அந்த நாள் விமர்சனம் : அந்த நாள் திருப்பங்கள் நிறைந்த சிலிர்க்க வைக்கும் திகில் தருணங்கள் | ரேட்டிங்: 3/5
கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர். ரகுநந்தன் தயாரித்திருக்கும் அந்த நாள் படத்தின் கதை, திரைக்கதையை ஆர்யன் ஷியாமுடன் எழுதி இயக்கியிருக்கிறார் விவி கதிரேசன்.
இதில் ஆர்யன் ஷ்யாம், ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர்: ஆர்.ஸ்ரீPகாந்த், இசை – என்.எஸ்.ராபர்ட் சற்குணம், ஒளிப்பதிவாளர் – சதீஷ் கதிர்வேல், எடிட்டர் – ஜே.எஃப் காஸ்ட்ரோ, தலைமை தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: பி. ஜெய் கணேஷ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஹரிபிரசாத் ராஜகோபால், மக்கள் தொடர்பு- பெரு துளசி பழனிவேல்.
பிரபல திரைப்பட இயக்குனரான ஸ்ரீ (ஆர்யன் ஷ்யாம்) ஒரு பெரிய தயாரிப்பாளரின் கீழ் திகில் படம் இயக்க, கதை விவாதத்திற்காக தன் சக உதவி இயக்குனர்கள் சாம், மேக்னா, கௌதம், மார்க் (ஆத்யா, லீமா, ராஜ்குமார், கிஷோர்) மற்றும் சமையல்காரர் கந்தாவுடன்( இமான் அண்ணாச்சி) ஊருக்கு வெளியே இருக்கும் தனிமையான பஞ்சமி பங்களாவிற்கு போகின்றனர். அங்கே கதை விவாதத்தில் மாய யாகினி என்ற அழிவு சக்தியான கடவுளைப்பற்றியும், கால எமன் அவனுடைய பிள்ளைகள் பற்றியும் ஸ்ரீ விவரிக்கிறார். அதன் பின் அவர்கள் கதைக்கு தேவையான தகவல்களை பெற ஒஜோ போர்ட் மூலம் ஆவிகளுடன் பேச முற்படுகின்றனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த வீட்டில் நடந்த அழிவை சந்தித்த எட்டு பேர் கொண்ட குடும்பத்தின் குழப்பமான காட்சிகளை கேமராவில் ஸ்ரீ மற்றும் குழுவினர் காண்கின்றனர். அதனால் கலக்கமடையும் ஸ்ரீ தன் உதவியாளர்களுடன் அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றாலும் வினோதமான நிகழ்வுகள் நடந்து, தப்பிக்கும் பாதைகள் மறைந்துவிட, முகமூடி அணிந்த கொலையாளிகளால் அவர்கள் துரத்தப்படுகிறார்கள். இறுதியில் ஸ்ரீ மற்றும் அவரது குழுவினர் யாரால் துரத்தப்படுகின்றனர்? அந்த வீட்டில் நடந்த அமானுஷ்யங்கள் என்ன? கேமராவில் பார்த்த குடும்பத்தின் கதி என்ன? இவர்களை துரத்தும் முகமூடி யார்? எதற்காக? அவர்களின் நோக்கம் என்ன? அல்லது பிளாக் மேஜிக்கா? என்பதே சஸ்பென்ஸ் நிறைந்த ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தின் க்ளைமேக்ஸ்.
புகழ்பெற்ற ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்யன் ஷ்யாம் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே திகில் கதையில் தன்னம்பிக்கையுடன், அழுத்தமான கதாபாத்திரத்தில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி இரண்டு வித குணாதிசயங்களை வௌ;வேறு முகபாவனையுடன் பிரதிபலித்து தேர்ந்த நடிகர் போல் பிரகாசிக்கிறார். சிக்கலான கதையை தன் நடிப்பால் சமநிலையுடன் எடுத்துச் செல்கிறார்.இந்த படத்திற்கு பின் தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகராக வலம் வர முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
இவருடன் சேர்ந்து ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகிய துணை கதாபாத்திரங்கள் தங்களால் இயன்றதைச் செய்து பயமுறுத்தலுக்கு உத்திரவாதம் தருகின்றனர்.
என்.எஸ்.ராபர்ட் சற்குணம்; பின்னணி இசையின் மூலம் பார்ப்பவர்களுக்கு திகில் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். படத்தில் பாடல்கள் இல்லை.
ஒரே நாள் இரவு நடக்கும் கதையில் தனிமையான பங்களாவை சுற்றியே காட்சிகளையமைத்து சூன்யம், நரபலி என்று அதிர்ச்சியூட்டும் காட்சிகளை கொடுத்திருப்பதில் பெரிய உழைப்புடன் பங்காற்றியிருக்கிறார் சதீஷ் கதிர்வேல்.
எடிட்டர் ஜே.எஃப் காஸ்ட்ரோ பல்வேறு காலகட்டங்களில் விவரிக்கப்படும் கதைக்களத்தை இன்னும் விவரமாக கொடுத்திருக்கலாம். ஒருவேளை சென்சாரில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
கதை, திரைக்கதையை ஆர்யன் ஷியாமுடன் எழுதி இயக்கியிருக்கிறார் விவி கதிரேசன். பண்டைய காலங்களிலிருந்து இன்று வரை, மனிதர்கள் எப்போதும் அமானுஷ்யத்தில் ஆர்வமாக உள்ளனர். அதைப்பற்றிய விவரிப்பும், மாய யாகினி தீய சக்திகளின் கடவுள் பற்றியும், கால எமன் அவனின் மூன்று மகன்களைப் பற்றியும் கதையில் விளக்கி அமானுஷ்யம் என்பது பேய்களால் கட்டுப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுக்க போதுமான தகவல்களை வழங்கி பலகீனமானவர்களிடம் கட்டுப்பாட்டை செலுத்துவது பற்றிய கதைக்களத்துடன் படத்தில் வரைகலை விவரிப்புடன் பல தகவல்களை தந்து இயக்கியுள்ளார் இயக்குனர் விவி கதிரேசன்.நரபலி, மாந்திரீகம், கண்கட்டி வித்தைகள், மந்திரம், ஓய்ஜா பலகைகள், டாரட் கார்டுகள், ஆவியுலகத் தொடர்பு, சாத்தானியம் ஆகியவை அமானுஷ்ய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.இது அறியாமை அல்லது படிக்காதவர்களுக்கு மட்டும் அல்ல. தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் இந்த யுகத்தில் கூட, அமானுஷ்யம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.இதை கருத்தில் கொண்டு தான் நரபலியை மையமாக வைத்து திகில் மற்றும் சஸ்பென்ஸைக் கலந்து, எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் விவி கதிரேசன். முதலில் விவரமாக செல்லும் கதைக்களம் காட்சிகள் நகர நகர குழப்பமான முன்னுக்கு பின் முரணான காட்சிகள் குழப்பத்துடன் பயணித்து இறுதியில் திருப்பத்துடன் அவசரமாக முடித்திருப்பதை இன்னும் தெளிவாக காட்சிபடுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர். ரகுநந்தன் தயாரித்திருக்கும் அந்த நாள் திருப்பங்கள் நிறைந்த சிலிர்க்க வைக்கும் திகில் தருணங்கள்.