அரண்மனை -4 சினிமா விமர்சனம் : அரண்மனை 4 பட்டொளி வீசி ஜொலிக்கிறது | ரேட்டிங்: 4/5

0
767

அரண்மனை -4 சினிமா விமர்சனம் : அரண்மனை 4 பட்டொளி வீசி ஜொலிக்கிறது | ரேட்டிங்: 4/5

ஆவ்னி சினி மேக்ஸ் பி லிமிடெட்  சார்பில் குஷ்;பூ சுந்தர் மற்றும் பேன்ஸ் மீடியா பி லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்திருக்கும் அரண்மனை 4 படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

இதில் சுந்தர் .சி – சரவணன், தமன்னா – செல்வி, ராஷி கண்ணா – மாயா, சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர், கோவை சரளா – அத்தை, யோகி பாபு – மேஸ்திரி, டெல்லி கணேஷ் –  ஜமீன், கருடா ராம் – சுவாமி ஜீ, விடிவி கணேஷ் – கார்பெண்டர், ‘மொட்டை’ ராஜேந்திரன், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷீ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, தீரஜ் விஷ்ணு ரத்னம், எஸ்.நமோ நாராயணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :- இசை – ஹிப்ஹாப் தமிழா, திரைக்கதை வசனம் -வெங்கட்ராகவன், ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி,படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்,கலை இயக்குனர் – குருராஜ்,சண்டை பயிற்சி – ராஜசேகர்,நடனம் – பிருந்தா, பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், முத்தமிழ், மக்கள் தொடர்பு – சதீஷ் (ஏய்ம்)

வங்காளத்தில் பிரம்மபுத்ரா நதியில் தன் பூசாரி தந்தையுடன் படகில் செல்லும் ஒரு இளம் பெண் நிலத்திலும், நீரிலும் வாழும் பாக் என்ற தீய சக்தி ஆவியால் கொல்லப்பட அந்தப் பெண்ணின் தந்தை, மகள் உயிரை விடுவதற்குள் அந்த பாக் ஆவியின் சக்தியை ஒரு கலசத்தில் அடைத்து வைத்து, அந்த ஆவியை தனது மகளாக இருக்க வேண்டும் என்று கூறுவதிலிருந்து கதைக்களம் ஆரம்பிக்கிறது. அதன் பின் சரவணன் (சுந்தர்.சி) கதையை விவரிக்கிறது. சென்னையில வழக்கறிஞராக இருக்கும் சரவணன்  பாசமிகு தங்கை செல்வி (தமன்னா) மற்றும் தன் அத்தையுடன் (கோவை சரளா) வாழ்ந்து வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்டு தங்கை செல்வி (தமன்னா) கணவன் (சந்தோஷ் பிரதாப்) உடன் ஒரு அடர்ந்த காடுகளுக்கிடையே இருக்கும் அரண்மனை போன்ற பங்களாவில் தன் இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். சரவணன் தங்கை பிரிந்து சென்றாலும் அவர் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கையை பார்க்காமல் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே ஒருநாள் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, தன் அத்தையுடன் அனாதையான தங்கை குழந்தைகளை பார்க்க அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கே மேஸ்திரி (யோகி பாபு) மற்றும் கார்பெண்டர் (விடிவி கணேஷ்), டாக்டர் மாயா (ராஷி கண்ணா) மற்றும் அவரது தாத்தா ஜமீனும் (டெல்லி கணேஷ்) அந்த அரண்மனையில் இருக்கின்றனர். இருவரின் மரணத்தின் மர்மம் என்ன? குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை  இருப்பதை அறிந்து கொள்ளும் சரவணன், எவ்வாறு குழந்தைகளை அமானுஷ்ய சக்திகளிடமிருந்து காப்பாற்றினார்? பல தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? தீய சக்தியான பாக்கின் நோக்கம் என்ன? அது குழந்தைகளை ஏன் பழி வாங்க துடிக்கிறது? என்ற பல கேள்விகளுக்கு தன் படத்தின் மூலம் பதிலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

சரவணனாக சுந்தர்.சி  அசத்தலான சண்டைக் காட்சிகளிலும், உணர்ச்சிகள் நிறைந்த பாசப் போராட்டத்திலும், அமானுஷ்ய சக்தியை எதிர்த்து போராடும் இடங்களிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

