ஆயிரம் பொற்காசுகள் சினிமா விமர்சனம் : ஆயிரம் பொற்காசுகள் புதையலுக்கான ஆடு புலி ஆட்டம் மனம் மகிழும் நகைச்சுவைக்கு உத்தரவாதம் | ரேட்டிங்: 3.5/5
கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்திருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரவி முருகையா.
இதில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:-ஒளிப்பதிவு – பானு முருகன், இசை – ஜோஹன் சிவனேஷ், எடிட்டிங் – ராம் மற்றும் சதீஷ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – ஃபையர் கார்த்திக், நடனம் – அசோக் ராஜா, ஒலி – சதீஷ், ஒப்பனை – மணி, பாடல்கள் – கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா, தயாரிப்பு மேலாளர் – லோகநாதன், டைரக்ஷன் டீம் – கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
தஞ்சாவூரில் குருவாடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சோம்பேறியான சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் பக்கத்து வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி ஆகியவற்றை திருடி சமைத்து உண்டு உறங்கி காலத்தை கழிக்கும் பேர்வழி. அவர் வீட்டு திண்ணையில் வடநாட்டு மனநலம் பாதித்த பேர்வழி ஒருவருக்கும் உணவு கொடுத்து இடம் கொடுக்கிறார். இந்நிலையில் சரவணின் தங்கை தன் மகன் விதார்த் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருப்பதாகவும், சொன்ன பேச்சை கேட்காமல் இருப்பதாக கூறி கொஞ்ச நாள் சரவணனிடம் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார். மாமன் சரவணனும், மச்சான் விதார்த்தும் தினமும் உண்பது உறங்குவது என்று சென்று கொண்டிருக்க, அந்த கிராமத்தில் கடை வைத்திருக்கும் அருந்ததி நாயரிடம் விதார்த்திற்கு காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் கழிப்பறை கட்டும் திட்டத்தில் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி புகைப்படும் எடுத்து ஊர் தலைவருக்கு அனுப்பினால் பன்னிரண்டாயிரம் பணம் தருவதை கேள்விப்பட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஹலோ கந்தசாமி கட்டிய கழிப்பறையை புகைப்படம் எடுத்து ஊர் தலைவரிடம் பணம் பெற்று ஜாலியாக மாமனும் மச்சானும் செலவழிக்கின்றனர். ஹலோ கந்தசாமி தான் கட்டிய கழிப்பறைக்கு பணம் வாங்க செல்லும் போது தான் இருவரின் ஏமாற்று வேலை தெரிய வர, ஊர் தலைவரிடம் முறையிட, அவரின் உத்தரவுப்படி சரவணனும், விதார்த்தும் தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டி பணம் பெற்று ஹலோ கந்தசாமியிடம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கின்றனர். மாமனும் மச்சானும் சேர்ந்து குழி தோண்டுவது சிரமமாக இருக்க, ஜார்ஜ் மரியானிடம் இந்த வேலையை ஒப்படைக்கின்றனர். ஜார்ஜ் மரியான் குழி தோண்டும் போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் புதையல் கிடைக்கிறது. இதனை ஊருக்கு தெரியாமல் சரவணன், விதார்த் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் மூன்று பங்காக பிரித்து எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். இந்த பங்கு பிரிப்பு நடப்பதற்குள் சரவணனுக்கும் ஜார்ஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிய அடிபடும் ஜார்ஜ்ற்கு சுயநினைவு இழந்து ஞாபக மறதியால் அவதிப்படுகிறார். இதனால் மகிழ்ச்சியாகும் மாமனும் மச்சானும் அந்த ஆயிரம் பொற்காசுகளை தங்களுக்குள் பங்கு போட நினைக்க ஒரு கட்டத்தில் புதையல் பற்றிய செய்தி ஒருவர் மூலம் மற்றவருக்கு பரவி ஒரு கட்டத்தில் எதிர் வீட்டு கோவிந்தன் மூலம் ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. இறுதியில் தொல்லியல் துறையின் வருகையால் என்ன ஆனது? புதையலை அடைய முற்படும் கிராம மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கும் சண்டையும், துரத்தலும் முடிவுக்கு வந்ததா? யாரிடம் இறுதியில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தது? என்பதை படத்தை பார்த்து கண்டு ரசிக்கலாம்.
மச்சான் தமிழ் நாதனாக விதார்த் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை கிராமத்து இளைஞனின் நக்கல் பேச்சு, சண்டை, பொற்காசுகளை எடுத்துக் கொண்டு காதலியோடு ஒட்டம் பிடிக்க நினைக்கும் நேரம், பின்னர் பங்கு பிரிக்க எடுக்கும் முயற்சி சிக்கலில் மாட்டிக் கொள்ள மாமன் சரவணனோடு எடுக்கும் முடிவுகள் என்று யதார்த்தமாக நடிப்பை வழங்கியுள்ளார்.
