அநீதி திரைப்பட விமர்சனம் : அநீதி எளியவர்களின் வலியை விவரிப்பதில் தடுமாறி தடம் மாறுகிறது | ரேட்டிங்: 3/5

0
568

அநீதி திரைப்பட விமர்சனம் : அநீதி எளியவர்களின் வலியை விவரிப்பதில் தடுமாறி தடம் மாறுகிறது | ரேட்டிங்: 3/5

அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், இவர்களுடன் ஜி.வசந்தபாலன சேர்ந்து தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் அநீதி.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

இதில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் , டி.சிவா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு-எட்வின் சாகே, வசனம்-எஸ்.கே.ஜீவா, எடிட்டர்-ரவிக்குமார்.எம், கலை-சுரேஷ் கல்லேரி, லைன் புரொடியூசர்-நாகராஜ் ராக்கப்பன், தயாரிப்பு நிர்வாகி-ஜெ. பிரபாகர், பிஆர்ஒ- நிகில் முருகன்.

மீல்மங்கி என்ற நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை செய்கிறார் திருமேனி (அர்ஜூன் தாஸ்). இவருக்கு சிறு வயதிலிருந்தே தந்தையின் இறப்புக்கு பிறகு ஒசிடி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு, சாக்லேட் மற்றும் தன்னை திட்டுபவர்களை கண்டால் கொலை செய்யும் எண்ணம் மேலோங்குகிறது. இதற்காக மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இதனிடையே உணவு டெலிவரி செய்ய செல்லும் பணக்கார வீட்டில் வேலை செய்யும் சுப்புலட்சுமி (துஷாரா விஜயன்) நட்பு கிடைக்கிறது. பின்னர் நாளடைவில் காதலாக மாற திருமேனிக்கும் மகிழ்ச்சியால் மனமாற்றம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் முதலாளியம்மா மங்கையர்கரசி(சாந்தா தனஞ்செயன்) சுப்புவை அடிமை போல் நடத்தி துன்புறுத்துகிறார். தன் குடும்ப சூழல் காரணமாக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு சுப்பு வேலை செய்கிறார். ஒரு நாள் பணக்கார வீட்டு முதலாளியம்மா சுப்புவின் காதலை தெரிந்து கண்டிக்கிறார். இந்நிலையில் அன்றிரவே எதிர்பாராத விதமாக மர்மமாக முதலாளியம்மா இறந்து விட, வெளிநாட்டில் இருக்கும் மகன் அஜி(அர்ஜூன் சிதம்பரம்), மகள் அனிதா (வனிதா விஜயகுமார்) ஆகியோர் வரும் வரை தனியார் மார்ச்சுவரியில் இறந்தவரை பத்திரமாக வைக்கின்றனர். இதற்கான பணத்தை முதலாளியம்மாவின் ஏடிஎம் வங்கி கணக்கிலிருந்து எடுத்து கட்டுகின்றனர். இதனிடையே வீட்டிற்கு செல்லும் சுப்புவிடமிருந்து அந்த ஏடிஎம் கார்ட்டை அவருடைய தம்பி திருடிச் சென்று விடுகிறான். இதனால் அதிர்ச்சியாகும் சுப்பு, திருவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கிறார். இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் முதலாளியம்மாவின் மகன் மற்றும் மகள் தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கொதிப்படைகின்றனர்.காவல் நிலையத்தில் திரு மற்றும் சுப்பு மீது புகார் கொடுக்க, தீவர விசாரணை நடைபெற, அடி, உதை தாங்க முடியாமல் திரு செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். இவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் அழைத்து செல்லும் போது தான் உண்மையான காரணம் தெரிகிறது. அதன் பின் போலீஸ் இவர்களை விடுவிக்கிறது. அதன் பின் திரு மற்றும் சுப்பு என்ன ஆனார்கள்? திருவின் கோபத்தால் அங்கே என்ன நடந்தது? முதலாளியம்மா குடும்பத்தை திரு என்ன செய்தார்? என்பதே படத்தின் பதைபதைக்கும் க்ளைமேக்ஸ்.

