அமரன் சினிமா விமர்சனம் : ‘அமரன்’ காலத்தால் அழியாத அழிக்கமுடியாத ராணுவ வீரரின் காதலும் வீரமும் தியாகமும் கலந்த உணர்ச்சிகள் மிகுந்த உன்னத காவியத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம் நன்றி கலந்த வீரவணக்கத்தை செலுத்தலாம் | ரேட்டிங்: 4/5

0
1097

அமரன் சினிமா விமர்சனம் : ‘அமரன்’ காலத்தால் அழியாத அழிக்கமுடியாத ராணுவ வீரரின் காதலும் வீரமும் தியாகமும் கலந்த உணர்ச்சிகள் மிகுந்த உன்னத காவியத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம் நன்றி கலந்த வீரவணக்கத்தை செலுத்தலாம் | ரேட்டிங்: 4/5

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அமரன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி

இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, கீதா கைலாசம், லல்லு,ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீPகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்,  ஒளிப்பதிவாளர்: சிஎச் சாய், படத்தொகுப்பாளர் : ஆர்.கலைவாணன், சண்டை – அன்பறிவு மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர், புரொடக்‌ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட், வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ், மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, எஸ்2 மீடியா சதீஷ்.

சென்னையில் இருந்து புது டெல்லிக்கு விமானத்தில் பயணிக்கும் இறந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து ரெபேகா வர்க்கீஸ் (சாய் பல்லவி) தங்கள் காதல் கதையையும் பின்னர் கணவரின் அர்ப்பணிப்பான ராணுவ பணியையும் வலிகளோடு தன் குரலால் விவரிக்கும் காட்சியும் பல்வேறு ஃப்ளாஷ்பேக்குகளுக்கு மாறும் துணிச்சலான ராணுவ வீரரின் கதையை காட்சிப்படுத்துவதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது.சிறு வயதில் முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமிக்கு செல்லும் வாய்ப்பால் ராணுவ பணியின் மேல் ஈர்ப்பு ஏற்பட, ராணுவ வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்.  பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடரும்போது, காதலி இந்து ரெபேக்கா வரக்;கீஸை (சாய் பல்லவி) சந்திக்கிறார்.மதம், மொழி கடந்த காதல் என்பதால் இந்துவின் பெற்றோர் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முகந்த் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் லெப்டினென்ட், கேப்டன் என்று பதவி ஏற்று பின்னர் பதவி உயர்வு பெற்று இந்திய இராணுவத்தில் சீட்டா 44 வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் மேஜராகிறார். அவர் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்கிறார். அந்த நடவடிக்கையில் கடுமையான காயங்களைச் சந்தித்த போதிலும், பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு முகுந்த் வெற்றிகரமான திட்டங்களை போட்டு பணியை தொடர்கிறார். இந்நிலையில், தாக்குதலில் இறந்த பயங்கரவாதியின் தம்பி  ராணுவத்தினரை வீழ்ந்த வியூகம் அமைக்கிறார். இதனை அறிந்த முகுந்த் தெற்கு காஷ்மீரில் ஒரு சிவிலியன் வீட்டில் மறைந்திருக்கும் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றி அறிந்து ஒரு குழுவை வழிநடத்தி சிப்பாய் விக்ரம் சிங்குடன் சேர்ந்து, பலத்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்து வெற்றிகரமாக வீட்டிற்குள் நுழைகின்றனர். இதில் ராணுவ சிப்பாய் விக்ரம் சிங் இறக்க இறுதி வரை சிவிலியன்களை காப்பாற்றி மேஜர் முகுந்த் தீவிரமாக சண்டையிட்டு தீவிரவாதி அல்டாஃப் வானியை சுட்டுக்கொள்ளும் போது காயம் ஏற்பட்டு வீர மரணம் அடைகிறார் என்பதே ‘அமரன்’ படத்தின் உணர்ச்சிகள் நிறைந்த கதை.

சிவகார்த்திகேயன் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனாக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். பெற்றோரின் மீது பாசம், காதல் மனைவியின் மீது அன்பு, மகளின் மேல் அக்கறை இவர்களையெல்லாம் விட ராணுவ வேலையின் மீது இருக்கும் பற்று மிக அதிகமாக இருக்க, அதற்காக பல இக்கட்டான ராணுவ தாக்குதல்களை செய்து, தீவிரவாதிகளை கொன்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்துள்ளார். இவரின் மூன்று விதமான காலகட்டங்களின் விவரிப்பில் தோன்றும் விதம், தைரியமிக்க மிடுக்கான ராணுவ வீரராக வலம் வரும் போதும் உணர்ச்சிகரமான வசன உச்சரிப்பிலும் மெய்சிலிர்க்கும் விதத்தில் மிரட்டலான நடிப்பு அசுரராக வலம் வருகிறார். குடும்பத்தினர் மீது காட்டும் பாசமும், சக ராணுவ வீரர்களிடம் காட்டும் பரிவும், தனக்கு வரும் புகழை சக ராணுவ வீரருக்கு சிபாரிசு செய்யும் பாங்கு என்று ஒவ்வொரு காட்சியிலும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை எண்ணங்களையும் பிரதிபலித்திருக்கும் விதம் இவரின்; உழைப்பிற்கு பல விருதுகள் காத்திருக்கின்றன.

