இந்தியன் 2 திரை விமர்சனம் : இந்தியன் 2 இரு வழியில் விரல் ஜாலத்தால் அதிர செய்யும் வித்தைக்காரன் | ரேட்டிங்: 3.5/5

0
1766

இந்தியன் 2 திரை விமர்சனம் : இந்தியன் 2 இரு வழியில் விரல் ஜாலத்தால் அதிர செய்யும் வித்தைக்காரன் | ரேட்டிங்: 3.5/5

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் இந்தியன் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஷங்கர்.

இதில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீரீகர் பிரசாத், இசை- அனிருத், கலை இயக்குநர் டி. முத்துராஜ், சண்டை- அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன், பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்.

சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகிய நண்பர்கள் குழு பார்க்கிங் டாக்ஸ் என்ற பெயரில் சமூகத்தில் அனைத்து இடங்களிலும் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றை நையாண்டி செய்து அதில் நடித்து வீடியோக்களை வெளியிட்டு குரல் கொடுத்து, அநியாயங்களை தட்டிக்கேட்டு பிரபலமடைகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழல், லஞ்சத்தை தடுக்க வேண்டுமானால் இந்தியன் தாத்தா வந்தால் முடியும் என்ற நம்பிக்கையோடு கம் பேக் இந்தியன் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் டிரெண்ட் செய்கின்றனர். இதை தைவானில் தாய்பெய் நகரில் உள்ள காளிதாஸ் ஜெயராம் பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்று சித்தார்த் குழுவிற்கு தெரிவித்து அவரை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு சொல்கிறார். தைவான் நாட்டில் தாய்பெய் நகரில் வர்மக்கலை பள்ளி நடத்தும் இந்தியன் தாத்தா சேனாதிபதி (கமல்ஹாசன்) இந்திய நாட்டிற்கு திரும்பி வருகிறார். இதனை கேள்விப்படும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நெடுமுடி வேணு தன் நீண்ட கால நிறைவேறாத ஆசையை சிபிஐ போலீஸ் அதிகாரியான தன் மகன் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து இந்தியன் தாத்தாவை விமான நிலையத்திலேயே கைது செய்ய வியூகம் அமைக்கின்றார். என்ன தான் முயற்சி செய்தாலும் போலீசிடம் சிக்காமல் ஊழல் செய்யும் பெரிய மனிதர்களை அவர்கள் மாநிலத்திலேயே சென்று வர்மக்கலையை பயன்படுத்தி தைரியமாக போட்டு தள்ளுகிறார் இந்தியன் தாத்தா. அதன் பின் சித்தார்த் குழுசவுடனும் நாட்டு மக்களுடனும் வீடியோ மூலம் உரையாடும் இந்தியன் தாத்தா முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்றும், வீட்டில் யாராவது தப்பு செய்தால் அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரத்துடன் தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். நேதாஜியின் கொள்கைகளை பின் தொடர்ந்து காந்திய சித்தாந்தத்தைத் தழுவி ஊழல் நபர்களை அம்பலப்படுத்துமாறு இந்திய தாத்தா இரண்டு வித பாதைகளை அவரைப் பின்பற்றுபவர்களை வலியுறுத்துகிறார். அன்று முதல் சித்தார்த் மற்றும் நண்பர்களும் தங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர்.அதன் பின் நடந்த சம்பவங்கள் என்ன? இதனால் அனைவரின்குடும்பத்திலும் ஏற்பட்ட மனக்கசப்புகள், வெறுப்புகள் என்ன? சித்தார்த்தின் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்ன? இந்தியன் தாத்தாவின் மேல் வெறுப்பு வரக் காரணம் என்ன? பாபி சிம்ஹாவால் இந்தியன் தாத்தாவை கைது செய்ய முடிந்ததா? என்பதே இரண்டாம் பாகத்தின் கதையாக முடிந்து மூன்றாம் பாகத்தின் தொடக்கமாக சில காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.

தாய்பெய் நகரில் வர்மக்கலை ஆசிரியராக பணி செய்யும் வயதான சேனாதிபதியாக கமல்ஹாசன் தன் நீண்ட தலைமுடி மற்றும் ஒப்பனைகள் இந்தியா வரும் போது முற்றிலும் வேறுவித கெட்டப்பில் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும் போது புதுவித தோற்றத்துடன் சென்று அனைவரையும் பழி வாங்கும் போது அசத்தலாக செய்துள்ளார். இளைஞர்களை வழி நடத்தும் விதத்திலும், போலீசிடமிருந்து தந்திரமாக தப்பிப்பதிலும், தன் விரல் வித்தையை பயன்படுத்தி சண்டை போடுவதிலும், ஒற்றைச்சக்கர வண்டியில் துரத்தல் காட்சிகளிலும் இறுதியில் தன் வர்ம கலையை பயன்படுத்தி உடல் வலிமையை கொண்டு வந்து எதரிகளை துரத்தி அடிக்கும் காட்சிகளிலும் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி தனித்து நிற்கிறார். இவரின் அபரிதமான உழைப்பும், ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது.

