்பு: சச்சின் , ஹரிஹரன், பாடல் வரிகள்: மனு மஞ்சித், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: சலீம் லஹிர், தமிழ் டப்பிங்: மைசீ மூவிஸ், டப்பிங் இயக்குனர்: ரிஷிகேஷ் கே,வசனங்கள்: ரமேஷ், அகரன், கைலாஷ், பிஆர்ஓ: சதீஷ் எஸ்2மீடியா.
1900களில் ஹரிபுரம் கிராமத்தில் வாழ்ந்த களரிபயட்டு வீரன் குஞ்சிகேலுவைப் பற்றி பாட்டி தன் பேத்திக்கு கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. ஹரிபுரத்தில் விண்கல் ஒன்று விழ அதன் மகத்துவத்தை அறிந்து விளக்கு ஏந்திய பாவை போன்ற தோற்றத்துடன் சியோதி விளக்கு வடிவமைக்கப்பட்டு ஊர் மக்களால் வழிபட தொடங்க, ஊர் செல்வசெழிப்புடன் இருக்கிறது. அது நாளடைவில் எடக்கல் ராஜாவிடம் போய் சேர்கிறது. அதன் பின் அந்த சியோதி விளக்கை கைப்பற்றவும், ராஜ்ஜியத்தை கொள்ளையடிக்கவும் சூழ்ச்சி நடக்கிறது. அந்நேரத்தில் கொள்ளையடிக்க வந்தவர்களிடமிருந்து புனிதமான சியோதி விளக்கை காப்பாற்றியதன் காரணமாக ஹரிபுரத்தைச் சேர்ந்த மாவீரன் குஞ்சிகேலுவின் புகழ் பெருகுகிறது. எடக்கல் ராஜா குஞ்சிகேலுவிடம் இதற்கு வெகுமதியாக என்ன வேண்டும் என்று கேட்கிறார், குஞ்சிகேலு ஹரிபுரத்தில் உள்ள கோவிலில் சியோதி விளக்கை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து சாதியினரும் தெய்வத்தை வணங்க சியோதி விளக்கை தர வேண்டும் என்று கேட்கிறார். அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டு, சியோதி விளக்குடன் ஹரிபுரத்திற்கு வெற்றியுடன் திரும்புகிறார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சியோதி விளக்கு கீழ் சாதியினரால் வணங்க அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் ஊரில் மர்ம நோய் தாக்க அதில் குஞ்சுகெலுவும் பாதிக்கப்பட்டு இறக்கிறார். அதன் பின் கதைக்களம் 1950 காலகட்டத்தில் நகர்கிறது. அப்போதுதான், ஹரிபுரம் கிராமமே கொந்தளித்து நிற்கும் மணியன் என்ற பிரபல திருடன் அறிமுகமாகிறான்.குஞ்சுகெலுவின் மகன் மணியனுக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். திருட்டுத் திறமையும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் திறமையும் உள்ள மணியனை கிராம மக்கள், குறிப்பாக உயர் சாதியினர் அவரைப் பிடிக்க முயன்றாலும், அது வீண் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும். சாதுர்யம் நிறைந்த மணியன் மனைவியின் ஆசைப்படி சியோதி விளக்கை காட்ட அதை திருடிக் கொண்டு வருகிறான்;. இதனை காணும் ஊர் மக்கள் மணியனை துரத்த அவனின் குடும்பத்தார் கண்எதிரிலேயே மலை அருவியில் விழுந்து உயிரை விடுகிறான். அதன் பின் 1990 காலகட்டத்தில் மணியனின் மகள் வழி பேரன் அஜயன் பிறந்ததும், துரதிர்ஷ்டவசமாக, மணியனின் திருட்டு மரபு காரணமாக, சாமர்த்தியமான திருடன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிறார். எலக்ட்ரீஷியனான அஜயன், தனது தாத்தாவைப் போலல்லாமல், ரேடியன்ட் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வாழ்ந்து வருகிறார். அவர் தனது தாயுடன் (ரோகினி) வசிப்பதோடு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த உயர் சாதிப் பெண்ணான லட்சுமி நம்பியாரை (கிருத்தி ஷெட்டி) காதலிக்கிறார். லட்சுமியின் உறவினராக சுதேவ் வர்மா (ஹரிஷ் உத்தமன்) ஹரிபுரத்திற்கு வருகிறார். அதற்கு காரணம் சியோதி விளக்கை கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்க நினைக்கிறார். சியோதி விளக்கு மீண்டும் ஆபத்தில் இருக்கும் போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுக்கின்றன. அஜயனுக்கு என்ன ஆகிறது? சுதேவ் அஜயனை பகடைக்காயாக பயன்படுத்தி ஏன் மிரட்டுகிறார்? சியோதி விளக்கை சுதேவ் கைப்பற்ற முடிந்ததா? அஜயன் கண்டுபிடிக்கும் உண்மை என்ன? அதனால் அஜயனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்ன? இறுதியில் சியோதி விளக்கு யாரிடம் போனது? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