சாய் பல்லவி காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸாக கணவரிடம் காட்டும் காதல், பெற்றோர்களிடம் காட்டும் எதிர்ப்பு, ஒவ்வொரு காட்சியிலும் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, கணவரின் பணியை கண்டு பெருமைப்படுவதும், கெஞ்சி கொஞ்சி பேசும் அழகு, அடக்கமுடியாமல் பிரிவை தாங்க முடியாமல் அழும் காட்சிகளிலும், கணவரை பிரிந்து வாழும் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், இறுதிக் காட்சியில் அழவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் கண்ணீரை சிந்தி தவிக்கும் இடங்களில் தத்ரூபமான நடிப்பு இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு மெனக்கெட்டு நடிக்க முடியாத வண்ணம் சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களுடன் புவன் அரோரா, ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, கீதா கைலாசம், லல்லு,ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் ஆகியோரின் உன்னத பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. முக்கியமாக தாயாக வரும் கீதா கைலாசம் குறிப்பிட்ட காட்சிகளில் கவனிக்க வைத்துள்ளார்.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் வெகுஜன காட்சிகளை கிளர்ச்சியூட்டும் இசையுடன் கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், கடுமையான தருணங்களில் அமைதியை திறமையாக பயன்படுத்தியிருப்பதும், பாடல்களிலும் மிளிர்கிறார்.

படத்தொகுப்பாளர் : ஆர்.கலைவாணன் கலை இயக்குனர் சேகர் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் தரத்தை மேலும் தாங்கி பிடித்துள்ளது.

ஷெர்ஷாவில் சில முன்மாதிரியான வேலைகளைச் செய்த ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிக்டர்  மாஸ்டர்கள் அன்பறிவுடன் சேர்ந்து சண்டைகள் வடிவமைக்கப்பட்ட விதம் அற்புதம்.

அறிமுக ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், சண்டை காட்சிகளின் அவசரத்தையும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களையும், சாதாரண மக்களின் இயலாமையையும், காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள், அத்தகைய பணிகளின் போது வெளிச்சமின்மையையுடன் படமாக்கப்பட்ட விதமும், முகுந்த் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அழகாகவும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் படம்பிடித்துள்ளார். இந்தக் காட்சிகளில் பலவற்றில், எதிரியை வீழ்த்தும் தோட்டாவை யார் சுடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் அனைவருக்கும் சமபங்களிப்புடன் காட்சிகளை நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’  என்ற புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, குடும்ப வாழ்க்கை, அவரின் ராணுவ பங்களிப்பை மனைவியின் பார்வையில் சொல்லும் விதமாக உணர்ச்சிகரமான தருணங்களை பிரதிபலித்து இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்திய ராணுவத்தில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, தன்னுடைய 31வது வயதில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உயிர் தியாகத்திற்காக வீர மரணத்திற்காக அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அத்தகைய தைரியமிக்க ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முகுந்த் தனது சக வீரர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார், பயங்கரவாத அமைப்பின் வியூகங்களை முகுந்த் எவ்வாறு புரிந்துகொள்கிறார் அவரது துணிச்சலைக் காட்ட ஒரு அதிரடி தாக்குதல், எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் சக்தி சினிமாவுக்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் காட்சிகள், ராணுவ வீரரின் துணிச்சல் மிகுந்த பணி, உயிரை விட தாய் நாட்டை காப்பதே பெரியது என்று எண்ணும் ராணுவத்தினரின் செயல்பாடுகளை பற்றி புரிந்து கொள்ளும் விதத்தில் திறமையாக விறுவிறுப்போடு இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி . ஒரு ராணுவ வீரர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதே வேளையில், இந்தத் திரைப்படம் முதன்மையாக குடும்ப உறுப்பினர்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை இராணுவத்திற்கு அனுப்பிய பிறகு அவர்கள் அனுபவிக்கும் வேதனையான விஷயங்களையும், நிதி நெருக்கடிகளையும் புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் காட்சியமைப்பு படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சுவாரஸ்யம் நிறைந்த திரைக்கதை, தேர்ந்த நடிப்பு,  அற்புதமான தொழில்நுட்ப திறமைகளை ஒருங்கிணைத்து  மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து பத்து வருடங்கள் கழித்து ஒரு உன்னதமான படைப்பை கொடுத்து மரியாதை செலுத்தியதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அமரன் காலத்தால் அழியாத அழிக்கமுடியாத ராணுவ வீரரின் காதலும் வீரமும் தியாகமும் கலந்த உணர்ச்சிகள் மிகுந்த உன்னத காவியத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம் நன்றி கலந்த வீரவணக்கத்தை செலுத்தலாம்.