எமோஜி தமிழ் வெப் சீரீஸ் விமர்சனம்: ‘எமோஜி’ அசத்தலான மனித உணர்வுகளை ஏழு வித வர்ணஜாலங்களில் சுவாரஸ்யத்தோடு ஜொலிக்க செய்திருக்கும் காதல் கவிதை | ரேட்டிங்: 3/5

0
483

எமோஜி தமிழ் வெப் சீரீஸ் விமர்சனம்: ‘எமோஜி’ அசத்தலான மனித உணர்வுகளை ஏழு வித வர்ணஜாலங்களில் சுவாரஸ்யத்தோடு ஜொலிக்க செய்திருக்கும் காதல் கவிதை | ரேட்டிங்: 3/5

‘ரமணா ஆர்ட்ஸ்’ ஏ.எம்.சம்பத்குமார் தயாரிப்பில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏழு பாகங்களை எழுதி இயக்கியிருக்கிறார் : சென் எஸ்.ரங்கசாமி

நடிப்பு: மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சவுத்ரி,  வி.ஜே.ஆஷிக், ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: சனத் பரத்வாஜ்,ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன், மக்கள் தொடர்பு: யுவராஜ்

கதையின் நாயகன் ஆதவ் (மகத் ராகவேந்திரா) பொறியியல் பட்டதாரி. கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர் கிரிக்கெட் மட்டை வாங்குவதற்காக விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் ஒரு ஸ்டோருக்குப் போகிறார். அங்கே யதார்த்தமாக சேல்ஸ் கேர்ளாக இருக்கும் நீச்சல் வீராங்கனை பிரார்த்தனாவை (மானசா சௌத்ரி) பார்க்கிறார். மானசாவின் உடலமைப்பிலும், அழகிலும் (கிளாமர்) ஆதவ்வுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார். காமம் கலந்த ரொமான்சில் ஈடுபட்ட இருவரும் சில நாட்களுக்குப் பிறகு பிரேக்அப் ஆகி இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். இருவரின் பிரிவால் மஹத் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதே போல், இவர்களின் எதிர் ப்ளாட்டில் தீக்ஷா (தேவிகா சதீஷ்)மற்றும் காதலன் லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் நாயகன் தவிக்கிறான் அப்போது எதிர் ப்ளாட்டில் ப்ரேக் அப் ஆன தேவிகாவைச் நட்புடன் பழகி அவளுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறான்.  அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, திடீரென இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். இவர்கள் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வரக் காரணம் என்ன?  அவர்கள் விவாகரத்து செய்தார்களா இல்லையா என்பதை காம உணர்ச்சிகரமான படைப்பே ’எமோஜி’ இணையத் தொடரின் மீதி கதை.

வசீகரமான இளைஞனாக வசன உச்சரிப்பு, சோகம், சந்தோஷம் ஆகியவற்றை சமஅளவு தன் நடிப்பால் கவனத்துடன் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து மஹத் ராகவேந்திராவின் இளமையும், அழகும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

நாயகன் மஹத் ராகவேந்திராவின் வாழ்வில் கண்களால் பேசும் மானசா சௌத்ரி காதலியாகவும், கட்டுக்கோப்பாக உடலை பராமரிக்கும் தேவிகா சதீஷ் மனைவியாகவும் வரும் இருவரும் அழகு கவர்ச்சி பதுமைகளாக வந்து படத்தில் கிளுகிளுப்புடன் இளமை துள்ளலுடன் ரசிகர்களை தங்கள் அழகால் சூடேற்றி விடுகின்றனர். கல்லு குடித்துவிட்டு திருமண வீட்டில் நடத்தும் ரகளையில் தேவிகா சதிஷ் தனித்து தெரிகிறார்.

மஹத்தின் நண்பராக விஜே.ஆஷிக், ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி என்று  சிறிய வேடம் என்றாலும் மனதில் பதியும் வண்ணம் வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன், ஐடி இளைஞர்களின் பகட்டான வாழ்க்கை, லிவிங் டுகதர் வீடு, விளையாட்டு கூடம், வனத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள், மரக்கிளையில் கூடாரம் என்று ரிச்சாக, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையை அசலாக கொடுத்துள்ளார்.

சனத் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இனிமையாகவும், காதலுக்கு ஏற்ற இதமான இசையாகவே இருக்கிறது.

ஏழு பாகங்களும் ஒரு ஐடி இளைஞனின் காதல் பயணமாக, ஏமாற்றத்தையும், சந்தோஷத்தையும், காமத்தையும்; ஒரு சேர கலந்து அனைத்தையும் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போகும் ஒன்று இல்லை என்றால் இன்னொன்று என்ற மனநிலைக்கு மாறும் இன்றைய இளம் சமுதாயத்தின் எண்ண ஒட்டத்தை தத்ரூபமாக கொடுத்திருப்பது அச்சத்தை உண்டாக்குகிறது. இதனால் காதல், திருமணம், விவாகரத்து என்று முடியும் இச்சூழ்நிலையில் திருமண பந்தம் நிச்சயம் கேள்விக்குறியே. இறுதியில் இத்தொடரில் காதல் திருமணம் செய்தவர்கள் பிரிவதற்காக சொல்லும் காரணங்கள் அழுத்தத்துடன் சொல்லியிருந்தால் கதைக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.லிவிங் டுகதர் கலாசரத்தை சித்தரித்து சகிப்புதன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல், காத்திருப்பு என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இன்றைய காலகட்டத்தில் இல்லை என்பதை சொல்லும் காதலை ஆழமாகவும், அசத்தலாகவும் போரடிக்காமல் சொல்லியிருக்கிறார் சென்.எஸ்.ரங்கசாமி.அதே சமயம் தங்கள் வேலையை தான் உயிராக நேசிக்கிறார்கள் தங்கள் வாழ்க்கையை அல்ல என்பதை உணர்த்தியும் உள்ளார்.

மொத்தத்தில் ‘ரமணா ஆர்ட்ஸ்’ ஏ.எம்.சம்பத்குமார் தயாரிப்பில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏழு பாகங்களாக வந்திருக்கும் ‘எமோஜி’ அசத்தலான மனித உணர்வுகளை ஏழு வித வர்ணஜாலங்களில் சுவாரஸ்யத்தோடு ஜொலிக்க செய்திருக்கும் காதல் கவிதை.