தாய்மாமன் ஆனைமுத்துவாக சரவணன் சோம்பேறித்தனத்தின் உச்சம், அதை சரியாக பிரதிபலித்து செய்யும் காரியங்கள், டிவி வால்யூமை அதிகமாக வைத்து அனைவரையும் அடிக்கும் அடி, புதையலை எடுத்துக் கொண்டு செல்வதும், அதன் பின்னர் ஒவ்வொருவராக இணைய வேறு வழியின்றி தவிர்க்க நினைத்து வம்பில் மாட்டிக்கொண்டு தவிப்பதும் என்று நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியுள்ளார்.
காதலி பூங்கோதையாக அருந்ததி நாயர் விதார்த்தை கடையில் ரகசியமாக சந்தித்து பழகுவதும், காதலனை நம்பி லெட்டர் எழுதி விட்டு இரவில் கோழி கூடைக்குள் ஒளிந்து கொள்வதும், காதலன் வராததால் மீண்டும் எதுவும் தெரியாதமாதிரி போய் வீட்டில் படுத்து கொள்வது என்று சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கிறார்.
எதிர் வீட்டு மீன் வியாபாரி கோவிந்தனாக ஹலோ கந்தசாமி வலுவான கதாபாத்திரம் இயல்பாக தடையின்றி பேச்சும், பண்ணும் அளப்பறை தான் படத்தின் ஹைலைட்ஸ். இவர் மூலம் தான் கதை விரிவடைந்து, இறுதி வரை போனை வைத்துக் கொண்டு அனைவரையும் விரட்டும் விதமும், சரவணன், விதார்த்தை பின் தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது, ஊரையே பங்குக்காக வந்து நிற்கும் வரையில் காமெடியிலும் நடிப்பிலும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
அரிச்சந்திரனாக ஜார்ஜ் மரியானாக பார்க்க தான் அப்பாவி மாதிரி தெரிந்தாலும் தன் முதிர்ச்சியான இயல்பான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
போலீஸ் அதிகாரி முத்து பாண்டியனாக பாரதி கண்ணன், பொன்ராம்மாக வெர்டிகல் ராஜா, ஆண்டவனாக பவன் ராஜ், பிடாரனாக ஜிந்தா, ஊர் தலைவராக கர்ண ராஜா, அறிவழகனாக ஜிந்தா கோபி , ஆராயியாக செம்மலர் அன்னம், தமிழ் நாதனின் அம்மா செந்தாமரையாக ரிந்து ரவி, பூங்கோதையின் அம்மா சரசுவாக தமிழ் செல்வி மற்றும் கிராமத்து மக்களின் பங்களிப்பு படத்தின் அசத்தலான காட்சிகளுக்கு துணை போகின்றனர்.
ஒளிப்பதிவு – பானு முருகன் படம் முழுவதும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரம், கிராமத்து வீடுகள், சண்டை சச்சரவுகள், துரத்தல்கள் என்று காட்சிக் கோணங்களின் அழகு சிறப்பு.
கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா ஆகியோரின் பாடல் வரிகளில் ஜோஹன் சிவனேஷ் இசை ரசிக்க வைக்கிறது.
எடிட்டிங் – ராம் மற்றும் சதீஷ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – ஃபையர் கார்த்திக், நடனம் – அசோக் ராஜா ஆகிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளனர்.
ஆயிரம் பொற்காசுகள் படத்தின் டைட்டிலுக்கேற்ப கிராமத்து நக்கல் நய்யாண்டி கலந்து நகைச்சுவை படமாக எழுதி இயக்கியிருக்கிறார் ரவி முருகையா. வேலை இல்லாத இருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடைப்பதால் அவர்கள் வாழ்க்கையும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது, எப்படி ஏமாற்ற வைக்கிறது என்பதை யதார்த்தமாக சித்தரித்து காட்சியமைப்பிலும், தேர்ந்த நடிகர்களாலும் பேசப்படும் திரைக்கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் ரவி முருகையா. புதையலின் பங்கு பிரிப்பை ரோடில் வாகனத்தில் அடுத்தடுத்து கையை பிடித்துக் கொண்டு செல்லும் ஒரே காட்சியில் அழகாக விவரித்துள்ளது ரசிக்க வைக்கிறது. அடுத்து அடுத்து இணையும் நபர்களுக்கு தெரிய வரும் போது பங்கு போடுவது விரிவடைந்து காட்சிகளின் தன்மை மாறுவதும், பேராசை பெருநஷ்டம் என்பதை அழகாக சொல்லியிருப்பதும், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் கடைசி இருபது நிமிடங்கள் யாருக்கு புதையல் கலசம் கிடைக்கிறது என்ற கலகலப்பை தக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது படத்திற்கு கூடுதல் பலம். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்திருக்கும் ஆயிரம் பொற்காசுகள் புதையலுக்கான ஆடு புலி ஆட்டம் மனம் மகிழும் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.