தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப்!
தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான “துப்பாக்கி” படத்தில், வில்லனுடன் வரும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு, இன்னும் பல வாய்ப்புகளை வாங்கித் தந்தது. வித்தைக்காரன் படத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக கலக்கியவர், தற்போது ரெட்ரோ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள சீயான் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நட்சத்திரங்களான தளபதி விஜய், சீயான் விக்ரம், சூர்யாவுடன் நடித்தது குறித்து கூறுகையில்…
துப்பாக்கி என் முதல் படம் என்பதால், எனக்கு நிறைய தயக்கம் இருந்தது ஆனால் விஜய் மிக ஆதரவாக, பொறுமையாக சொல்லித்தந்து எங்களைப் பார்த்துக்கொண்டார். அவருடன் ஆக்சன் காட்சிகளில் இணைந்து நடித்தேன், அவரே ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் கலக்குவார், எல்லா சின்ன நடிகர்களிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார். அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. சீயான் விக்ரம் ஒரு பிறவி நடிகர், எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். சீயானின் துருவ நட்சத்திரம் படத்தில் என் கதாப்பாத்திரத்தை கண்டிப்பாக எல்லோரும் பாராட்டுவார்கள், மிக முக்கியமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். சூர்யாவுடன் 18 நாட்கள் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்தேன், சில காரணங்களால் படத்தில் சில காட்சிகள் வரவில்லை. ஆனால் சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாது. அவர் மிகக் கடுமையான உழைப்பாளி. தமிழ் என் சொந்த நிலம் போல் ஆகிவிட்டது. இங்கு இருக்கும்போது தான் நான் மிக சுதந்திரமாக உணர்கிறேன். இப்போது நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் எனக்கென ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
வில்லன் குணச்சித்திரம் என கதப்பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்திப் போகும் ஆஷிஃப் அடுத்தடுத்து, தமிழின் முன்னணி இயக்குநர் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கவுள்ளார். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.