வேட்டை நாய் விமர்சனம்
சுரபி பிக்சர்ஸ் வழங்கும் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் ராம்கி, ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணா மற்றும் பலர் நடித்திருக்கும் வேட்டை நாய் படத்தை எஸ்.ஜெய்சங்கர் இயக்கியிருக்கிறார்.
கொடைக்கானலில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் பல அடியாட்களுடன் கட்ட பஞ்சாயத்து செய்பவர் தாதா ராம்கி. குறிப்பறிந்து காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்.கே.சுரேஷ் கில்லாடி என்பதால் ராம்கி ஸ்பெஷலாக கவனித்து கொள்வார். ஆர்.கே.சுரேஷ் உறவுக்காரப் பெண்ணான சுபிக்ஷாவை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் சுபிக்ஷா, சுரேஷின் வேலையை அறிந்து தாதா ராம்கியிடம் வேலை செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போட கேரள தொழிலதிபர் கீழ் வேலையில் சுரேஷ் சேர்கிறார். தொழில் பகை காரணமாக முஸ்லிம் சமூகத்தினரும், தொழில் நண்பர்களான இருவரும் இணைந்து சுரேஷை போட்டுத்தள்ள பல முயற்சிகள் செய்கின்றனர்.வேலையில் சிறப்பாக பணியாற்றும் சுரேஷ் சில சங்கடங்களால் அந்த வேலையை விட்டு மீண்டும் தாதா ராம்கியிடம் வேலை கேட்டு செல்கிறார். அவரை ராம்கி சேர்த்துக்கொண்டாரா? பகையால் பழி வாங்க துடிப்பவர்களின் பிடியிலிருந்து தப்பித்தாரா? என்பதே கதையின் முடிவு.
முருக்கேறிய உடற்கட்டு, முறுக்கு மீசை என்று நடை, உடை, பாவனையில் அடியாள் வேடத்துக்கு ஆர்.கே.சுரேஷ் கனகச்சிதமாக பொருந்துகிறார். எதிரிகளை பந்தாடும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில், காதலியின் அழகில் மயங்கி பின் மனைவியாக்கிக்கொள்ளும் காட்சிகள், நெகிழ்ச்சியான தருணங்களில் உருக வைக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
தாதா வேடத்தில் வில்லன் ராம்கியின் கெத்து, ரசிக்கவும் மிரட்டவும் வைக்கிறது. சுபிக்ஷாவின் முக்கிய பங்களிப்பு படத்தில் உள்ளதால் தேர்ச்சியான நடிப்புக்கு கூடுதல் மார்க் கொடுக்கலாம். அத்தை ரமாவாகவும், குடிகார மாமா நமோ நாராயணன் ஆகியோரின் இயல்பான நடிப்பை பாராட்டலாம்.
முனிஷ் ஈஸ்வரனின் கிராமத்து அழகை எழில் கொஞ்சும் காட்சிக் கோணங்களின் ஒளிப்பதிவில், கணேஷ் சந்திரசேகரன் இசையில் படம் கவனத்தை ஈர்க்கிறது.
கதை,வசனம், இயக்கம் எஸ்.ஜெய்சங்கர். ஏற்கனவே பல படங்களில் வந்த கதைக்களம் என்பதால் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் கதையை நகர்த்தி வேறு கோணத்தில் படம் பயணிப்பதால் கொஞ்சல் ஆறுதல் அடையலாம். முரட்டு ரௌடி கதையில் சாதிச்சண்டை, காதல், செண்டிமெண்ட் கலந்து கூட்டுக்கலவையாக கொடுத்து அடிதடி ஆக்ஷன் காட்சிகளுடன் யதார்த்தமாக இயக்கியுள்ளார் எஸ்.ஜெய்சங்கர்.
மொத்தத்தில் வேட்டை நாய் காவலுக்கு ஏற்றது.