தமிழ் சினிமாவில் ஜாலியான –  காமெடியான – ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேண்டும் – STR ஓப்பன் டாக்!

0
266

நான் முதலில் சினிமா ரசிகன் – ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன் – STR ஓப்பன் டாக்!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ”இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் – சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் ‘மன்மதன்’ பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும்.  சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.  இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.
இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.
சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.
‘எஸ் டி ஆர் 49’ இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. சீரியஸான திரைப்படங்கள் நிறைய வருகிறது. பெரிய நட்சத்திரங்கள் ஆக்ஷன் படங்களில் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஜாலியான, காமெடியான, ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேண்டும். அண்மையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்தேன், நன்றாக இருந்தது. அந்தக் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான திரைப்படங்களும் வரவேண்டும். அந்த விஷயத்தில் நாம் அனைவரும் சந்தானத்தை தவற விடுகிறோம். அவர் ஹீரோவாக நடிப்பதுடன் நான் அல்லது ஆர்யா போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்தும் நடிக்க வேண்டும். தமிழ் ரசிகர்களுக்காக அவர் இப்படி நடிக்க வேண்டும் என இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு ஆரம்பமாக ‘எஸ் டி ஆர் 49’ இருக்கும்.  அந்த வகையில் இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்க்கலாம்.

மே 16ம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.