செல்வி கதாபாத்திரத்தில் தமன்னா பாட்டியா காதல் கணவர் இறந்து விட்டதை அறிந்து அமானுஷ்ய சக்தியாக உருமாறியிருக்கும் கணவரிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற எடுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு காட்சிகள், ஒரு தாயின் பரிதவிப்பையும், போராட்டத்தையும் கண் முன்னே நிறுத்தி குழந்தைகளுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் தமன்னா பாட்டியா மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார். இறந்த பிறகும் குழந்தைகளை காப்பாற்ற எடுக்கும் அக்கறையும் முயற்சிகளும் தமன்னாவின் திறனுக்கு ஏற்ற படத்தை தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. தமன்னாவிற்கு இந்தப் படம் நல்ல திறமையான நடிகையாக வெளிப்படுத்தியுள்ளது. வெல்டன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், வி.ஜெயபிரகாஷ், ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், டெல்லி கணேஷ், கருடா ராம், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ்.நமோ நாராயணன் உட்பட அனைவரும் பயமுறுத்தும் களத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்து மிரட்டியுள்ளனர்.

இவர்களுடன் நகைச்சுவைக்காக கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷ{ ஆகியோர் சிரிக்க வைப்பதில் வெற்றி பெறுகின்றனர்.

படம் முடியும் போது தமன்னாவும், ராஷி கன்னாவும் இணைந்து பாடலுக்கு கவர்ச்சியான நடனமும்,   சிம்ரன் மற்றும் குஷ்பூவும் இணைந்து ஆடும் அம்மன் பாடல் நடனத்தில் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து கவர்ந்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி  இசை – ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி, படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர், கலை இயக்குனர் – குருராஜ், சண்டைப்பயிற்சி – ராஜசேகர், நடனம் – பிருந்தா, பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், முத்தமிழ் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சுவாரஸ்யம் கலந்த பயமுறுத்தலை நேர்த்தியுடன் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை இறுதிக் காட்சியில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் சண்டை காட்சிகளையும் கொடுத்து அசத்தியுள்ளனர்.

அண்ணன் தங்கை பாசம், காதல் ஜோடிகளின் வாழ்க்கை, பழி வாங்கும் தீய சக்தி பாக்,  பழங்கால அரண்மனை, அமானுஷ்ய சக்திகள், மர்ம மரணங்கள், பாசப் போராட்டங்கள், நகைச்சுவை கூட்டணி, மர்மங்களைக் கண்டுபிடிக்க களமிறங்கும் சுந்தர்.சி, இறுதியில் நல்ல அமானுஷ்ய சக்திக்கும் தீய அமானுஷ்ய சக்திக்குமான பிரம்மாண்ட இரண்டு சிலைகளுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள் பின்னர் வெடித்து சிதறும் தீய சக்தி சிலை என்று பார்த்து பார்த்து மெனக்கெட்டு அனைவரும் ரசிக்கும் வண்ணம் நேர்த்தியுடன் அரண்மனை 4 வெற்றி பெற எடுத்த கடுமையான முயற்சிகள், சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் அளப்பரிய பணி, படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டும் பிரம்மாண்ட விஷ{வல் எஃபெக்ட்ஸ், தேர்ந்த நட்சத்திர பட்டாளங்களுடன் கூட்டணி சேர்த்து வெற்றியுடன் இயக்கியுள்ள இயக்குனர் சுந்தர்.சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஆவ்னி சினி மேக்ஸ் பி லிமிடெட்  சார்பில் குஷ்;பூ சுந்தர் மற்றும் பேன்ஸ் மீடியா பி லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்திருக்கும் அரண்மனை 4 அனைவரும் ரசிக்கும் வண்ணம் குடும்ப சென்டிமெண்ட், திகில், த்ரில், சஸ்பென்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து ரசிக்க வைக்கும் பிரம்மாண்ட வர்ணஜாலத்தில் சுவாரஸ்யமான பயமுறுத்தும் திரைக்கதையுடன் அரண்மனை பட்டொளி வீசி ஜொலிக்கிறது.