திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி பாதியாக குறைப்பு! முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரைப்படத்துறையினர்!!

0
377

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி பாதியாக குறைப்பு! முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரைப்படத்துறையினர்!!

திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கத்திற்கு தேடி வந்த காலம் மலையேறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு 200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 4 பேர் கொண்ட குடும்பத்தினர் திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம் ஆயிரம் ரூபாயும், ஸ்நாக்ஸ் விலை 500 ரூபாயும், பார்க்கிங் கட்டணம் 100 ரூபாய் வரையும் வசூலிக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தை பார்க்க 2000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஓடிடியில் படங்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.

இதனால் திரையரங்கில் மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்  மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைப்படத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கேளிக்கை வரி மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை (Local Body Entertainment Tax -LBET) 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு திரைப்படத்துறையினர், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி

இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக, தலைவர் என். ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக, தலைவர் திரு.என். ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சார்பில் தமிழ் திரைப்பட தரப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்ளூர் சேவை வரி சம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற FICCI Media & Entertainment Retail விழாவில் கலந்து கொண்ட உலகநாயகன் திரு. கமலஹாசன் அவர்களும், மாண்புமிகு. துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் உள்ளூர் சேவை வரி (Localbody Tax) குறித்து கோரிக்கை வைத்தார். அதற்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாண்புமிகு. துணை முதலமைச்சர் உறுதி அளித்தார்.

மேற்படி கோரிக்கைகளை தாயுள்ளத்துடன் பரிசீலனை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சினிமாவை வாழவைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி ஏற்கனவே இருந்த 8 சதவிகித வரியை தற்போது 4 சதவிகிதமாக குறைத்து அரசாணையை பிறப்பித்துள்ளார்.

மேலும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணாயால் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாக நம்பிக்கை வளர்த்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதார மேம்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அரசாணை பிறப்பித்துள்ளது தயாரிப்பாளர்களிடம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது.

மேற்படி அரசாணை பிறப்பிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் திரை உலகின் சார்பாக குரல் கொடுத்த உலகநாயகன் திரு. கமலஹாசன் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.