சித்தார்த் பாசமுள்ள மகனாக, மாற்றத்தை விரும்பும் இளைஞனாக செண்டிமென்ட் காட்சிகளிலும், உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளிலும் தேவையான நடிப்பை திறம்பட கொடுத்து கவனிக்க வைத்துள்ளார்.

ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த், சித்தார்த்தின் காதலி ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, சி.பி.ஐ அதிகாரிகள் பாபி சிம்ஹா மற்றும் விவேக், வில்லன்களாக குல்ஷானும் ஜாகிர் ஹ{சைனும், எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களின் பங்களிப்பு படத்தில் சிறுதுளி பெருவெள்ளம் போல் இருக்கிறது.

தாய்பெய் மற்றும் இந்தியா முழுவதும் பயணிக்கும் கதைக்களத்தில் தன் காட்சிக் கோணங்களால் பிரமாண்டத்தை உணர செய்வதுடன், ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகளில் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

முதல் பாதியில் வரும் பாடல்கள் பின்னர் ஆக்ஷன் காட்சிகள், சேசிங் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்.

அனிருத் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் ‘இந்தியன்’ முதல் பாகத்தில் வரும் இசையை அங்கங்கே கொடுத்திருக்கும் விதத்தில் பாராட்டலாம், பின்னணி இசை காப்பாற்றி உள்ளது.

ஜொலிக்கும் தங்க சொர்க்க மாளிகை, ஜீரோ கிராவிடி அரங்கம் என்று கற்பனை வளத்தை அள்ளித் தெளித்து பிரமாண்டத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குநர் டி. முத்துராஜ்.

அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோரின் மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் அற்புதம்.

தேர்ந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு, ஆடம்பரமான செட்கள், சிஜிஐ தொழில்நுட்பத்தை வைத்து ஊழலை இந்தியா முழுவதும் பரவிக் கிடக்க, அதை விழிப்புணர்வை ஏற்படுத்தி விரட்ட நினைக்கும் இந்தியன் தாத்தா நேதாஜியின் கொள்கையையும், காந்தியின் அஹிம்சா வழியையும் பின்பற்ற நினைப்பதை இருவழி பாதையாக ஜீரோ டாலரன்ஸ் என்ற கதைக்களத்தை நம்பி களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதில் புதுமையாக தங்கத்தின் மீது மோகம் கொண்ட ஒருவர் வர்ம கலையால் குஜராத்தில் குதிரையைப் போல ஓடுவதையும், பஞ்சாபில் பணக்காரர் ஒருவர் செவ்வாய்க் கோளில் தனக்கென இருக்கை வாங்கி பயிற்சி செய்யும் இடத்தில் எப்படி வசமாக மாட்டிக்கொள்கிறார் என்பதையும், மற்றொரு தொழிலதிபர் தைபேயில் உலக அழகிகளுடன் ஆட்டம் போட, இந்தியன் தாத்தாவின் விரல் வித்தையால் பெண் போன்ற நலினத்தன்மை ஏற்பட்டு அவதிப்படுவதையும்,  ஒடிசா முதல் பீகார், கேரளா, மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் என்று தன்னால் முடிந்த வரை பான் இந்தியாவாக கொடுக்க முயற்சித்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஊழல் ஒழிப்பு, லஞ்சம், வர்மக்கலை, பழி வாங்குதல், எதிர்ப்பு என்று ஒரு இடத்தில் சூழலாமல் இந்தியா முழுவதும் சுழல்வதால் வந்த சிக்கல் தான் படத்தின் முக்கிய மைனஸ். இந்தியன் 2 முடிவு இந்தியன் 3 தொடக்கம் என்று எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஒரு சில காட்சிகளில் கமல்ஹாசனின் இளமை தோற்றம், காஜல் அகர்வால், களறி சண்டை, எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் என்று ஹைப் கொடுத்து ஆர்வத்தை தூண்டி முடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் இந்தியன் 2 இரு வழியில் விரல் ஜாலத்தால் அதிர செய்யும் வித்தைக்காரன்.