தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நடிக்கவே தெரியாது – கஜானா இசை வெளியீட்டு விழாவில் வேலு பிரபாகரன் சர்ச்சை பேச்சு!
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கே.எம்.ரியாஷ் படத்தொகுப்பு செய்ய, சீனிவாசன் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கபிலன் அம்ற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘கஜானா’ வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் மதிழயகண், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்று பேசிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், “பெரியவர்களே, தாய்மார்களே, தயாரிப்பாளர் சொந்தங்களே, தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களே, கஜானா படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வரவேற்று, விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் செண்ட்ராயன் பேசுகையில், “கஜானா ஒரு பிரமாண்டமான திரைப்படம். சாம் அண்ணன், படம் பெருசாக வந்திருக்கிறது, சிறப்பாக வந்திருக்கிறது, என்று சொல்வார். இன்று படத்தின் டிரைலரை பார்க்கும் போது அவர் சொன்னது அனைத்தும் உண்மை என்பது புரிகிறது. சினிமாவில் முதல் முறையாக இந்த படத்தில் யாளி விலங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் நான் சண்டைப்போடும் காட்சியும் படத்தில் உண்டு. படம் மிக சூப்பராக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகம் பிடிக்கும். படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் இருக்கிறது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சாருக்கு நன்றி. மே 9 ஆம் தேதி வெளியாகிறது, குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பாருங்கள், நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசுகையில், “இப்படி ஒரு மித்தலாஜிக்கல் கான்சப்ட்டை, ஃபேண்டஸியோடு எனக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் சாம் பிரதருக்கு நன்றி. நீங்க அதிகமாக பேச மாட்டீங்க, ஆனால் உங்களை பற்றியும், உங்க படம் பற்றியும் நிறைய பேசுவார்கள். கஜானா படம் கிரிப்பிங்காகவும், எண்டர்டெயினராகவும் இருக்கும். இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இது சாதாரண விசயம் இல்லை, கிராபிக்ஸ் பணி செய்தவர்களுக்கு பாராட்டு. இனிகோ சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தினி, வேதிகா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் வாழ்த்துகள். படம் நிச்சயம் வெற்றி பெறும், நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விக்னேஷ் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநரை பாராட்ட வேண்டும், காரணம் அவர் இயக்குநர் மட்டும் அல்ல தயாரிப்பாளர். நான் இரண்டு படங்கள் தயாரித்திருப்பதால், அதன் வலி எனக்கு தெரியும். இது மிக கஷ்ட்டமான விசயம். சினிமாவில் நான் 30 வருடங்களாக இருக்கிறேன். எங்கு சென்றாலும், எந்த தொழில் செய்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் போடுவேன். படம் தயாரிப்பது சுலபம், ஆனால் வெளியிடுவது மிக மிக கடினமாகி விட்டது. படத்தின் டிரைலர், பாடல்களை பார்த்தோம், சிறப்பாக இருக்கிறது. திரில்லிங்காகவும், இண்டர்ஸ்டிங்காகவும் இருக்கிறது. இந்த படத்தை பத்திரிகையாளர்கள் தான் மக்களிடம் சேர்க்க வேண்டும்.