குஞ்சிகேலு, மணியன் மற்றும் அஜயன் – தாத்தா, மகன், பேரன் மூன்று வித கதாபாத்திரத்தில் மிளிர்கிறார் டோவினோ தாமஸ். குஞ்சிகேலுவாக களறிபயட்டு போர் வீரனின் குணாதிசயங்களோடு தன் கிராமத்திற்காக கஷ்டப்பட்டு சியோதி விளக்கை கொண்டு வந்து வணங்க முடியாமல் தவிக்கும் இளைஞராக, அதன் பின் ஏமாற்றப்பட்ட விஷயத்தை அறிந்து உண்மையை சொல்லாமல் உயிரை விடுவதும், அதன் பின் மகன் மணியனாக திருட்டுத்தனத்தால் கெட்ட பெயர் வாங்கினாலும் சியோதி விளக்கை வணங்க முடியாமல் தவிக்கும் தன் மனைவிக்காக எடுக்கும் முயற்சிகள், அதன் பின் போலியாக சியோதி விளக்கை செய்வதும், நிஜத்தை மறைத்து வைப்பது தான் படத்தின் முக்கிய திருப்பத்தை தருகிறது. எலக்டீரிஷியன் அஜயனாக அப்பாவித்தனத்துடன், தன் மேல் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க எடுக்கும் முயற்சியில் எதிரிகளிடம் சிக்கிக் கொள்வதும், அதன் பின் கண்டுபிடிக்கும் மர்மத்தை காப்பாற்ற போராடும் இடத்தில் தனித்து நிற்கிறார். டோவினோ தாமஸ் தோள்களில் மொத்த கதையையும் தாங்கி பிடித்துள்ளார். மூன்று வித கெட்டப் பொறுத்தமட்டில், மணியனாக அவரது நடிப்பு மற்ற இரண்டு பாத்திரங்களை விஞ்சியது மற்றும் டோவினோ ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை துணிச்சலுடன் செய்ய முடியும் என்பதை நிரூபித்து அசத்தியிருக்கிறார்.மூன்று வேடங்களில் ஒவ்வொன்றும் டோவினோ வௌ;வேறு குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவரது திறமைகளை முழு வீச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.
பாசில் ஜோசப், அழகான காதலியாக கிருத்தி ஷெட்டி, தாயாக உணர்ச்சிகரமான நடிப்பில் ரோகினி, சில காட்சிகளில் குஞ்சுகெலுவின் காதலியாக ஐஸ்வர்யா ராNஜுக்கு பெரிதாக எதுவும் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த மணியனின் மனைவியாக சுரபி லட்சுமி, நிஸ்தர் சைட், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ்,சுதீஷ் மற்றும் பிற நடிகர்கள் படத்திற்க்குத் தேவையானதைச் செய்துள்ளனர்.
ஹரிஷ் உத்தமன் ஒரு அழுத்தமான வில்லனாக வரவில்லை என்றாலும், படத்தில் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாக, ஜோமோன் டி ஜானின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது மூன்று வித காலகட்டங்களின் வாழ்வியலை நம் கண் முன் நிறுத்தி அசத்தியுள்ளார்.
திபு நினன் தாமஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தில் நன்றாக வேலை செய்து கேரள நாட்டின் கலாச்சார பாராம்பர்யத்தை இசையால் ரசிக்க வைத்துள்ளார்.
படத்தொகுப்பாளர் சமீர் முகமத், கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும் திரைக்கதையை தன் நேர்த்தியான தொகுப்பால் சிறப்பாக சிக்கலில்லாமல் கொடுத்து அருமையாக செய்துள்ளார்.
சண்டைப்பயிற்சி விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள், ரமேஷ், அகரன் மற்றும் கைலாஷ் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் சக்தி வாய்ந்த சியோதி விளக்கை கைப்பற்ற நடக்கும் சண்டையில் காதல், சாதி பாகுபாடு, அடக்குமுறை, மர்மம், கற்பனை கலந்த சுஜித் நம்பியார் எழுதிய கதைக்களத்தை அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் ‘ஏ.ஆர்.எம்’ என்ற பெயர் சுருக்கத்துடன் அசத்தலாக கண்களுக்கு பிரம்மாண்ட விருந்தை படைத்து இயக்கியுள்ளார் ஜித்தின் லால். நான்லீனியர் பாணியில் கதைக்களம் பயணித்தாலும் தோய்வில்லாமல் பயணித்து இறுதியில் கற்பனைக்கெட்டாத மர்மத்துடன் புது பொலிவுடன் காட்சிகளை திறம்பட கொடுத்து கை தட்டல் பெறுகிறார் ஜித்தன் லால்.புரியாத காட்சிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் படத்தில் ஆங்காங்கே கொடுத்து கோர்வையாக படத்தை பூ மாலை போல் தொடுத்து பிரம்மிப்புடன் இயக்கியுள்ளார் ஜித்தின் லால்.
மொத்தத்தில் மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ் தயாரித்துள்ள ஏ.ஆர்.எம் கற்பனை கலந்த மாயாஜால வித்தைகளின் ஜகத்ஜால கில்லாடியாக வெற்றி வாகை சூடும் அசகாய சூரன்.