வில்லனாக களமிறங்கி தன் வசீகரகாந்த குரலால் திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் தாஸ், இந்த படத்தில் கதாநாயகன் திருமேனியாக உயர்ந்து தன் நடிப்பாற்றலால் கதிகலங்க வைத்துள்ளார். மனநோய் பாதிப்பால் தவிக்கும் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்வார், எப்படி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ச்சிகள் மேலிட முகத்தில் காண்பிக்கும் விதத்தில் அசத்தியுள்ளார். காதல் வயப்பட்டபிறகு ஏற்படும் மாற்றம், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் நன்றாக இருந்தும் மனநோயே அவருக்கு எதிரியாக மாறுவதும், அதன் பிறகு காவல் நிலையத்தில் அடி வாங்கி துடிக்கும் இடங்களில் நிறைவாக செய்துள்ளார். நண்பன், காதலி, பணக்கார குடும்பத்தினரின் துஷ்பிரயோகம், பணி இடத்தில் முதலாளித்துவ அதிகாரத்தை கண்டு பொங்கியெழுந்து எடுக்கும் ஆக்ரோஷமான முடிவு தந்தையின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தின் இறுதி காட்சியில் கண் கலங்க வைத்து விடுகிறார். இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸின் இன்னொரு பரிணாம வளர்ச்சியை பார்த்து ரசிக்கலாம்.

சுப்புலட்சுமியாக துஷாரா விஜயன் ஒவ்வொரு காட்சியிலும் தன் கை தேர்ந்த நடிப்பால் தனித்துவமாக தெரியும் அளவிற்கு தன் முழு பங்களிப்பை கொடுத்து இன்பத்திலும் துன்பத்திலும் மெய்சிலிர்க்கும் வண்ணம் நடித்துள்ளார். தன் குடும்பத்தைப் போலவே சிக்கல் ஏற்படும் போது சுயநலமாக யோசிக்கும் காதலியாக வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்பாவியாக நெல்லை தமிழில் படபடவென பேசி தன் மகனை பாசமுடன் நடத்தும் தந்தையாக காளி வெங்கட், வெளிநாட்டு மகளாக வந்து தாயின் இறப்பை தாங்க முடியாமல் கோவப்பட்டு ஆணவத்துடன் நடிப்பால் அசர வைத்துள்ள வனிதா விஜயகுமார், நண்பராக ஒரு சில காட்சிகளில் பரணி, வெளிநாட்டு மகனாக மிரட்டல், உருட்டல் என்று அதகளம் பண்ணியுள்ள அர்ஜூன் சிதம்பரம், யதார்த்த நடிப்பில் சுரேஷ் சக்கரவர்த்தி, அறை நண்பராக எரிந்து விழும் ஷா ரா, வில்லத்தனமாக தோன்றினாலும், பிள்ளைகளில் அரவணைப்பு இறுதியில் கிடைக்காத தாயின் மனோநிலையை பிரதிபலிக்கும் சாந்தா தனஞ்ஜெயன் , டி.சிவா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் படத்தின் முக்கிய வேடங்களில் சிறப்பித்துள்ளனர்.

இசை-ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது

ஒளிப்பதிவு-எட்வின் சாகே, வசனம்-எஸ்.கே.ஜீவா, எடிட்டர்-ரவிக்குமார்.எம், கலை-சுரேஷ் கல்லேரி ஆகியோர் படத்திற்கேற்ற உழைப்பை கொடுத்து தனித்துவத்தை பிரதிபலிக்கின்றனர்.

சைக்கோ த்ரில்லர் திரைக்கதையை உணவு விநியோகம் செய்யும் இளைஞர்களின் வலியையும், அவர்கள் படும் அவமானங்களையும், பணக்காரர்களின் அநீதியை பற்றியும் உடன் காதலியின் சுயநலத்தையும் கலந்து  சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான வசந்தபாலன். முதலில் ரத்தக்களத்துடன் ஆரம்பிக்கும் கதைக்களத்தில் கதாநாயகன் கொலை செய்வது போல் கனவுகாண்கிறார் என்று நினைத்திருக்கும் வேளையில் பின்னர் திசைமாறி மனநோய், காதல் என்று பயணித்து கதைக்குள் இன்னொரு கிளைக்கதையாக இறப்பு, விசாரணை என்று தடம்மாறி இறுதியில் கொலையில் முடிகிறது. ஒரு சிக்கலை தீர்த்து வைக்க பல சிக்கல்களில் கதாநாயகன் மாட்டிக் கொள்வதையும், அதிலிருந்து தப்புவதற்கு கொலை செய்தாலும், பின்னர் எதிர்படும் நண்பன், முதலாளி என்று பழி தீர்க்க ரத்தம் தெறிக்க பயணம் செய்வதை இன்னும் திறம்பட கையாண்டு கொடுத்திருக்கலாம். அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாராவின் நடிப்பு மட்டுமே படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

மொத்தத்தில் அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், இவர்களுடன் ஜி.வசந்தபாலன் சேர்ந்து தயாரித்து எழுதி இயக்கியிருக்கும்  அநீதி எளியவர்களின் வலியை விவரிப்பதில் தடுமாறி தடம் மாறுகிறது.