இன்று தமிழ் சினிமாவில் 10 ஹீரோக்கள் மட்டும் தான் இருப்பார்கள், அவர்கள் 100 கோடி, 200 கோடி என்று சம்பவளம் வாங்குகிறார்கள். ஆனால், சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோ, இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்களை நமக்கு தெரியாது, தெரிந்தது எல்லாம் 10 பேரை தான். எனவே ரசிகர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நீங்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டும், தனிப்பட்ட மனிதரின் ரசிகராக இருக்க கூடாது. புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதைகளையும் ரசிக்கும் சினிமா ரசிகர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும். கேரளாவில் சிறு சிறு விசயங்களை வைத்துக் கொண்டு அதை அழகாக சொல்லி வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நான்கு பாடல், மூன்று சண்டைக்காட்சிகள் என்று இன்னமும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக தான் எடுக்க வேண்டி இருக்கிறது. எனவே, ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும், புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல படங்கள் வரும். எனவே, சின்ன படங்களுக்கு, நல்ல படங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. இந்த ‘கஜானா’ படத்தின் மூலம் படக்குழுவின் கஜானா நிரம்ப வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “கஜானா மிக அழகான தலைப்பு, ரொம்ப பாசிட்டிவான தலைப்பு. இசையமைப்பாளர் அச்சுவின் பணி சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சாம் அதிகம் பேச மாட்டார். இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு ரொம்ப சாதாரணமாக இருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்தேன், மிக சிறப்பாக இருக்கிறது. படம் எடுப்பது கஷ்ட்டம் இல்லை, ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதில் தான் பாதி உயிர் போய்ட்டு வந்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெளியிடும் திருமலைக்கு வாழ்த்துகள், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். படம் நன்றாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் நடிகர் வேலு பிரபாகரன் பேசுகையில், “இந்த படத்தில் சிறு வேடம் ஒன்றில் நான் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இயக்குநர் சாம் என்னுடைய 20 ஆண்டுகால நண்பர். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும், சினிமாவை நேசிக்கின்ற ஒரு மனிதர். திரைப்படத்தை பொறுத்தவரை உலக சினிமா மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. கேமரா உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் பல முன்னேற்றங்களை உலக நாடுகள் சினிமாத்துறையில் அடைந்திருக்கிறது. இவ்வளவு வளர்ச்சிகள் சினிமாவில் வந்திருந்தாலும், அதில் நம் பங்கு இல்லை என்பது வெட்கமான விசயம். பிற நாடுகளில் கண்டுபிடிப்பதை காப்பியடித்து தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதில் நாம் எதையும் செய்யவில்லை. பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்திருக்கும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் இருக்கிறோம். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுபோன்ற விசயங்களில் தலையிட வேண்டும். ஆனால், அவர்களது வேலை பஞ்சாயத்து செய்வதாக மட்டுமே இருக்கிறது. அப்படி இல்லாமல், தயாரிப்பாளர்கள் எவ்வளவு நஷ்ட்டம் அடைந்திருக்கிறார்கள், படங்கள் ஏன் தோல்வி அடைகிறது, உள்ளிட்ட விசயங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசிக்க வேண்டும், ஆனால் அதற்கான நபர்கள் இங்கு இல்லை. கட்ட பஞ்சாயத்து பண்றதும், யார் தலைவராக வர வேண்டும் என்பதும் தான் இருக்கிறது. நம்ம ஊரில் இருக்கும் நடிகர்களுக்கு நடிக்கவே தெரியாது. கதாநாயகர்களுக்கே நடிக்க தெரியவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்த கட்டமைப்பு கூட இன்று இல்லை.
எனக்கு ஃபேண்டஸி படங்கள் மிகவும் பிடிக்கும். நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் பார்க்காத பல விசயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நாம் இதுவரை கற்பனையில் மட்டுமே பார்த்த விலங்குகளை இந்த படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்த சாம் முயற்சித்திருக்கிறார். படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும், சாம் அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களை எடுப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகை சாந்தினி பேசுகையில், “இந்த வருடம் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். கஜானா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போது சொல்ல முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. பிரமாண்டமான ஃபேண்டஸி படமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் அச்சு சிறப்பான இசையமை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவர் தமிழில் நிறைய படங்கள் பண்ணுவார். வேதிகாவின் நடனத்திற்கு நான் ரசிகை. இந்த வருடம் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கும். பெரியவர்களுக்கும் படம் பிடிக்கும். தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.” என்றார்.
