தேன் சினிமா விமர்சனம்

0
1855

தேன் சினிமா விமர்சனம்

ட்ரீடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.பி.புரொடக்ஷன்ஸ் அம்பலவானன்-பிரேமா தயாரிப்பில் கணேஷ்; விநாயகன் இயக்கியிருக்கும் படம் தேன்.
இதில் தருண்குமார், அபர்ணதி, அனுஸ்ரீ, பாவா லட்சுமணன், அருள்தாஸ், கயல் தேவராஜ் ஆகியோர் நடிப்பில்   வந்துள்ள படம் தேன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-சுகுமார், இசை-சனத் பரத்பாஜ், எடிட்டிங்-லாரன்ஸ் கிஷோர், சண்டை-ஆக்ஷன் நூர், வசனம்-ராசி தங்கதுரை, பாடல்கள்- ஞானவேல், ஸ்டாலின், கலை-மாயபாண்டி, பிஆர்ஒ – நிகில்முருகன்.
குறிஞ்சுக்குடி கிராமத்தில் மலைத்தேன் எடுக்கும் தொழில்செய்கிறார் வேலு. பக்கத்து மலைக்கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடியின் தந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட குறிஞ்சித்தேன் கொடுத்தால் சரியாகிவிடும் என்று வைத்தியர் சொல்ல, வேலுவிடம் தேனை கொடுத்து உதவிட சொல்கிறார்.இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட வேலு பூங்கொடியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கிறார். தந்தை சம்மததித்தாலும் ஊர் வழக்கப்படி செய்யும் சம்பிராதாயத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்காமல் போக பூங்கொடி வீட்டை விட்டு ஒடி வந்து வேலுவை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகிறார். இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையில் இடையூறாக பூங்கொடி வயிற்றுவலியால் அவதிப்படுகிறார். இதனால் நகரத்தில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு வேலு பூங்கொடியை அழைத்துச் செல்கிறார். அங்கே மருத்துவச் செலவிற்க்காக அல்லல்படும் வேலு காப்பீடு அட்டை, ஆதார் அட்டை என்று அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு, லஞ்சமே பிரதானமாக இருப்பதால் பல சிரமங்களைக் கடந்து ஆதாரங்களை பெறுகிறார். இறுதியில் அந்த ஆதாரங்கள் மனைவியின் உயிரை காப்பாற்றியதா? மனைவியின் உடல்நலக்குறைவிற்கு என்ன காரணம்? வேலுவுக்கு நேர்ந்த அவல நிலை என்ன? என்பதே யதார்த்தமான மனதை பிழியும் சோகமான க்ளைமேக்ஸ்.

மலைக்கிராமத்து இளைஞர் வேலுவாக தருண்குமார் தேன் எடுக்கும் நேர்த்தி, மற்றவர்களுக்கு உதவும் பண்பு, தன்னை நம்பி வந்த காதலியை மனைவியாக கைப்பிடித்து உயிராக பார்த்துக்கொள்வது, மலைக்கிராமத்தை நேசிக்கும் வாழ்க்கை, வாய் பேச முடியாத மகளின் மீது பாசம், மனைவியை காப்பாற்ற பரிதவிக்கும் இடங்கள், இறுதியில் கையில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து கொண்டு மலைக்குச் செல்லும் சோகம், ஆதரவற்ற தனக்கு ஆதாரங்கள் எதற்கு என்று முடிவெடுக்கும் விதம் என்று படம் முழுக்க வேலுவாக வாழ்ந்திருக்கிறார் தருண்குமார். வெல்டன்.
அபர்ணதி மலைகிராமத்துப் பெண் பூங்கொடியாக படத்தில் நேர்த்தியான, அமைதியான, குறும்பான நடிப்பு மட்டுமல்ல துன்பத்திலும், சோகத்திலும் தன் நடிப்பால் மணம் வீசுகிறார், மனதை பதைபதைக்க வைக்கிறார்.
குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீக்கு கூடுதல் பாராட்டு.பாவா லட்சுமணன் இந்த படத்தில் தான் நறுக்கென்று வசனங்களை அரசாங்கத்திற்கு எதிராக பேசி காரியத்தை எப்படி சாதிக்க வேண்டும் என்பதை வெடுக்கென்று புரிய வைத்து மனதில் பதிந்து விடுகிறார்.அருள்தாஸ் சமூக சேவை என்ற பெயரில் அரசியல் செய்வது ரசிக்க வைக்கிறது.
பத்திரிகையாளர் தேவராஜ் பூங்கொடியின் அப்பாவாக ஒரு சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்துள்;ளார்.
சுகுமாரின் ஒளிப்பதி;வு மலைக்கிராமத்தின் அருவி, எழில் அழகை அள்ளிக் கொடுத்து இன்னும் மெருகேற வைத்து காட்சிக் கோணங்களில் பிரமிக்க வைத்து விட்டார்.
சனத் பரத்பாஜின் இசையும், பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டமான காட்சிகளுக்கு மேலும் வலு சேர்கிறது.
லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கனக்கச்சிதம்.ராசி தங்கதுரையின் வசனங்கள் படத்தின் காட்சிகளுக்கு ப்ளஸ்.
இயக்கம்- கணேஷ்; விநாயகன். நட்சித்திர நடிகர்கள் இல்லாமல் கதைக்களத்துக்கேற்ற நடிகர்களை தேர்வு செய்திருக்கும் விதம் படத்திற்கு ஸ்பெஷல். கார்ப்பரெட் கம்பெனிகள் மலைப்பிரதேசங்களை ஆக்ரமித்து தொழிற்சாலைகளை கட்ட மலைக்கிராமத்து மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளை பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தின் திரைக்கதை அதையொட்டி இருந்தாலும், இந்த கம்பெனிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தண்ணீர் மாசுப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளாகும் சாதாரண இளைஞனின் வாழ்க்கை சின்னாபின்னமாவதை அழுத்தமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயகன். முதல் பாதி மலைக்கிராமத்திலும், இரண்டாம் பாதி கீழே நகரத்தில் அரசாங்க மருத்துமனையில் பயணிக்கிறது.அப்பாவி நாயகன் அரசாங்க நலத்திட்டங்களை பெற எடுக்கும் முயற்சிகள், சிரமங்கள் அதனால் ஏற்படும் அவமானங்கள், அலட்சியங்கள்,தலை விரித்தாடும் லஞ்ச லாவன்யங்கள், அரசியல் சூழ்ச்சிகள், இத்தனை கஷ்டங்களையும் தாண்டி வந்தாலும் உயிரே போய் விட்ட பிறகு விரக்தியில் பணம் இல்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும் அவலம், உடலை சுமந்து கொண்டு மலையெறும் கொடுமை என்று க்ளைமேக்ஸ் காட்சி மனதை விட்டு அகலாத வண்ணம் தத்ரூபமாக பதிவு செய்து துணிச்சலாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் கணேஷ் விநாயகன். இப்படத்தில் இருப்பது போல் இக்கால கொரோனா சூழ்நிலையில் பணம் இல்லாமல் உடலை சுமந்து செல்லும் காட்சிகளை காண நேர்ந்திருக்கிறது என்பது உண்மை. இப்படம் குறைகளை விட நிறைகள் பலமாக இருப்பதால் நிச்சயம் பல விருதுகளை பெறும் என்பது திண்ணம்.
மாசில்லாத தேன் மாசு கலந்தால் தேளாக கொட்டும் அனைவருக்கும் இது படமல்ல கற்பிக்கும் பாடம்.