படத்தை வெளியிடும் டி கிரியேஷன்ஸ் திருமலை பேசுகையில், “சினிமாவில் நாம் இருப்பதே கடவுள் கொடுத்த வரம். வெற்றி, தோல்வியை கடந்து எந்த நேரமும் சினிமாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம். இந்த படத்தின் இணை இயக்குநர் விகாஷ், 24 மணி நேரமும் கஜானா படத்தை பற்றி மட்டும் தான் யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த 4 வருடங்களாக இந்த படத்திற்காக கடுமையான உழைத்திருக்கிறார். இந்த படம் செதுக்கப்படும் போதெல்லாம், நான் வி.எஃப்.எக்ஸ் செய்பவர்கள் மீது கோபமடைவேன். ஏன் இவ்வளவு காலம் ஆகிறது, என்று கேட்டால், அவர் இல்ல சார் போய்ட்டு இருக்கு, என்று அமைதியாக பதில் சொல்வார். பிறகு படத்தை பார்த்த போது தான், ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது என்று தெரிந்தது. இப்படி ஒரு பணியை யாராலும் செய்ய முடியாது. அவ்வளவு மிருகங்கள் படத்தில் இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் சாரிடம் இருந்தால், இவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கிடைத்திருக்கும். ஆனால், நாங்கள் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு சிறப்பான கிராபிக்ஸ் பணியை கொடுத்திருக்கிறார்கள். நான் படம் பார்த்ததால் சொல்கிறேன், இந்த படத்தில் இருக்கும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் வேறு எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. இதற்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் இங்கு மட்டும் நடக்கவில்லை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சாம், சினிமாவில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும், என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போது அவர் உலக சினிமாவை கொடுத்திருக்கிறார். அவர் சொன்னபடி நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் வரும் விலங்குகளில் ஒன்றை கூட நீங்கள் பல கோடி செலவு செய்தாலும் பண்ண முடியாது, அந்த அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக குரங்கு சண்டைக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது, அதுபோன்ற ஒரு காட்சியை யாராலும் யோசிக்க கூட முடியாது. அந்த அளவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அந்த காட்சியை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இந்த படத்தோட பாடல்கள் பார்த்திருப்பீர்கள், இதில் வரும் சிவன் பாடல் கண்டிப்பாக வேண்டும் என்று சொன்னேன். படத்தின் பின்னணி இசை மிக சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டத்திற்கு இசையும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
இந்த படம் சிறிய படம் இல்லை, மிகப்பெரிய படம். இதில், வேதிகாவின் காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் லட்டு போல் இருக்கும். சாந்தினியின் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் நரேன் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இந்த படம் சாதாரண படமாக தோன்றும், ஆனால் இது சாதாரண படம் இல்லை. ஒரு படம் ஹிட்டானது என்றால், 50 லட்சம் கொடு, 1 ஒரு கோடி கொடு என்பார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் இனிகோ மிக கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் அந்த சண்டைக்காட்சியை முன்னணி ஹீரோக்களை வைத்து எடுத்தால், 25 நாட்களில் கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்கு கடினமான விசயம் அது. அதை இனிகோ மிக சிறப்பாக செய்திருக்கிறார். இவரை போன்றவரை தான் ஹீரோவாக உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட நடிகர்களை வைத்துக் கொண்டு ஹீரோ இல்லை, என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த படம் மிகப்பெரிய படம். விநியோகஸ்தர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நீங்கள் எதை எல்லாம் பெரிய படம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த படங்கள் வெளியான பிறகு சிறிய படமாகி விடும். ஆனால், சாதாரண படமாக பார்க்கும் பல படங்கள் பெரிய படமாகியிருக்கிறது. அப்படி ஒரு படம் தான் ‘கஜானா’. இந்த படம் வெளியான பிறகு நிச்சயம் பெரிய படமாகும். இயக்குநர் சாம் வெறித்தனமான இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதில், நடித்த அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எனவே, இந்த படத்தில் பெரிய நடிகர்களை நடிக்க வைத்தால், 150 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும், அந்த அளவுக்கு மிக கடுமையான காட்சிகளில் பணியாற்றியிருக்கிறார்கள். இது நிச்சயம் மிகப்பெரிய படமாக அமையும். இப்படி ஒரு படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. இந்த படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் பணி செய்திருக்கும் ஜெய் போன்ற ஆட்களை வைத்துக் கொண்டு இன்னொரு பாகுபலி கூட எடுக்கலாம். இப்படிப்பட்டவர்கள் நம்ம தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள், என்பதை கஜானா வெளிக்காட்டும். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா அடுத்தக் கட்டத்திற்கு செல்ல உங்கள் வாழ்த்துகள் தேவை, என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
படத்தின் நாயகன் இனிகோ பேசுகையில், “டிவியில் அட்வெஞ்சர் ஷோ ஒன்று பண்ணியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்த படத்தின் இயக்குநர் சாம் அதிகம் பேச மாட்டார், ஆனால் படத்தில் நிறைய பேசியிருக்கிறார். மிகப்பெரிய முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். நடிகை வேதிகா இந்த படத்தில் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். சாந்தினி நடித்திருக்கும் வேடத்தில், அவரை தவிர யாராலும் நடித்திருக்க முடியாது, அந்த அளவுக்கு செய்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அச்சு சார் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் படம் பார்க்கும் போது அவர் பெரிய இடம் என்பது புரிந்தது. அந்த அளவுக்கு பின்னணி இசையை பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார். நான் எந்த படத்தை பற்றியும் இவ்வளவு பேசியது இல்லை, இந்த படம் குறித்து பேசுகிறேன் என்றால், அந்த அளவுக்கு படம் வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் படம் ஓடிக்கிட்டே இருக்கும், படத்தில் விலங்குகள் அதிகம் வருவதால் இது குழந்தைகளுக்கான படமாக மட்டும் இருக்காது, பெரியவர்களுக்கும் பிடிக்கும், அவர்களுக்கு ஏற்ற அட்வெஞ்சர் காட்சிகள் இருக்கிறது. மக்கள் இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் இது பற்றிக்கொள்ளும். அதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக கஜானா அமையும், நன்றி.” என்றார்.
நடிகை வேதிகா பேசுகையில், “கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் சாரை பாராட்டுகிறேன், இப்படி ஒரு தைரியமான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் பியாண்ட் பேசுகையில், “இசையமைப்பாளர் அஞ்சு மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் சாம் இருவருக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் ரசிகர்களுக்கு புதிதான அனுபவமாக இருக்கும். சாந்தினி, வேதிகா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும், நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினர் நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “கஜானா படத்தை நான் பார்த்துவிட்டேன், மிக தரமான படம். புலி முருகன் படத்தில் புலியுடன் மோகன்லால் சண்டைப்போடுவதை பார்த்தோம், ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் புலியுடன் சண்டைப்போடுவதை பார்த்திருப்போம், அப்படிப்பட்ட பல காட்சிகள் இந்த படத்தில் இருக்கிறது. டிரைலரை பார்த்து நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதுபோல் படமும் உங்களை மகிழ்விக்கும். இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் சாம் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த படம் நிச்சயம் அவருக்கு கைகொடுக்கும். ஏனோ தானோ என்று எடுக்காமல், பல ஆய்வுகளை செய்து, சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தை எடுத்திருக்கிறார். மே 9 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் நிச்சயம் பேசப்படும். படத்தை வெளியிடும் திருமலை சாருக்கும் என் வாழ்த்துகள்.
இந்த படத்தின் இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. வேதிகா, சாந்தினி என் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வேதிகா நன்றாக நடனம் ஆடுவார் என்பது தெரியும், ஆனால் அவர் சிறந்த பாடகி. என் தானே தலைவன் எஸ்.டி.ஆர் உடன் அவர் நடித்த போதே நான் அவரது ரசிகராகி விட்டேன். எஸ்.டி.ஆர் நடித்தது தக் லைஃப், கஜானா படத்திற்கு குட் லைப். இனி இந்த வார்த்தையை சொல்லி தான் உங்களை காண்டேத்தே போகிறேன். கஜானா சிறப்பாக வந்திருக்கிறது, அனைவரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
பிரமாண்டமான மற்றும் தரமான வி.எஃப்.எக்ஸ் பணிகளுடன் உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான சில மணி நேரங்களில் ஏராளமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுட்த்தியுள்ளது.
வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கஜானா’ திரைப்படம் வெளியாகிறது.